ETV Bharat / state

பரந்தூர் விமான நிலையம் வருவது, காலத்தின் கட்டாயம் - அமைச்சர் தங்கம் தென்னரசு

author img

By

Published : Nov 2, 2022, 4:45 PM IST

பரந்தூர் விமான நிலையம் வருவது, காலத்தின் கட்டாயம்- அமைச்சர் தங்கம் தென்னரசு
பரந்தூர் விமான நிலையம் வருவது, காலத்தின் கட்டாயம்- அமைச்சர் தங்கம் தென்னரசு

'பரந்தூரில் விமான நிலையம் வருவது, காலத்தின் கட்டாயம், அங்கு விமானநிலையம் வந்தால் தான் அடுத்த கட்டத்திற்கு நாம் செல்ல முடியும்' என தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமும், சென்னை தொழில் மற்றும் வர்த்தக சபையும் இணைந்து
பசுமை விமான நிலையம் மற்றும் தமிழ்நாட்டின் விரைவான வளர்ச்சிக்கு தகுந்த தருணத்தில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள தனியார் நட்சத்திர உணவகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்று, சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், 'திமுக ஆட்சி அமைந்த கடந்த ஒன்றரை ஆண்டுகாலத்தில் இதுவரை 2.5 லட்சம் கோடிக்கும் மேலான புதிய முதலீடுகள் தமிழ்நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்தியாவில் மட்டுமல்ல தென் கிழக்கு ஆசியாவிலேயே தமிழ்நாடு தான் சிறந்த தொழில் துறை மாநிலமாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னிடம் கூறியுள்ளார்.

இந்த தொழில் துறைக்கு தேவையான உட்கட்டமைப்பை மேம்படுத்த சென்னையில் புதிய விமானம் தேவை என திடமான, தொலை நோக்கு முடிவை முதலமைச்சர் எடுத்துள்ளார். அப்போது தான் 1 டிரில்லியன் பொருளாதாரத்தை நாம் அடைய முடியும்' எனக் கூறினார்.

புதிய விமான நிலையத்திற்காக சென்னையைச்சுற்றி 11 சாதகமான இடங்களைப் பார்வையிட்டதாகவும்
அதில் பல இடங்கள் சுற்றுச்சூழல், தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் தவிர்க்கப்பட்டதாகவும் கூறினார்.

இவை எல்லாம் ஆலோசித்தபின் தான் இறுதியாக பரந்தூர் பகுதி தேர்வு செய்யப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். பரந்தூர் விமான நிலையம் அமைவது காலத்தின் கட்டாயம் எனவும்; இந்த விமான நிலையம் வந்தால் தான் அடுத்த கட்டத்திற்கு நாம் செல்ல முடியும் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

பரந்தூர் பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டை ஒரு முன்னணி மாநிலமாக மாற்ற முதலமைச்சர் விரும்புவதாக கூறிய அமைச்சர், அதன் காரணமாக தான் புதிய விமான நிலையம் அமைக்கப்படுவதாகவும் சொன்னார்.

எனவே, ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் மைல்கல்லாக அமைய உள்ள பரந்தூர் விமான நிலையத்திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க:ராஜராஜசோழனின் பிறந்த விழா இனி அரசு விழாவாக கொண்டாடப்படும்; முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.