ETV Bharat / state

சென்னையில் சாலை அமைக்கும் பணி; இரவிலும் ஆய்வு செய்த தலைமை செயலாளர்!

author img

By

Published : Mar 14, 2023, 12:42 PM IST

Chief Secretary Irai Anbu inspected the road construction work in Chennai at night
சென்னையில் இரவில் நடைபெற்ற சாலை அமைக்கும் பணியை தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார்

பெருநகர சென்னை மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு நேற்று (13. 3.2023) இரவு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.55.61 கோடி மதிப்பீட்டில் 78.29 கிலோ மீட்டர் நீளத்தில் 452 சாலைகள், நகர்ப்புற உட்கட்டமைப்பு சேமிப்பு நிதித் திட்டத்தின்கீழ் ரூ.29.71 கோடி மதிப்பீட்டில் 51.37 கிலோ மீட்டர் நீளத்தில் 300 சாலைகள், நகர்ப்புற உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.39.39 கோடி மதிப்பீட்டில் 75.16 கிலோ மீட்டர் நீளத்தில் 405 சாலைகள் என மொத்தம் ரூ.124.71 கோடி மதிப்பீட்டில் 204.82 கிலோ மீட்டர் நீளத்தில் பேருந்து சாலைகள் மற்றும் உட்புறச்சாலைகள் உட்பட 1,157 சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ.151 கோடி மதிப்பீட்டில் 221.88 கிலோ மீட்டர் நீளத்தில் 1,408 சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் சாலைப்பணிகளை கண்காணிக்க முதன்மைச் செயலாளர், ஆணையாளர் தலைமையில் அலுவலர்கள், பொறியாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அக்குழுவினர் கண்காணிப்பில் இந்த சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேற்று (13.3.23) இரவு 10.30 மணியளவில் தேனாம்பேட்டை மண்டலம், வள்ளுவர் கோட்டம் பிரதான சாலையில் ரூ.109.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக மேற்கொள்ளப்பட்டு வரும் தார்ச்சாலை அமைக்கும் பணியினையும், அதனைத் தொடர்ந்து, ராமகிருஷ்ணா மடம் சாலையில் ரூ.121.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக மேற்கொள்ளப்பட்டு வரும் தார்ச்சாலை அமைக்கும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஏற்கனவே போடப்பட்ட சாலை அகழ்ந்தெடுக்கப்பட்டதையும், அதன் ஆழத்தையும் ஆய்வு செய்த தலைமைச் செயலாளர், புதிதாக போடப்படும் சாலை, அதன் மேல் உருளை இயந்திரத்தினால் இறுக்கம் ஏற்படுத்துவதையும், சாலை அளவினையும், தார்க் கலவையின் தரத்தினையும், சாலையின் நடுவிலிருந்து ஓரத்திற்கான சாய்வு அளவினையும் ஆய்வு செய்து, சாலைகளை உரிய அளவுகளின் படியும், சரியான தரத்திலும் அமைப்பதை உறுதி செய்திடவும், பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறின்றி சாலைப் பணிகளை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த ஆய்வின் போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, முதன்மைச் செயலாளர் / ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, இணை ஆணையர் (பணிகள்) சமீரன், துணை ஆணையாளர்கள் ஷேக் அப்துல் ரஹ்மான் (மத்திய வட்டாரம்), சிவகுரு பிரபாகரன் (வடக்கு வட்டாரம்), அமித் (தெற்கு வட்டாரம்), தலைமைப் பொறியாளர் இராஜேந்திரன், பேருந்து சாலைகள் மேற்பார்வை பொறியாளர் சரவணபவானந்தம் உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: பள்ளியை மேம்படுத்த முன்னாள் மாணவர்களை அணுகுங்கள்: தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.