ETV Bharat / state

கேள்வி எழுப்பிய வானதி - செக் வைத்த சபாநாயகர் - சட்டப்பேரவையில் கலகலப்பு

author img

By

Published : Apr 27, 2022, 9:53 AM IST

அகில இந்திய அளவில் தலைவராக இருக்கும் வானதி சீனிவாசன் இந்திய அளவில் பேசுகிறார். ஆனால் மானிய கோரிக்கை தொடர்பாக பேசவில்லையே என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். சட்டப்பேரவையில் இருவருக்கும் இடையே நடைபெற்ற உரையாடலை விரிவாக பார்க்கலாம்.

conversation between speaker appavu and Vanathi Srinivasan in assembly வானதி சீனிவாசனுக்கு தொடர்ந்து செக் வைத்து, இறுதியில் செக் மேட் வைத்த சபாநாயகர் அப்பாவு*
conversation between speaker appavu and Vanathi Srinivasan in assembly வானதி சீனிவாசனுக்கு தொடர்ந்து செக் வைத்து, இறுதியில் செக் மேட் வைத்த சபாநாயகர் அப்பாவு*

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று (ஏப்ரல்.26) 2022-23ஆம் ஆண்டிற்கான எரிசக்தித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அதில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் சி.வி.கணேசன் உள்ளிட்டோர் பதிலுரை மற்றும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர்.

மேலும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் ஜூன் 3 அரசு விழாவாக கொண்டாடப்படும், வரும் ஜூன் 3ம் தேதி ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதியின் முழு உருவச்சிலை திறக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார்.

சட்டப்பேரவையில்  சபாநாயகர் அப்பாவு
சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு

இதனிடையே, எரிசக்தித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை ஆகிய துறைகளின் மீதான மானிய கோரிக்கை விவாதத்தின் மீது கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி ஸ்ரீநிவாசன் பேசினார். அப்போது வானதி சீனிவாசன் முன் வைத்த பல கருத்துகளுக்குச் சபாநாயகர் அப்பாவு குறுக்கீடு செய்து செக் வைத்து பேசியதும், அதற்கு அவர் மீண்டும் பதில் அளித்துப் பேசியதும் பேரவையில் சுவாரசியத்தை கூட்டியது. அதை விரிவாக பார்க்கலாம்.

செக் - 1 : வானதி சீனிவாசன் பேசிய போது, பெட்ரோல் - டீசல் நம்முடைய நாட்டில் கிடைப்பது இல்லை, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள் என குறிப்பிட்டார். இதற்கு சபாநாயகர் அப்பாவு, நம்முடைய நாட்டிலும் இருக்கு, வெளிநாட்டிலுருந்து இறக்குமதி செய்கிறோம் என தெரிவித்தார். அதற்கு வானதி சீனிவாசன், அதிகமாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறோம், இந்திய நாட்டில் கிடைக்கக் கூடிய அளவு போதாது, கிட்டத்தட்ட 80% இறக்குமதி செய்கிறோம் என குறிப்பிட்டார்.

கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி ஸ்ரீநிவாசன்
கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி ஸ்ரீநிவாசன்

செக் - 2: இதே போல், வானதி சீனிவாசன் பேசும் போது, மத்திய அரசு அரசு பெண் ஊழியர்களுக்கு "Child Care Leave" என்று ஒன்று கொடுக்கப்படுகிறது. 2 வருடமாகக் கொடுத்து வருகிறது, ஒருசில மாநில அரசும் கொடுத்து வருகிறது. அதை தமிழ்நாடு அரசும் அமல்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

இதற்கு சபாநாயகர் அப்பாவு : தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு அது போல் விடுமுறை கொடுப்பதாக எனக்கு தெரியவில்லையே? என தெரிவித்தார். இதற்கு வானதி சீனிவாசன், Finance Commission Recommendation, அதன் பின்னர் வந்த Memorandum என எல்லாத்தையும் கொடுக்க தயாராக இருக்கேன் என தெரிவித்தார். இதற்கு சபாநாயகர் "நன்றி" என கூறினார்.

செக் - 3: வானதி சீனிவாசன் : இந்த சட்டப்பேரவையில் மத்திய அரசு பஞ்சு இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினோம். அன்று இரவே மத்திய அரசு பஞ்சு இறக்குமதிக்கு முழுவதுமாக சுங்க வரியை செப்டம்பர் மாதம் வரை ரத்து செய்துள்ளது. தமிழர்கள் நன்றி மறவாதவர்கள் என்பதில் புகழ் பெற்றவர்கள், தமிழர்களின் மிகச்சிறந்த குணத்தில் நன்றி உணர்வும் ஒன்று.

ஆனால் வரி குறைத்த பிறகு இந்த சட்டப்பேரவையில் மத்திய அரசுக்கு ஒரு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றவில்லை. அதற்கு சபாநாயகர் அப்பாவு, தமிழ்நாட்டில் எப்போது பஞ்சு வாங்குவார்கள். அக்டோபர் முதல் பிப்ரவரி முதல் விவசாயிகள் வைத்திருப்பார்கள்.

