ETV Bharat / state

சேதமடைந்த பயிர்கள் குறித்த அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்த ஆய்வு குழு

author img

By

Published : Feb 6, 2023, 12:18 PM IST

சேதமடைந்த பயிர்களை முதலமைச்சரிடம் காண்பித்த ஆய்வு குழு!
சேதமடைந்த பயிர்களை முதலமைச்சரிடம் காண்பித்த ஆய்வு குழு!

தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களின் நிலை குறித்தும், இழப்பீடு வழங்குவது தொடர்பாகவும் அமைச்சர்கள் குழு, தமிழ்நாடு முதலமைச்சரிடம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (பிப்.6) காலை நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், சக்கரபாணி, தலைமைச் செயலாளர், துறை சார்ந்த முக்கிய செயலாளர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக பிப்ரவரி மாதத்தில் நெல் அறுவடை செய்யத் தயாராக இருந்த நேரத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பெய்த பருவம் தவறிய மழையால், சுமார் ஒரு லட்சம் ஹெக்டேர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கியது.

எனவே வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றி, அறுவடை பணியை மீண்டும் தொடங்கிடத் தேவையான அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டது. தொடர்ந்து பலத்த மழை பெய்வதால் அறுவடை செய்யப்பட்ட தானியத்தில் ஈரப்பத அளவு மிக அதிகமாக இருக்கும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஈரப்பதத்தை 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் வரை தளர்த்தவும் மற்றும் நிறமாற்றம் அடைந்த முளைத்த நெல்லுக்கு 5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதம் வரை தளர்த்தவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று (பிப்.5) முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

அதுமட்டுமின்றி, மழையால் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், சக்கரபாணி, வேளாண்மை மற்றும் கூட்டுறவு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கள ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, அமைச்சர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அடங்கிய குழு ஆய்வு செய்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரிடம் ஆய்வு முடிவு அறிக்கையை அளித்தனர்.

அப்போது சேதமடைந்த பயிர்களையும் அலுவலர்கள் முதலமைச்சரிடம் காண்பித்தனர். இந்த அறிக்கையின் அடிப்படையில், பயிர் சேத விபரங்கள், மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை பெற்று தருவது, விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு வழங்குவது குறித்தும் அளிக்கப்பட்ட அறிக்கையின் மீது முதலமைச்சர் விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.

மேலும் நெல் கொள்முலுக்கான ஈரப்பதத்தை 19 சதவீத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும், சேதமடைந்த பயிர்களுக்கான நிவாரணம் குறித்தும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரம் விவசாயிகளுக்கான இழப்பை வழங்கும் வகையில் மத்திய குழு ஆய்வு செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: பருவம் தவறிய மழையால் 1.27 லட்சம் ஹெக்டேர் பயிர் பாதிப்பு - அமைச்சர் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.