COVID-19 vaccine: இனி வாரத்தில் 2 முறை கரோனா தடுப்பூசி முகாம்

author img

By

Published : Nov 17, 2021, 10:30 AM IST

இனி வாரத்தில் 2 முறை கரோனா தடுப்பூசி முகாம்

இனிவரும் காலங்களில் வாரத்தில் இரண்டு நாள்கள் கரோனா தடுப்பூசி (COVID-19 vaccine) சிறப்பு முகாம் நடத்தப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சென்னை: பொதுமக்களின் நலன்கருதி மாநிலம் முழுவதும் கரோனா தடுப்பூசி (COVID-19 vaccine) செலுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஊக்கப்படுத்திவருகிறது.

இதன் காரணமாகத் தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி பெறத் தகுதியான நபர்களில் 73 விழுக்காட்டினருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் தவணை தடுப்பூசி 35 விழுக்காட்டினர் தகுதிவாய்ந்த நபர்களுக்குச் செலுத்தப்பட்டுள்ளது.

'கரோனா தடுப்பூசி மருந்தே, கரோனா பெரும் தொற்றிற்கு எதிரான முதன்மைக் கேடயம்' என்பதைக் கருத்திற்கொண்டு தகுதிவாய்ந்த அனைத்து பொதுமக்களுக்கும் தடுப்பூசி அவரவர் வசிக்கும் பகுதிகளிலேயே எளிதில் கிடைத்திடும் வகையில் வாரம்தோறும் ஒரு நாள் சிறப்புத் தடுப்பூசி முகாம்கள் தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டது.

மேலும், இதர நாள்களிலும் மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவ நிலையங்களிலும் கரோனா தடுப்பூசிகள் (COVID-19 vaccine) செலுத்தப்பட்டுவருகின்றன.

தகுதிவாய்ந்த பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி விரைவில் கிடைத்திடும் வகையில் வாரம்தோறும் ஒரு சிறப்புத் தடுப்பூசி முகாமிற்குப் பதிலாக, வாரம்தோறும் இரண்டு சிறப்புத் தடுப்பூசி முகாம்கள் நடத்த அரசு உத்தேசித்துள்ளது. தகுதிவாய்ந்த அனைத்து மக்களுக்கும் தடுப்பூசியை விரைவில் வழங்கிடும் நோக்கில் இதுவரை கரோனா தடுப்பூசி போடாத மக்களின் பட்டியல் தெருவாரியாகவும், வார்டுவாரியாகவும் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி வாரியாகவும் தயாரிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இனி வாரத்தில் 2 முறை கரோனா தடுப்பூசி முகாம்
இனி வாரத்தில் இரண்டு முறை கரோனா தடுப்பூசி (COVID-19 vaccine) முகாம்

திங்கட்கிழமை தவிர இதர நாள்களில்

மேலும், சிறப்புத் தடுப்பூசி தற்காலிக முகாம்கள், மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு, பொது இடங்களிலும், அனைத்து அரசு மருத்துவ நிலையங்களிலும் வியாழக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாள்களிலும் சிறப்பு முகாம்கள் தனியார் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் ஆகியோரையும், அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைந்து மாவட்ட நிர்வாகத்தால் செயல்படுத்தப்படும். திங்கட்கிழமை தவிர இதர நாள்களில் அரசு மருத்துவ நிலையங்களில் தடுப்பூசி தொடர்ந்து செலுத்தப்படும்.

இந்தச் சிறப்பு முகாம்கள் குறித்து, ஆட்டோ மூலமாகவும் உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உரிய வழிகாட்டி நெறிமுறைகள் வழங்கிடத் தலைமைச் செயலர் மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று (நவ. 17) காணொலி வாயிலாக நடத்தும் கூட்டத்திற்கும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

எனவே, அரசுத் துறைகள், தனியார் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயல்படவும், கரோனா தடுப்பூசி (COVID-19 vaccine) தகுதியான அனைத்து மக்களுக்கும் கிடைத்திடும் வகையில், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: பதவி உயர்வு பெறும் ஆசிரியர்களுக்கு செக் - விரைவில் புதிய விதிமுறைகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.