ETV Bharat / state

சிஆர்பிஎப் தேர்வு: தமிழ் உள்ளிட்ட மற்ற மாநில மொழிகளிலும் நடத்த நடவடிக்கை - முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை

author img

By

Published : Apr 9, 2023, 4:33 PM IST

Stalin letter
முதலமைச்சர் கடிதம்

சிஆர்பிஎப் தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், "மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் மத்திய பின்னிருப்புக் காவல் படையில் (CRPF) 9 ஆயிரத்து 212 காவலர்கள் ஆள் சேர்க்கைக்கான அறிவிப்பு தொடர்பாகத் தங்களது கவனத்தைக் கோருகிறேன். நமது அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கும் போதிலும், மேற்கூறிய ஆட்சேர்க்கைக்கான கணினித் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது தமிழ்நாட்டின் ஒவ்வொரு இளைஞரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சிஆர்பிஎப் வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி, மொத்தமுள்ள 9 ஆயிரத்து 212 காலிப் பணியிடங்களில் 579 பணியிடங்கள் தமிழ்நாட்டில் நிரப்பப்படவுள்ளன. தமிழ்நாட்டில் 12 மையங்களில் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இருந்து இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்போர் சொந்த மாநிலத்திலேயே தங்கள் தாய்மொழியில் தேர்வினை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த அறிவிக்கையின் மற்றொரு மறைமுக அம்சமாக, மொத்தமுள்ள 100 மதிப்பெண்களில் 25 மதிபெண்கள் இந்தி மொழியில் அடிப்படைப் புரிதலுக்கெனக் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் இத்தேர்வு இந்தி மொழி பேசுவோருக்கே மிகவும் சாதகமானதாக அமைந்துள்ளது.

சுருங்கச் சொன்னால், மத்திய பின்னிருப்புக் காவல் படையின் இந்த அறிவிக்கை, தமிழ்நாட்டில் இருந்து விண்ணப்பிப்போரின் நலனுக்கு முற்றிலும் எதிரானதாக உள்ளது. இது தன்னிச்சையானது மட்டுமல்லாமல் பாகுபாடு காட்டக்கூடியதும் ஆகும். விருப்பு வெறுப்பின்றி இந்த அறிவிக்கையை நோக்குகையில், இது தமிழ்நாட்டில் இருந்து விண்ணப்பிப்போருக்கு எதிரான பாகுபாட்டுடனும், அவர்கள், நாட்டின் துணை ராணுவப் படையில் பணியாற்றும் வாய்ப்பைப் பறிக்கும் நோக்குடனும் அமைக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.

ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே கணினித் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பானது இத்தேர்வை எழுத விரும்பும் இளைஞர்களுக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமையைப் பாதிப்பதாகவும், அரசுப் பணித் தேர்வில் சம வாய்ப்பை மறுப்பதாகவும் இருக்கிறது.

எனவே, தாங்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, இந்தி பேசாத மாநில இளைஞர்களும் சிஆர்பிஎப்-ல் பணியாற்ற சம வாய்ப்பு பெறும் வகையில் தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளிலும் இக்கணினித் தேர்வை நடத்துவதற்கு ஏதுவாக அறிவிக்கையில் மாற்றங்களைச் செய்ய மத்தியப் பின்னிருப்புக் காவல்படை அதிகாரிகளை அறிவுறுத்த வேண்டும்'' என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: அதிமுக மாஜி எம்.பி மைத்ரேயன் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.