சிறார்கள் குற்றவாளியாக மாற யார் காரணம்? - குழந்தைகள் நல ஆர்வலர்கள் விளக்கம்

author img

By

Published : Nov 29, 2021, 4:04 PM IST

குழந்தைகள் நல ஆர்வலர்கள் விளக்கம்

சிறார்கள் குற்றவாளியாக மாற யார் காரணம் என்பது குறித்து ஈடிவி பாரத்தின் சிறப்புத் தொகுப்பைக் காணலாம்.

சென்னை: வடகிழக்குப் பருவமழை காரணமாகத் தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஒருபுறமிருக்க மற்றொருபுறம், பள்ளிகளில் மாணவிகளிடம் பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் நடந்துகொண்டிருக்கின்றன.

குறிப்பாக கோயம்புத்தூர், வேலூர், பழனி உள்ளிட்ட மாவட்டங்களில் பாலியல் சீண்டல்கள் தொடர்பாக கைது நடவடிக்கை நடந்துவருகிறது. இந்நிலையில் பழனியில் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவிக்குப் பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ சட்டத்தில் (POCSO act) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இப்படி பள்ளி குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில், இதற்கு காரணம் என்ன என்று தேடத் தொடங்கினோம்.

இது குறித்து மக்கள் கண்காணிப்பு அமைப்பின் நிறுவனர் ஹென்றி டிபேன் தெரிவித்ததாவது, "பள்ளியில் வன்முறை, குடும்பத்தில் வன்முறை, தெருக்களில் வன்முறை இது புதிய அரசு வந்ததால் அதிகரித்துள்ளது என்று சொல்லவில்லை. பள்ளிகளில் உள்ள சிறார்களுக்கு ஆசிரியர்களால் வன்முறை என்பது தொடர்ந்து நடைபெற்றுவருகின்றது.

தற்போது இது குறித்து வெளிவருவதற்கு வாய்ப்பு அளித்துள்ளது. அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கான வன்முறை எப்போதும் இருந்துவந்தது. தற்போது குழந்தைகளின் பெற்றோர்கள் இதனை வெளி உலகத்திற்கு கொண்டுவந்துள்ளனர். தேசிய குழந்தைகள் ஆணையம் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு ஆய்வு நடத்தும்போது பள்ளிகளில் குழந்தைகளுக்கான வன்முறைகள் குறித்து கண்டறியப்பட்டன.

சமூகத்தில் வன்முறை - அரசியல்வாதிகள் காரணம்

அரசியலில் இருக்கக்கூடியவர்கள் வன்முறையைத் தூக்கி எரியும்வரை, கடந்த ஆட்சி முதல் தற்போதைய ஆட்சிவரை தொடர்ந்து வருகிறது. வன்முறைக் கலாசாரத்தை அரசியல் சார்ந்த கட்சி நிர்வாகிகள் தனிநபர் தாக்குதல் உள்ளிட்டவற்றிற்குப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.

சமீபத்தில் ஆடு திருடும் இரு சிறுவர்கள் பூமிநாதன் என்ற காவல் துறை அலுவலரை கொலை செய்துள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது; இந்த வன்முறை என்பது தனிநபர் தாக்குதலுக்கு எதிராகப் பயன்படுத்தினாலும் சரி, காவல் துறைக்கு எதிராகப் பயன்படுத்தினாலும் சரி இது மிகக் கொடூரமான குற்றம் ஆகும். கோபத்தினால் குற்றச் செயல்களில் ஈடுபட்டு ஒரு இழப்பு ஏற்படுவது வித்தியாசம் உள்ளது.

