ETV Bharat / state

அதிமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் - இந்திய தணிக்கை துறை!

author img

By

Published : Apr 21, 2023, 11:02 PM IST

Etv Bharat
Etv Bharat

இந்திய தணிக்கை துறை 2021ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை ஆய்வு நடத்தியதில் அதிமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.

இந்திய தணிக்கை துறை

சென்னை: இந்திய தணிக்கை துறை 2021ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை ஆய்வு நடத்தியதில் அதிமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில், இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், இந்திய தணிக்கை துறையின் முதன்மை கணக்கு தணிக்கையாளர்கள் சி. நெடுஞ்சழியன் மற்றும் கே.பி. ஆனந்த் கலந்து கொண்டு பேசினர்.

அப்போது அவர்கள் கூறுகையில், “அதிமுகவின் இந்த அறிக்கையில் ரூ.396.30 கோடி மதிப்புள்ள வரி, வட்டி மற்றும் தண்டத்தொகை விதிக்காமல் இருந்தது அல்லது குறைவாக விதிக்கப்பட்டது என எட்டு குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. மேலும், பெரும்பாலான திட்டங்கள் நிதி ஒதுக்கியும் நிறைவேற்றாமல் போனது.

வரவு - செலவு திட்ட மேலாண்மை: 2021-22 ஆண்டில், சட்டப்பேரவை அனுமதித்த மூல ஒதுக்கீட்டையே முழுமையாக செய்ய இயலாத நிலையில், 59 நேர்வுகளில் ஒவ்வொன்றிலும் தலா ரூ 50 லட்சத்திற்கும் கூடுதலாக மொத்தம் ரூ 242.64 கோடி மீண்டும் துணை மானியமாக கோரிப் பெற்றது தேவையற்று போனது.

கணக்குகள் மற்றும் நிதி நிலை அறிக்கை நடைமுறைகளின் தரம்: 2018-22 கால கட்டத்தில் வசூலிக்கப்பட்ட மின்சாரம் மீதான வரியில், 70 விழுக்காடு அரசுக் கணக்குகளில் வரவு வைக்கப்படவில்லை. வசூலிக்கப்பட்ட வரியை தமிழ்நாடு மின்சாரத் துறை தன்வசமே வைத்துக்கொண்டது. தணிக்கையாளர்கள் சில திட்டங்களை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தவில்லை.

குறிப்பாக பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடி மக்களுக்கு 60 விழுக்காடு வீடுகளை தமிழ்நாடு அரசு கட்ட இயலவில்லை. இது மத்திய அரசு நிர்ணயித்த நிபந்தனைகளை நிறைவேற்றததால் மத்திய அரசின் ரூ. 1,515.60 கோடி நிதி உதவியை உரிய நேரத்தில் தமிழ்நாடு அரசால் பெற முடியவில்லை.

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வி நிறுவனங்களின் செயல்பாடு குறித்த அறிக்கையில், தணிக்கைக்காக தெரிவு செய்யப்பட்ட 108 அரசு பள்ளிகளுள், 48 விழுக்காடு வகுப்பறை பற்றாக்குறை இருந்தது. அந்த 48 பள்ளிகளில் வகுப்பறைகளின் மொத்த பற்றாக்குறை 227 ஆகும்.

இதனால், திறந்த வெளியில், மரங்களின் நிழலில், ஆய்வுக் கட்டிடங்களில் அல்லது தற்காலிக வகுப்பறைகளில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும் கழிப்பறைகள், விளையாட்டு மைதானங்கள், ஆய்வகங்கள், சுற்றுச் சுவர் போன்ற வசதிகளும் அரசுப் பள்ளிகளில் போதுமானதாக இல்லை” என சுட்டிக்காட்டினர்.

தொடர்ந்து அவர்கள், பதிவுத்துறையில் ஸ்டார் 2.0 பயன்பாட்டின் திட்டமிடல் மற்றும் செயல்படுத்துதல் தொடர்பாக பேசினர். "பதிவுத்துறை அடையாள அட்டைகளை சரிபார்ப்பதற்கான இடைமுகத்தை உருவாக்கவில்லை. இது பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் சர்ச்சைக்குரியதாக இல்லை என்பதை உறுதி செய்வதற்கான முதன்மையான அம்சமாகும் மற்றும் ஆள்மாறாட்டம் மூலம் ஆவணங்களை மோசடியான பதிவுகளுக்கு துறையை வெளிப்படுத்தியது" என்றனர்.

வருவாய் பற்றாக்குறையை பற்றி பேசுகையில், “வருவாய் பற்றாக்குறை 2021-21ஆம் ஆண்டில் ரூ. 62,326 கோடி என்ற நிலையிலிருந்து 2021-22ஆம் ஆண்டில் ரூ. 46,538 கொடியாக குறைந்துள்ளது என கூறிய அவர்கள் வரும் நிதியாண்டில் அரசு பல முயற்சிகள் எடுத்து வருவாய் பற்றாக்குறையை இன்னும் குறைக்கலாம்” என்றனர்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் (152) பிரிவின் கீழ் இன்று தணிக்கைத் துறையின் எட்டு தணிக்கை அறிக்கைகள் சட்டப்பேரவையில் ஒப்படைக்கப்பட்டன.

இதையும் படிங்க: ''தனி கட்சியா?''.. ஆதரவாளரின் கேள்விக்கு ஓபிஎஸ் பதில்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.