ETV Bharat / state

விமான நிலையங்களில் தமிழ் தெரிந்த CISF வீரர்கள் - டிஐஜி ஸ்ரீராம் தகவல்

author img

By

Published : Mar 10, 2023, 4:03 PM IST

விமான நிலையங்களில் தமிழ் தெரிந்த CISF வீரர்கள் - டிஐஜி ஸ்ரீராம் தகவல்!
விமான நிலையங்களில் தமிழ் தெரிந்த CISF வீரர்கள் - டிஐஜி ஸ்ரீராம் தகவல்!

விமான நிலையங்களில் பயணிகளுடன் மொழி பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க முக்கிய இடங்களில் தமிழ் தெரிந்த வீரர்கள் பணியில் உள்ளனர் என்று மத்திய தொழில் பாதுகாப்பு படை டிஐஜி ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த பழவந்தாங்கல் கண்ணன் காலனியில், மத்திய தொழில் பாதுகாப்பு காவல் படையின் (CISF) 54ஆவது ஆண்டை முன்னிட்டு அணிவகுப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விமான நிலைய இயக்குநர் சரத்குமார் மற்றும் சென்னை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு காவல் படை டிஐஜி ஸ்ரீராம் ஆகியோர் கலந்து கொண்டு, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.

விமான நிலையங்களில் தமிழ் தெரிந்த CISF வீரர்கள் - டிஐஜி ஸ்ரீராம் தகவல்!

பின்னர் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள், மோப்ப நாய்களின் துப்பறிவு நிகழ்வுகள், மோப்ப நாய்களின் சாகசங்கள் ஆகியவை நடைபெற்றன. மேலும் பல்வேறு வகைகளில் துப்பாக்கியால் சுடும் நுணுக்கங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.

இதனையடுத்து விழாவில் பேசிய சென்னை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு காவல் படை டிஐஜி ஸ்ரீராம், “மத்திய தொழில் பாதுகாப்பு படை 1969ஆம் ஆண்டு 3,000 வீரர்களுடன் தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் 350 பிரிவுகளாக 1 லட்சத்து 63 ஆயிரம் பேருக்கு மேல் உள்ளனர். விமான நிலையம், துறைமுகம், அனல்மின் நிலையம் உள்பட பல இடங்களில் நமது வீரர்கள் பணியாற்றுகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் 23 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய தொழில் பாதுகாப்பு படை தொடங்கப்பட்டது. தற்போது 2,000 வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அடுத்த மாதம் புதிய முனையம் தொடங்கப்பட உள்ளது. மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பெண்களின் பங்கு அதிகமாக இருக்கிறது. பயணிகளுடன் மொழி பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க, வீரர்களுக்கு பயிற்சிகள் தரப்படுகிறது. தமிழ் தெரிந்த வீரர்கள், முக்கிய இடங்களில் பணியில் அமர்த்தப்படுகின்றனர்’ என கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய விமான நிலைய இயக்குநர் சரத்குமார், “கடந்த 54 ஆண்டுகள் மத்திய தொழில் பாதுகாப்பு படை காவல் துறையினர், விமான நிலையங்களில் சிறப்பான முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு ஆண்டிற்கு சென்னை விமான நிலையத்தில் 22 மில்லியன் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்த எண்ணிக்கை 35 மில்லியனாக உயர்த்தப்படும். தற்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சி அபாரமாக உள்ளது. அதற்கு ஏற்றார்போல் பாதுகாப்பும் தேவைப்படுகிறது. விமான சேவையை இளம் தலைமுறையினர் அதிகம் பயன்படுத்துகின்றனர். விமான நிலையங்களில் பாதுகாப்பு பணியில் மனிதநேயத்துடன் செயல்பட வேண்டும்.

பாதுகாப்பு பணிகளுக்காக நவீன வசதிகள் மேம்படுத்தப்படுகிறது. சுற்றுலா வளர்ச்சிக்கு விமான நிலையம் சிறந்து விளங்குகிறது. பாதுகாப்பு என்பது பயணிகளிடம் இணக்கமாக, அன்பாக நடந்து கொள்வதுதான். நாட்டின் வளர்ச்சிக்கு பாதுகாப்பு முக்கியமானது. விமான நிலையங்களில் விடுமுறை, பண்டிகை காலங்களில் ஏற்படும் அதிகமான கூட்டத்தையும் சிறப்பாக கையாளுகின்றனர்” என்றார்.

இதையும் படிங்க: ஹைடெக்காக மாறிய சென்னை ஏர்போர்ட்.. பயணிகளுக்கு புதிய வசதி அறிமுகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.