டி.ஆர். பாலு வாங்கிய காருக்கு பணம் தரவில்லை, பழைய நினைவுகளை பகிர்ந்த ஸ்டாலின்

author img

By

Published : Jan 8, 2023, 9:40 AM IST

ஸ்டாலின்

சென்னையில் “பாதை மாறா பயணம்” என்ற நூல் வெளியீட்டு விழாவில் டி.ஆர். பாலு குறித்த சுவாரஸ்யமான தகவல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துகொண்டார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று ( ஜனவரி 7) நடைபெற்ற “பாதை மாறா பயணம்” என்ற நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், ''கலைஞரின் தொண்டரா? தோழரா? செல்லப்பிள்ளையா? உடன்பிறப்பா? பற்றாளரா? வெறியரா? எதைச் சொல்வது? வேறு ஒன்றும் இல்லை. இது எல்லாம் கலந்த ஒருவர்தான் நம்முடைய டி.ஆர்.பாலு. இது ஏதோ வார்த்தை அலங்காரத்திற்காக சொல்லக்கூடிய சொல் அல்ல, இது நியாயமானதுதான் என்பதற்கு அடையாளம்தான் இந்த விழா.

உங்களது வாழ்க்கைக் குறிப்புகளை நிகழ்ச்சிகளின் தொகுப்புகளைகூட ஒரு டைரி மாதிரி, ஒரு தொகுப்பு மாதிரிகூட நீங்கள் எழுதலாம். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் டி.ஆர்.பாலுவின் இந்தப் புத்தகமானது அத்தகைய தாக்கத்தை நமக்கு ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு பள்ளி விழாவில் பேராசிரியர் முன்னால், 17 வயதில் மிகத் தீவிரமான அரசியலுக்குள் நுழைந்த டி.ஆர்.பாலு இன்றைக்கு, 80 வயது கடந்த நிலையிலும் ஒரே கொடி - ஒரே இயக்கம் - ஒரே தலைமை என கொள்கை பிடிப்போடு வாழ்ந்து வருகிறார்.

  • #LIVE: கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு அவர்களின் "பாதை மாறாப் பயணம்" நூலினை வெளியிட்டுச் சிறப்புரை https://t.co/SPBNCixiKw

    — M.K.Stalin (@mkstalin) January 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அவரை நான் 1970-லிருந்து அறிவேன். அவரோடு பழகிக்கொண்டிருப்பவன். அவரை இளைஞராக பார்த்தவன். எனக்கும் அவருக்கும் 10 வயது வித்தியாசம். இப்போது வாங்க, போங்க என்று பேசுகிறோம். வாடா, போடா என்று பேசிய காலம் உண்டு. அப்படியெல்லாம், பழகி இருக்கிறோம். மிசா காலத்தில்தான் எங்கள் நட்பு இன்னும் நெருக்கமானது. மிசாவில் நான் கைது செய்யப்பட்டபோது, கோபாலபுரத்தில் இருந்து வேனில் ஏற்றினார்கள்.

அப்போது ஆயிரக்கணக்கான தோழர்கள் வேனை சூழ்ந்துகொண்டு மறித்தார்கள். அதில் டி.ஆர். பாலுவும் இருந்தார். 'ஸ்டாலினைக் கைது செய்ய விடமாட்டோம்' என்று முழக்கம் எழுப்பிய தீரர்தான் நம்முடைய டி.ஆர்.பாலு. இந்த நேரத்தில் வெளிப்படையாக ஒன்று பேச விரும்புகிறேன். பாலு கோபித்துக்கொள்ளக் கூடாது. நாங்கள் இரண்டு பேரும் கூட்டத்திற்கு போவோம், எனக்கு துணையாக இவரை தான் அழைத்துக் கொண்டு போவேன். அந்தக் கூட்டத்தில் எனக்கு வழிச் செலவு கொடுப்பார்கள். அதில் பாதியை அவருக்கு கொடுத்துவிடுவேன்.