அத்தியாவசிய பொருளில் இருந்து அந்த பஞ்சை எடுத்து விட்டார்கள், Stock-ஐ Unlimited செஞ்சிடாங்க. ஒட்டு மொத்தமாக இன்று இந்தியா-வுக்கு தேவையான பஞ்சு 3.2 கோடி பொதி தான், உற்பத்தி 3.4 கோடி இருக்கு. எங்க இருக்கு என்று பார்த்தால் தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் தான் செழிப்பா, குறைந்த விலையில் கிடைக்கும். 38,000 ரூபாய்க்கு வாங்கி, 1 லட்சம் ரூபாய்க்கு விற்கிறோம்.

சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின்
சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின்

அதே போல் இதற்கு மேல் லாபம் பார்க்க வேண்டும் என்று வெளி நாடிற்கு ஏற்றுமதி யோடு வரி 11% போட்டுள்ளோம். அந்த வரியை நீக்க தீர்மானம் கொண்டு வந்த பிறகே மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இன்னும் Stock தடுக்கலைனா 50,000 ரூபாய்க்கு கொடுக்கலாம். உங்க கொங்கு மண்டலம் தான் பயன் அடையும் பாத்துக்கோங்க என தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த வானதி சீனிவாசன், அமைச்சரை போல் பேரவைத் தலைவர் விளக்கம் தருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்கு சபாநாயகர் அப்பாவு, 38,000-த்துக்கு வாங்கும் பஞ்சை 1 லட்சம் ரூபாய்க்கு விற்பதில் என்ன நியாயம் இருக்கு. இதையும் மத்திய அரசிடம் கேளுங்கள் என தெரிவித்தார். மேலும், வானதி சீனிவாசன், நீங்க சொல்கிற மாதிரி வரியெல்லாம் முழுவதும் மத்திய அரசு குறைத்துள்ளது ஐயா. இப்போது மத்திய அரசுக்கு நன்றி சொல்லலாமா? என்றார்.

அதற்கு சபாநாயகர், இல்லை மா. நீங்க 50,000 ரூபாய் ஆக்கினால் பேரவையில் நன்றி தீர்மானம் கொண்டு வருகிறோம் என்றார். குறுக்கீடு செய்து பேசிய அமைச்சர், பஞ்சு நிறைய கார்பரேட் பதுக்கி வைத்துள்ளனர். அதை மத்திய அரசிடம் சொல்லி மீட்க வேண்டும் என தெரிவித்தார். இதற்கு சபாநாயகர், பருத்தி விலை கூடியதால் விவசாயம் லாபம் அடையவில்லை, இன்னிக்கு கையிருப்பு கார்பரேட் கிட்ட இருக்கு என தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த வானதி சீனிவாசன், யார் எங்கெங்கு பஞ்சை பதுக்கி வைத்துள்ளார்கள் என்ற பட்டியலை அமைச்சர் கொடுத்தால் மத்திய அரசிடம் சொல்கிறோம் என்றார். இதற்கு சபாநாயகர், அதற்கு Regulations Board இருக்கு உங்களுக்குத் தெரியும். நீங்க சொன்னாவே நடந்து விடும் என குறிப்பிட்டார்.

செக் - 4: தொடர்ந்து பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டம் மாற்றி அமைப்பது தொடர்பாக வானதி பேசினார். இதற்கு குறுக்கீடு செய்த சபாநாயகர் மானிய கோரிக்கை மீது பேசுங்கள் என தெரிவித்தார். அதற்கு வானதி, எனக்கு பேசவே வாய்ப்பு கிடைப்பது அரிதா இருக்கு ஐயா. கிடைக்கும் போது எல்லா கோரிக்கைகளும் வைத்து விடுகிறேன் என தெரிவித்தார்.

அதற்கு சபாநாயகர், உங்க தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேட்டால் கொடுப்பாரே என தெரிவித்தார். இதே போல் மது விளக்கு தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை வானதி சீனிவாசன் முன்வைத்தார், அது அனைத்தும் அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது. இறுதியாக சபாநாயகர் அப்பாவு, அகில இந்திய அளவில் தலைவரா இருக்கீங்க சந்தோசம்.. அகில இந்திய அளவில் பேசுகிறீர்கள். ஆனால் நம் மானியம் மீது பேசவில்லையே என தெரிவித்தார்.

இதனையடுத்து, தொடர்ந்து மானிய கோரிக்கை மீது சில கருத்துகளை முன் வைத்து தனது பேச்சை முடித்து கொண்டார் வானதி சீனிவாசன். பேரவையில் வானதி சீனிவாசன் பேசியதும், குறுக்கீடு செய்து அதற்கு சபாநாயகர் பதில் அளித்ததும் சுவாரஸ்யத்தைக் கூட்டியது.

இதையும் படிங்க: மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டிய நிலுவை தொகை - வெள்ளை அறிக்கை வெளியிட வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.