ஆனால் இங்குத் திட்டமிட்டு வன்முறைக்கு என்று சிலர் வளர்க்கப்படுகிறார்கள், அவர்களைப் பாதுகாக்க சட்டப் பாதுகாப்பு கொடுப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதனை எல்லா அரசியல் கட்சி சார்ந்தவர்கள், ஆளும் கட்சியும் கண்டிக்காமல் தண்டிக்காமல் இருக்கின்றனர். மேலும் ஒரு கான்ட்ராக்ட் எடுப்பதற்கு வன்முறை, இப்படியாக உள்ள வன்முறைகளை அரசியல் கட்சியினர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

சினிமாவில் வன்முறை கூடாது

வன்முறை நிறுத்தப்பட வேண்டும் என்றால் சினிமாவில் வன்முறை காட்சிகள் இடம் பெறக் கூடாது. குறிப்பாக மரணத்தை ஏற்படுத்தும் ஆயுதங்களைப் பயன்படுத்தி கொலைவெறித் தாக்குதல் நடத்தும் வன்முறைக் காட்சிகள் திரைப்படங்களில் இடம்பெறுவதைத் தவிர்க்க வேண்டும்.

மலேசிய நாட்டில் கேளிக்கை நிகழ்ச்சிகளில் திரையிடப்படும் தமிழ்ப் படங்களில் வன்முறைக் காட்சிகளைத் துண்டித்து வெளியிட்டுத் தமிழ்ப் பண்பாட்டிற்கு ஆயுதக் கலாசாரமும் வன்முறையும் பொருந்தாது என்பதை இன்றுவரை நிறுவிவருகிறார்கள். இதன் மூலம் தமிழர்களின் பண்புகளை, வாழ்வியல் நெறிமுறைகளைப் பாதுகாத்து வளர்த்தெடுத்து மனித குலத்திற்கு எடுத்துரைக்கிறார்கள்.

இது போன்ற வன்முறைகளை மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கண்டிப்பதில்லை என்று கூறுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது ஆகும். வன்முறை யார் மீது நிகழ்த்தப்பெற்றாலும் அதை மனித உரிமை அமைப்புகள் ஒருபோதும் கண்டிக்கத் தவறியதில்லை.

வன்முறையை யார் பயன்படுத்தினாலும் அது வன்முறைதான், வன்முறையாளர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பெற வேண்டும் என்று மக்கள் கண்காணிப்பகம் கோருகிறது.

மனித உரிமைக் கல்வி

வன்முறைக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசும் அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் பேசுகின்ற ஒரு பொருளாக இருக்க வேண்டும். வன்முறைக்கு எதிராக வன்முறையற்ற நிலைப்பாட்டை அனைவரும் கொண்டுவர வேண்டும். வன்முறையற்ற தமிழ் சமூகத்தை உருவாக்குங்கள். பேசித் தீர்ப்பது கோஷங்கள் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். வன்முறைக் கலாசாரம் குறைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

சிறார்கள் குற்றவாளியாக மாற யார் காரணம்

பள்ளிகளில் நடக்கக்கூடிய வன்முறை, பெண்களுக்கு எதிரான வன்முறை இவற்றைத் தடுக்க வேண்டுமென்றால் சமத்துவத்தை நேசிக்கின்ற கல்வி பாடத் திட்டத்தில் ஒரு பாடமாக கொண்டுவர வேண்டும். மனித உரிமைக் கல்வி பாடத்திட்டத்தில், வகுப்பறையில் ஆசிரியர்கள் மூலமாகப் போகுமானால் இந்த அரசு புதிய தலைமுறையை உருவாக்கும் கல்வியாக இருக்கும்" என்றார்.

தவறான நண்பர்கள்

இது குறித்து தமிழ்நாடு உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் சரண்யா கூறுகையில், "குழந்தைகள் தவறான நண்பர்களின் சேர்க்கை, பழக்கவழக்கம் உள்ளிட்டவற்றில் சரியாக இருக்க வேண்டும். தீய பழக்கத்திலிருந்து விலகியிருக்க வேண்டும்.

