ETV Bharat / state

உ.பி., முதலமைச்சர் யோகி அரசைக் கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Oct 4, 2021, 2:12 PM IST

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு தலைவர் செல்வப் பெருந்தகை, மாநில துணைத் தலைவர் கோபண்ணா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் மத்திய, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Congress protest
Congress protest

உத்தரப் பிரதேசத்தில் மத்திய அமைச்சர் மகனின் கார் மோதி உயிரிழந்த நான்கு விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் அளிக்கச் சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்ட நிலையில், அவரது கைதைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சத்தியமூர்த்தி பவனில் ஆர்ப்பாட்டம்

அதன்படி, தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக மத்திய சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் சிவராஜ் சேகரன் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Congress protest
காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

இதில் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு தலைவர் செல்வப் பெருந்தகை, மாநில துணைத் தலைவர் கோபண்ணா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் மத்திய அரசைக் கண்டித்தும், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி அரசைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கண்டனக் குரல்கள் எழுப்பினர்.

’மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்'

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்வபெருந்தகை, “உத்தரப் பிரதேசத்தில் மத்திய அமைச்சர் மகன் காரை ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்டது தொடர்பாக உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தை பார்க்கச் சென்ற பிரியங்கா காந்தி மோசமான வகையில் நடத்தப்பட்டுள்ளார்.

காவல் துறையினர் அவரைப் பிடித்து தள்ளி மோசமாக நடத்தியுள்ளனர். மோடி அரசு பிரியங்கா காந்தியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மத்திய அமைச்சர் மகன் காரை ஏற்றிக் கொலை செய்த விவகாரத்தில் பாஜக அரசு, யோகி ஆதித்யநாத் அரசு யாரைக் காப்பாற்றுவதற்காக ஒன்பது பேரைக் கொன்றுள்ளது" என்றார்.

ராகுல் காந்தியைப் பார்த்து அஞ்சும் மோடி

அரசியல் கட்சியினர் உத்தரப் பிரதேச போராட்டக் களத்திற்கு சுற்றுலா செல்வதாக பாஜக விமர்சித்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த செல்வப்பெருந்தகை, "இது விமானத்தில் பார்வையிட்டு புகைப்படம் எடுக்கும் டூர் இல்லை, மக்களுடன் சென்று காவல் துறையினரை எதிர்கொண்டு பணியாற்றுகிறார்கள். இந்தியாவில் யாரைப் பார்த்தும் மோடிக்கு பயமில்லை, காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தியைப் பார்த்து மட்டுமே அஞ்சுகிறார்.

உத்தரப் பிரதேசத்தில் பிரியங்கா காந்தி கிராமம் கிராமமாகச் சென்று பணியாற்றுகிறார். மக்களின் ஆதரவைத் திரட்டுகிறார். அங்கு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு பிரியங்கா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய வெற்றியை சந்திக்கப் போகும் நிலையில், அதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத பாஜக, இவ்வாறு நடந்துகொள்கிறது.

விரைவில் மாநிலம் தழுவிய போராட்டம்

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ரௌலட் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் நடைபெற்ற தாக்குதலைப் போல தற்போது விவசாயிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படுகிறது. பிரியங்கா காந்தி கைதைக் கண்டித்து மாநிலம் தழுவிய மிகப் பெரிய போராட்டம் நடைபெறும். இது தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிடுவார்" எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கே.பி. பார்க் அடுக்குமாடி: கட்டுமானம் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.