ETV Bharat / state

குப்பைகளை கால்வாய்களில் கொட்டாதீர்கள்.. மாநகராட்சி ஆணையர் கோரிக்கை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 21, 2023, 7:49 PM IST

Etv Bharat
Etv Bharat

சென்னை மாநகராட்சி கொசு ஒழிப்பு நடவடிக்கையாக குப்பைகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் உள்ள கால்வாய்களில் குப்பைகளை கொட்ட வேண்டாம் என பொதுமக்களுக்கு மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்து உள்ளார்.

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி தொடர்ந்து திடக்கழிவு மேலாண்மையில், தனிக் கவனம் செலுத்தி வருகிறது. வருங்காலத்தை கருத்தில் கொண்டு, திடக்கழிவு மேலாண்மைய சிறந்த முறையில் செய்து வருவதாக பெருநகர சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திடக்கழிவு மேலாண்மையில், தனி கவனம் செலுத்தி வருகிறோம் - மாநகராட்சி ஆணையர்

பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், பட்டினப்பாக்கம் முகத்துவாரம் பகுதியில் பொதுமக்களால் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் மற்றும் அடர்ந்திருந்த புதர்செடிகள் ஆகியவற்றை தீவிர தூய்மைப் பணியின் கீழ், அப்புறப்படுத்தி, அவ்விடத்தை தூய்மைப்படுத்தும் பணியை இன்று (அக். 21) தொடங்கி வைத்த ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தாமே துய்மைப் பணியை மேற்கொண்டார்.

தொடர்ந்து, அடையாறு மண்டலம், பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் கொட்டப்பட்டிருந்த கட்டிடக்கழிவுகளை பாப்காட் இயந்திரம் மூலம் அகற்றும் பணியினையும் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஆணையாளர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். தமிழ்நாட்டில் பருவமழையினை முன்னிட்டு மாநகராட்சியின் சார்பில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள், தீவிர தூய்மைப் பணி ஆகியவை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இருப்பினும், பொதுமக்களும் இந்தப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள காலிமனைகளில் குப்பைகளைக் கொட்டாமலும், தங்கள் பகுதிகளைச் சுற்றியுள்ள இடங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளவும் வேண்டும் என அறிவுறுத்தினர்.

இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் கூறுகையில், "பெருநகர சென்னை மாநகராட்சி தொடர்ந்து திடக்கழிவு மேலாண்மையில், தனி கவனம் செலுத்தி வருகிறது. அண்மையில் தான் நாங்கள் பட்டினப்பாக்கம் வீட்டுவசதி வாரியத்தின் காலி மைதானத்தை சுத்தம் செய்தோம். தொடர்ந்து டெங்கு ஒழிப்பு பணிகளும் நடைபெற்று வருகிறது.

ஒரு நாளைக்கு 6,000 டன் குப்பைகளை அகற்றிக் கொண்டிருக்கிறோம். மேலும், பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் மொத்தம் 95 லட்சம் டன் குப்பைகள் இருக்கின்றன. மேலும் சென்னையில் உள்ள ஆறுகளையும் சுத்தம் செய்யும் பணியானது நடைபெற்று வருகிறது. மேலும், சென்னையில் இரண்டு வகையான குப்பைகள் உள்ளன.

ஒன்று நீரோட்டத்தில் கொட்டும் குப்பை, மற்றொன்று கடலில் சேர்ந்து மீண்டும் கரைக்கு வரும் குப்பைகள். மழைக்காலத்தில், யாரும் குப்பைகளை நீர்வழித்தடத்திலும், கால்வாய்களிலும் கொட்ட வேண்டாம். நீர்வழித்தடங்களின் முகதுவாரத்தை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன" என்று ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தொடர் விடுமுறை: மெட்ரோ ரயில்களில் அலைமோதிய கூட்டம்! 2 நாளில் 7 லட்சம் பேர் பயணம்! இதுதான் அதிகபட்சமாம்!!!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.