உடனே வாங்கிக்கொள்வார். இதைவிட வேடிக்கை என்னவென்று கேட்டால், எனக்கு கைத்தறி ஆடையெல்லாம் கொடுப்பார். அதை வாங்கிகொண்டு போய், மறுநாள் சட்டை தைத்துக் கொண்டு போட்டு வருவார். இதைவிட இன்னொரு கொடுமை நான் செகண்ட் ஹேண்டில் எலிகன்ட் பியட் 7690 MDN ஒன்று வாங்கினேன். இன்னும் அது நினைவிருக்கிறது. 5,000 ரூபாய்க்கு வாங்கினேன். 5,000 ரூபாய் என்பது இப்போது ஐந்து லட்சம் ரூபாய். அது வாங்கி கொஞ்ச நாளில் விபத்து ஏற்பட்டு விட்டது. 5,000 ரூபாய்க்கு வாங்கி 7,000 ரூபாய்க்கு செலவு செய்தேன். அதன்பின் விற்றுவிடலாம் என்று முடிவு செய்தபோது அதை நான் வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னார். எவ்வளவு வேணும் என்ற கேட்டார். எனக்கு லாபம் வேண்டாம். அசல் வந்தால் போதும். நான் வாங்கியது 5,000 ரூபாய் செலவு செய்தது 7,000 ரூபாய், 12,000 ரூபாய் கொடுங்கள் போதும் என்று சொன்னேன்.

உடனே ஒத்துக்கொண்டு 100 ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து விட்டார். அதற்குப்பிறகு அவர் அதை சுத்தமாக மறந்துவிட்டார். இரண்டு மாதம் கழித்து இன்னும் 100 ரூபாய் கொடுத்தார். மொத்தத்தில் 2,000 ரூபாய் கொடுத்திருப்பார். மீதி பணம் வரவில்லை. ஆக இன்றைக்கும் அவர் எனக்கு ஒரு கடன்காரராகத்தான் இருக்கிறார். இப்படி இன்றைக்கு எங்களுடைய நட்பு ஒட்டிக் கொண்டிருக்கிறது.

சேது சமுத்திரத் திட்டத்தை தடுத்தது யார் என்று உங்களுக்குத் தெரியும். பா.ஜ.க. தான் தடுத்தது. இன்று, ''ராமேஸ்வரம் கடல் பகுதியில் ராமர் பாலம் இருந்ததாக உறுதியாக கூறமுடியாது" யார் சொல்கிறார், பாஜகவை சார்ந்த ஒன்றிய அமைச்சர்களில் ஒருவராக இருக்கக்கூடிய ஜிதேந்திரசிங் அவர்கள் மாநிலங்களவையில் பேசியிருக்கிறார். காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி, மன்மோகன்சிங் தலைமையில் அமைந்தபோது, அந்த திட்டத்தை எப்படியாவது செயல்படுத்த வேண்டுமென்று கலைஞர் விரும்பியபோது 2004ஆம் ஆண்டில். 2,427 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்தது அன்றைய ஒன்றிய அரசு, அதனை நிறைவேற்ற முயற்சியில் ஈடுபட்டது.

அதற்கு காரணமாக இருந்தவர் இந்த விழாவினுடைய நாயகனாக இருக்கக்கூடிய நம்முடைய பாலு தான். இவர்கள் தடுக்காமல் இருந்திருந்தால் இந்த பதினெட்டு ஆண்டுகளில் எவ்வளவோ பயன்களை இந்த தமிழ்நாடு அடைந்திருக்கும். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் இந்த பெருமை வந்து சேர்ந்திருக்கும். நாட்டினுடைய அந்நியச் செலாவணி வருவாய் அதிகரித்திருக்கும். தமிழ்நாட்டிலே தொழில் வணிகம் பெருகி இருக்கும். தமிழ்நாடு மற்றும் அண்டை மாநில துறைமுகங்களில் சரக்குகளைக் கையாளும் திறன் அதிகரித்திருக்கும். கடல்சார் வர்த்தகம் பெருகி, அதன் காரணமாக மீனவர்களுடைய பொருளாதாரம் வாழ்க்கைத் தரம் பெருகிப் போயிருக்கும்.

சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அனைத்து முயற்சிகளிலும் நீங்கள் ஈடுபடவேண்டும். இது அண்ணாவின் கனவுத் திட்டம்! கலைஞரின் கனவுத் திட்டம்! அதனை நிறைவேற்றிக் காட்ட வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. எனவே டி.ஆர்.பாலுவின் பணி இன்னமும் தேவைப்படுகிறது. இன்னும் களங்கள் பாக்கி இருக்கின்றன எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தேர்தலுக்கு முன் நக்சலிசம் ஒழிக்கப்படும் - அமித் ஷா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.