ஒரு குழந்தைக்கு அதிகமாக வன்முறை தோன்ற காரணமாக இருக்கக் கூடியவையாக, காணொலியில் தன்னைவிட பெரியவர்களைப் பார்த்து கற்றுக்கொள்ளுதல், சினிமா படங்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுதல், இதைத் தவிர குடும்பச் சூழ்நிலை சரியில்லாத காரணமும் சரியான பராமரிப்பு, உணவு உள்ளிட்டவைகூட காரணங்களாக அமைகின்றன.

இவையெல்லாம்கூட குழந்தைகள் வன்முறையைக் கற்றுக்கொள்ள கூடிய சூழ்நிலை உள்ளது. ஆகையால் பெகுழந்தைகளை நல்லபடியாகப் பராமரித்து, வளர்ப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும்.

போக்சோ சட்டம்

சிறார்களுக்கு எதிராகப் பாலியல் சீண்டலில் ஈடுபடுவோர் மீது போக்சோ சட்டம் பாய்கிறது. இந்தப் போக்சோ சட்டத்தின்கீழ் சிறார்கள் விவரங்கள் ஏதும் தெரியா வண்ணம் பார்த்துக் கொள்ளப்படுகிறது. குழந்தைகளுக்கான 1098 என்ற 24 மணிநேரமும் இயங்கும் அலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் பெண் குழந்தைகள், சிறார்கள் மீது பாலியல் செயலில் ஈடுபடுபவர்கள் மீது புகார் அளிக்கலாம். எவ்விதத்திலும் குழந்தைகள் பெயர், இருப்பிடம் உள்ளிட்டவை எதுவும் வெளியில் வராது, மிகுந்த பாதுகாப்போடு இவ்வகை சட்டத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

பெற்றோர்கள் குழந்தைகளிடம் அதிக அளவில் நேரங்களைச் செலவழிக்க வேண்டும். பெற்றோர்கள் நண்பராகப் பழகத் தொடங்கினால், குழந்தைகள் எல்லாவற்றையும் ஒளிவு-மறைவின்றி பெற்றோரிடம் தெரிவிக்கும்.

பாலியல் சீண்டலில் ஈடுபடுவோரின் முகத்திரையைக் கிழிக்கும் வண்ணம் பல்வேறு இடங்களில் போக்சோ என்ற சட்டத்தை அறிந்து தெரிந்து வைத்துக் கொண்டிருக்கின்றனர். இன்னும் அதிகமாக போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு தேவைப்படுகிறது. இச்சட்டத்தின் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுகின்றனர்.

முதலமைச்சர் போக்சோ சட்டம் குறித்து ஆலோசனை

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ சட்டம், 2012இன் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

தடயவியல் ஆய்வகங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்

தடயவியல் ஆய்வு அறிக்கைகள் விரைந்து கிடைக்க ஏதுவாக அதற்கான தடயவியல் ஆய்வகங்களின் எண்ணிக்கை, இதர உள்கட்டமைப்புகள் கூடுதலாக அமைக்க வேண்டும்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக தொலைதூர இடங்களுக்குச் சென்று விசாரணை செய்ய நடமாடும் விசாரணை பிரிவு (காவல் வாகனம்) செயல்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. போக்சோ சட்டத்திற்கு நடவடிக்கை எடுக்க ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

1098 சிறார் உதவி எண் குறித்த விவரங்கள் வரும் கல்வி ஆண்டிலிருந்து இவ்விவரங்கள் அனைத்து பாடப் புத்தகங்களிலும் அச்சிடப்படும்

24 மணி நேரமும் செயல்படக்கூடிய கல்வி தகவல் மையத்தின் 14417 மூலம் உளவியல் பயிற்சி பெற்ற வல்லுநர்களைக் கொண்டு மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுவருகிறது. அதேபோன்று, ஒவ்வொரு வகுப்பறையிலும் 1098 சிறார் உதவி எண் குறித்த விவரங்கள் ஒட்டப்பட்டு, வரும் கல்வி ஆண்டிலிருந்து இவ்விவரங்கள் அனைத்து பாடப் புத்தகங்களிலும் அச்சிடப்பட்டு, ஆசிரியர்கள், இதர பணியாளர்களுக்கு தொடர்ந்து பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, மருத்துவப் பரிசோதனை, சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும் என நடைபெற்ற கூட்டத்தில் அலுவலர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை - 2021

