ETV Bharat / state

"மூன்றாவது அணி கரை சேராது! ஆனாலும் காங்கிரசுக்கு ஒரு நிபந்தனை" - பிறந்த நாள் விழாவில் ஸ்டாலினின் பேச்சு

author img

By

Published : Mar 1, 2023, 10:59 PM IST

Updated : Mar 2, 2023, 6:49 AM IST

Etv Bharat
Etv Bharat

2024 நாடாளுமன்றத் தேர்தலில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்கான தேர்தல் அல்ல; யார் ஆட்சி அமைத்துவிடக் கூடாது என்பதைத் தீர்மானிக்கும் தேர்தல் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், ''ஒன்றுபட்ட இந்தியாவை வகுப்புவாத பாசிசத்தால் பிளவுபடுத்தி - ஒற்றைத் தன்மை எதேச்சதிகார நாடாக மாற்ற நினைக்கும் பாஜகவை அரசியல் ரீதியாக வீழ்த்தியாக வேண்டும்.

அது ஒன்று தான் நம்முடைய ஒற்றை இலக்காக இருக்க வேண்டும். பாஜகவை 2024 தேர்தலில் வீழ்த்த நினைக்கும் அனைவரும் ஒன்றாக சேர வேண்டும். அந்த ஒற்றுமை உணர்வு வந்துவிட்டாலே வெற்றி பெற்றுவிட்டோம் என்று சொல்லி விடலாம்'' எனக்குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், "பாஜக ஆளாத மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் இல்லை. முறையாக நிதிகளை வழங்குவது இல்லை. ஜிஎஸ்டிக்கு பிறகு நிதி உரிமைகள் பறிக்கப்பட்டு விட்டது. இழப்பீடுகளை உரிய காலத்தில் தருவது இல்லை. நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு திட்டங்கள் இல்லை" என தெரிவித்த அவர் இப்படி எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களோடு நிர்வாக யுத்தம் நடத்திக் கொண்டு இருக்கிறது பாஜக.

அதனுடன் கொள்கை யுத்தம் தொடுத்துக் கொண்டிருக்கிறோம் நாம் என சாடினார். அரசியல் கட்சிகள் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறந்து விட்டுக் கொடுத்து பாஜகவுக்கு எதிராக ஒன்று சேர வேண்டும். அதே நேரத்தில் சிலரால் காங்கிரசு அல்லாத கட்சிகளின் கூட்டணி என்று சொல்லப்படும் வாதங்களையும் நிராகரிக்க வேண்டும். அது கரை சேராது என ஸ்டாலின் தெரிவித்தார்.

"மாநிலங்களுக்குள் இருக்கும் அரசியல் வேறுபாட்டை வைத்து, தேசிய அரசியலைத் தீர்மானித்தால் இழப்பு நமக்குத் தான் என்பதை அனைத்துக் கட்சிகளும் உணர வேண்டும். இதனை காங்கிரஸ் உள்பட அனைத்துக் கட்சிகளுக்கும் சேர்த்தே நான் சொல்கிறேன்" என கூறிய அவர் தமிழ்நாட்டில் கடந்த நான்காண்டு காலமாக நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றிருக்கிறோம் என்றால் அதற்கு இந்த ஒற்றுமை ஒன்று தான் அந்த வெற்றிக்கு அடிப்படையாகும்.

இதனை 2021ஆம் ஆண்டே சேலம் பொதுக்கூட்டத்தில் காங்கிரசு கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அவர்களை வைத்துச் சொன்னேன். தமிழ்நாட்டைப் போல ஒற்றுமையான கூட்டணியை அகில இந்தியா முழுமைக்கும் அமையுங்கள் என்று சொன்னேன். ஏனெனில் தேர்தலுக்குப் பிறகு கூட்டணி வைத்துக் கொள்கிறோம் என்று சொல்வதும் நடைமுறைக்கு சரியாக வராது என சுட்டிக்காட்டினார்.

ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை அறிவித்துவிட்டு நான்காண்டுகளுக்கு முன்னால் அடிக்கல் நாட்டிவிட்டு இன்று வரை ஒரு செங்கல்க்கு மேல் இன்னொரு செங்கலைக் கூட வைக்காமல் தமிழ்நாட்டைக் கேவலப்படுத்திக் கொண்டு இருக்கிறது ஒன்றிய அரசு. மொத்தமே 12 கோடி ரூபாயை மட்டும் தான் மதுரை எய்ம்ஸுக்கு ஒதுக்கி இருப்பதாக கூறுகிறது. இது எட்டுக் கோடித் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் காரியம் அல்லவா? என கேள்வி எழுப்பினார்.

சமஸ்கிருதத்துக்கு கோடி கோடியாக பணம் ஒதுக்குவாய். சங்கதமிழுக்கு வெறும் கையை நீட்டுவாய் என்றால் அதனால் அவமானப்படுத்தப்படுவது திருவள்ளுவரும் இளங்கோவடிகளும் என்பதை இந்த தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்து கொந்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள் என கூறினார்.

பிறகு தமிழக ஆளுநர் ஆர். ஏன் ரவியை பற்றி பேசும்போது, "எட்டு கோடி மக்களின் பிரதிநிதிகளால் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட நீட் விலக்கு மசோதாவை அனுமதிக்காமல் ஒரு நியமன ஆளுநர் நாள்களைக் கடத்த முடியுமானால் - இவர்கள் தனிப்பட்ட ஸ்டாலினை அவமானப்படுத்துவதாக நினைத்து தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்," என கூறினார்.

ஆன்லைன் ரம்மியைத் தடை செய்ய ஒரு சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றி அனுப்பினோம். அதனைக் கூட இங்கே ஆளுநராக இருப்பவர் அனுமதிக்கவில்லை. மகாபாரதத்திலேயே சூதாட்டம் இருக்கிறதே என்று நினைத்து தடை செய்ய மறுக்கிறார்களா? என சூசகமாக கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாட்டில் நடக்கும் திமுக ஆட்சியை பொறுத்தவரை, தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டவை 505 வாக்குறுதிகள் தான். அதில் 85 விழுக்காடு வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டன. மீதமுள்ளவை இன்னும் ஓராண்டுக்குள் நிறைவேற்றப்படும் என தெரிவித்த ஸ்டாலின், தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாத எத்தனையோ திட்டங்களைத் தீட்டி வருகிறோம் என கூறினார். இந்தியாவின் மிகமிகப் பழமையான மூத்த அரசியல் கட்சியான காங்கிரசு கட்சியின் தலைமைப் பதவிக்கு வந்திருக்கும் மல்லிகார்ஜூன கார்கே என்னை வாழ்த்தியது எனக்குப் பெருமை ஆகும்.

மேலும் காஷ்மீரத்து சிங்கம் ஷேக் அப்துல்லாவின் மகன் பரூக் அப்துல்லா வாழ்த்தி இருக்கிறார். இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத முகங்களாக கோலோச்சிய முலயாம் சிங் அவர்களின் மகன் அகிலேஷ் அவர்களும் லாலுபிரசாத் அவர்களின் மகன் தேஜஸ்வீ அவர்களும் - இங்கு வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என கூறிய அவர் இரண்டு சீனியர்கள், இரண்டு ஜூனியர்கள் வந்திருக்கிறார்கள் என குறிப்பிட்டார்.

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவர்க்கும் ஒரு வரலாற்றுக் கடமை இருக்கிறது. புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி முழுமையான வெற்றியைப் பெற்றாக வேண்டும் என எடுத்துரைத்தார்.

இந்த கூட்டத்தில் இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஃபருக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி தலைவரும் பீகார் மாநில துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: வரும் 2024 மக்களவைத் தேர்தலிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடரும் - மல்லிகார்ஜூன கார்கே

Last Updated :Mar 2, 2023, 6:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.