ETV Bharat / state

“பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் நடவடிக்கை எடுப்பதில் துளியும் சமரசம் இருக்கக் கூடாது” - முதலமைச்சர் ஸ்டாலின்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2023, 1:08 PM IST

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் நடவடிக்கை எடுப்பதில் துளியும் சமரசம் இருக்கக் கூடாது
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் நடவடிக்கை எடுப்பதில் துளியும் சமரசம் இருக்கக் கூடாது

MK Stalin: நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நேரத்தில் குற்றச் சம்பவம் குறித்து அதிக கவனத்துடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (அக்.3) மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் மாநாடு தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. இதில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,“தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்று நடைபெறக்கூடிய இந்த இரண்டாவது மாவட்ட ஆட்சியர்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் மாநாட்டில், உங்கள் அனைவரையும் ஒருசேர சந்திப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

முன்னதாக, கடந்த ஆண்டு மார்ச் 10 அன்று மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாநாடு நடந்தது. 'கள ஆய்வில் முதலமைச்சர்' என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வுப் பணியை மேற்கொண்டபோதும் மாவட்ட ஆட்சியர்களையும், காவல் துறை கண்காணிப்பாளர்களையும் நான் சந்தித்திருக்கிறேன். தொடர்ச்சியாக உங்களை நான் சந்தித்து வருகிறேன்.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், நாம் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொள்ளவிருக்கிறோம். இங்கே கூடியுள்ள நீங்கள் அனைவரும் அரசுக்கு உங்களது ஆலோசனைகளை, எந்தவித தயக்கமுமின்றி, மக்கள் நலன் ஒன்றையே மையமாகக் கொண்டு வழங்கிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இன்று காலையில் நடைபெறும் இந்த அமர்வில், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு குறித்து நாம் விவாதிக்க இருக்கிறோம். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைதியை ஏற்படுத்திக் காட்டுவது முதலாவது இலக்கு. இரண்டாவது, பொது அமைதியைக் கெடுக்க நினைப்பவர்களை முழுமையாகத் தடுப்பது.

அமைதியான தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த முடியுமா என்று திட்டமிடுபவர்களுக்கு இடமளித்துவிடக் கூடாது. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால், அந்த உள்நோக்கத்துடன் இத்தகைய சக்திகள் செயல்படுவதற்கு வாய்ப்புள்ளது. அதனை தீவிரமாகக் கண்காணித்து தடுக்க வேண்டும். கள்ளச்சாராயம், போதைப் பொருட்களை அறவே ஒழிக்க வேண்டும். இது நம் எதிர்காலத் தலைமுறையையே சீரழிக்கிறது. இது சம்பந்தமான குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

இதையும் படிங்க: அக்.6-இல் டெல்டா மாவட்டங்களில் அதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் - அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ்!

மேலும், சாலை விபத்துகளால் மிக அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருப்பது எனக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது. இந்த நிலையை மாற்ற காவல்துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் போக்குவரத்துத் துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து திட்டங்களை வகுத்து, விபத்துகளைக் குறைப்பது குறித்து ஆய்வு செய்திடும் முயற்சியிலேயே முழுமையாக ஈடுபட வேண்டும்.

சென்னை உள்ளிட்ட பல மாநகரங்களில் பொதுமக்களுக்கு சிரமம் தரக்கூடிய ஒன்றாக இருப்பது, போக்குவரத்து நெரிசல். அதனைக் குறைப்பதற்கான ஒரு சிறப்பு செயல் திட்டம் உருவாக்கப்பட வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் நடவடிக்கை எடுப்பதில் துளியும் சமரசம் இருக்கக் கூடாது. குற்றவாளிகளை உடனே கைது செய்து, தண்டனை பெற்றுத் தருவதில் மும்முரம் காட்ட வேண்டும்.

பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமை செயல்கள் குறித்து அம்மக்கள், மாவட்ட அலுவலர்களுக்கு அச்சமின்றி தகவல் தெரிவிக்க பிரத்யேக வாட்ஸ் அப் மற்றும் தொலைபேசி எண்ணை மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்து, அவர்களுக்கு உதவிட வேண்டும்.

சமீப காலத்தில், தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் மற்றும் திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் ஆகியோரின் கொலை வழக்குகளில் காவல்துறை விரைவாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்தது பாராட்டத்தக்கது.

தற்போதைய காலகட்டத்தில், உண்மைக்குப் புறம்பான செய்திகளை பரப்புவதில் சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே, மாவட்ட ஆட்சித் தலைவர்களும், காவல் கண்காணிப்பாளர்களும் சமூக ஊடகங்களைத் தொடர்ந்து கண்காணித்து, பொய் செய்திகளை பரப்புவோர் மீதும், சமூக ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிப்போர் மீதும் கடுமையான நடவடிக்கையை எடுப்பதோடு, அதற்குரிய உண்மை நிலையை சமூக ஊடகங்களில் தெளிவுபடுத்த வேண்டும்” என கூறினார்.

இதையும் படிங்க: 'அரசு கட்டடங்களுக்கு உலர் சாம்பல் கற்களையே பயன்படுத்த அரசாணை வேண்டும்" - உலர் சாம்பல் கல் சங்கத்தினர் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.