ETV Bharat / state

மனித - வனவிலங்கு மோதல் உயிரிழப்புக்கான நிவாரணத் தொகை ரூ.10 லட்சமாக உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 13, 2024, 10:19 PM IST

Animal Attack Relief Amount: மனித - வனவிலங்கு மோதல்களில் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் நிரந்தர இயலாமைக்கான நிவாரணத் தொகை ரூ.5 லட்சம் என்பது ரூ.10 லட்சமாக உயர்வு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Chennai
மனித - வனவிலங்கு மோதல் உயிரிழப்புக்கான நிவாரணத் தொகை ரூ.10 லட்சமாக உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை: மனித - வனவிலங்கு மோதல்களில் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் நிரந்தர இயலாமைக்கான நிவாரணத் தொகை ரூ.5 லட்சம் என்பது ரூ.10 லட்சமாக உயர்வு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான தமிழக அரசின் செய்திக் குறிப்பில், "மனித வனவிலங்கு மோதல்களைக் குறைக்கத் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதே நேரத்தில் மனித - வனவிலங்கு மோதல்களில் பாதிக்கப் பட்டவர்களுக்கு போதுமான இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு 3.11.2021 அன்று அரசாணை வெளியிட்டது.

அதன்படி இத்தகைய மோதல்களில் மனித உயிர் இழப்பு அல்லது நிரந்தர இயலாமைக்கான இழப்பீட்டுத் தொகை ரூ.4 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. இந்த இழப்பீடு கோரிக்கைகளை உடனடியாக வழங்குவதற்காகத் தமிழ்நாடு அரசு 10 கோடி ரூபாய் நிறும நிதி (Corpus Fund) ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மனித - வனவிலங்கு மோதல்களில் ஏற்படும் உயிரிழப்புகளுக்குக் கூடுதல் நிவாரண உதவித் தொகை வழங்கிட வேண்டுமென அரசுக்கு முறையீடுகள் வந்துள்ளன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த முறையீடுகளை மிகுந்த பரிவுடன் பரிசீலனை செய்து இத்தகைய நிகழ்வுகளில் பாதிக்கப்படும் குடும்பங்களின் சிரமங்களைக் களைவதற்காக, மனித உயிர் இழப்பு மற்றும் நிரந்தர இயலாமைக்கான இழப்பீட்டுத் தொகை ரூபாய் 5 லட்சம் என்பதை ரூபாய் 10 லட்சமாக இரு மடங்கு உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: எப்போ பொங்கலிடணும்? பூஜை எப்படி செய்யணும்? முழு விவரத்தையும் தெரிஞ்சுக்கோங்க!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.