ஒரு பாதுகாப்பான சூழலில் ஆண்/ பெண் குழந்தைகள் தங்களுடைய முழுத் திறனையும் அடையும் வகையில் ஒவ்வொரு குழந்தையின் முழுமையான வளர்ச்சியை உறுதிசெய்தல், குழந்தைகளுக்கான நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் அடைதலே இலக்கு.

ஒவ்வொரு குழந்தையும் அனைத்துவிதமான வன்முறை, தவறாக நடத்தப்படுதல், சுரண்டலிலிருந்து பாதுகாக்கவும் அவர்களுக்குத் தரமான சுகாதார பராமரிப்பு மற்றும் கல்வி கிடைப்பதை உறுதிசெய்யவும் அவர்கள் சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்சினைகளிலும் அவர்களுடைய கருத்தைச் சுதந்திரமாக வெளிப்படுத்தும் சூழல் உருவாக்கும்.

எந்த ஒரு குழந்தையும் விடுபடாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கொள்கை கடைப்பிடிக்கப்படும். ஐந்து வயது முடிந்த அனைத்து குழந்தைகளுக்கும் அவர்களுக்கு அருகில் பள்ளியை அமைத்து குழந்தைகளின் ஆரம்பக் கல்வியை உறுதிசெய்தல்.

அனைத்து குழந்தைகளையும் பொறுப்புள்ள குடிமக்களாக மேம்படுத்த வழக்கமான பள்ளி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக அரசியலமைப்பு உரிமைகளை அறிமுகப்படுத்துதல். அனைத்துப் பள்ளிகளையும் குழந்தைகள் பாதுகாப்புக்கு உகந்ததாக மாற்ற குழந்தை பாதுகாப்பு கொள்கையை அனைத்துப் பள்ளிகளிலும் அறிமுகப்படுத்துதல்.

குழந்தைகள் நல ஆர்வலர்கள் விளக்கம்

பள்ளி அளவில் எழும் புகார்களை விசாரிக்க பாலியல் ரீதியாகத் தவறாக நடத்தப்படுவதிலிருந்து பாதுகாக்க போக்சோ சட்டத்தின்கீழ் அனைத்துப் பள்ளிகளிலும் புகார் குழுவை அமைத்தல். குழந்தைகளைப் பாதுகாப்பதற்கு என்றே பிரத்யேகமாக பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை அமைப்பை உருவாக்கிச் செயல்படுத்துதல் வேண்டும்.

தமிழ்நாடு அரசு சார்பில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இருப்பினும் குழந்தைகள் வளர்ப்பில் கவனமாக இருக்க வேண்டியது பெற்றோரின் கடமையாக உள்ளது. ஒரு குழந்தையின் வளர்ப்பு தன்னுடைய வீட்டில் இருந்து தொடங்குகிறது.

பெற்றோர்கள் இதனை மறவாது தங்களுடைய குழந்தைகளை வீட்டில் ஒழுக்கத்தோடு இருபாலரின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும்விதத்திலும், குழந்தைகளின் மனத்தில் பதியும்படி வளர்க்க வேண்டும். இன்றைய தலைமுறையின் மாற்றம் நாளைய தலைமுறையின் வரலாற்றை மாற்றியமைக்கும் என்று நம்பிக்கை உள்ளது" என்றார்.

இதையும் படிங்க: கோயம்பேட்டில் தக்காளி ஏற்றிவரும் வாகனங்களை நிறுத்த தற்காலிக இடம் - நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.