ETV Bharat / state

உங்களைத் தேடி.. உங்கள் ஊரில் - முதலமைச்சர் ஸ்டாலின் புதுத் திட்டம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2023, 7:57 PM IST

Chief Minister Stalin launched the new ungalai thedi ungal ooril scheme
புதிய திட்டத்தை துவக்கிய முதலமைச்சர் ஸ்டாலின்

Chief Minister Stalin launched the new scheme: களத்தில் முதல்வர் திட்டத்தின் அடுத்த கட்டமாக உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்னும் புதிய திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் துவங்கி உள்ளார்.

சென்னை: உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசினால் அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள் மக்களைச் சரியாகச் சென்று அடைகின்றனவா? பல்வேறு துறைகளால் வழங்கப்படுகின்ற சேவைகள் மக்களுக்கு முறையாகக் கிடைக்கின்றனவா? என்பதை முதலமைச்சரே களத்திற்கு நேரடியாகச் சென்று, ஆய்வில் ஈடுபட்டு, அரசு இயந்திரத்தை முடுக்கி விட்டு, கள அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தையும் நடத்தி உரிய அறிவுரைகளை வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம் தான் களத்தில் முதல்வர் திட்டம்.

"மக்களிடம் செல், அவர்களுடன் வாழ், அவர்களிடமிருந்து கற்றுக்கொள், அவர்களை நேசி, அவர்களுக்குச் சேவை செய்" என்று சொன்ன பேரறிஞர் அண்ணாவின் கனவை நனவாக்கும் திட்டம் இது. மக்களுக்காக செயல்படுத்தப்படும் மக்கள் நலத் திட்டங்கள் மக்களின் நலனையும் முன்னேற்றத்தையும் மையமாகக் கொண்டு தீட்டப்படுகின்றன; செயல்படுத்தப்படுகின்றன.

அவற்றின் பலன் மக்களைச் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டியதும், மக்கள் அரசு நலத்திட்டங்களின் முழுப்பலனையும் அடைவதிலுள்ள இடர்ப்பாடுகளைக் களைய வேண்டியதும் அரசு இயந்திரத்தின் முதன்மையான பணி ஆகும்.

அரசு இயந்திரம், கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன், மக்களைத் தேடிச் சென்று பணியாற்ற வேண்டும். மக்களையும் அரசையும் இணைக்கும் பாலமாகச் செயல்பட்டு வருபவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்கள். ஒவ்வொரு கிராமத்தில் வசிக்கும் மக்களும் தங்கள் கிராம முன்னேற்றத்துக்கும், அரசு தொடர்பாக தனக்கிருக்கும் பிரச்சனைகளுக்கும், தீர்வை நாடிச் செல்லும் நபர் மாவட்ட ஆட்சித் தலைவர்.

தங்கள் அருகில் இருக்கும் பிற அதிகாரிகள் அன்புக்குரியவராக இருப்பினும், மக்களின் மகத்தான அன்புக்கும், ஆதரவுக்கும், நம்பிக்கைக்கும் உரியவர்களாக மாவட்ட ஆட்சியர்களைப் பார்க்கிறார்கள். மாவட்ட ஆட்சியர்களிடம் திங்கட்கிழமை தோறும் வந்து மனு அளிக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் பதவியின் கம்பீரம் மக்களைக் கலவரம் அடையச் செய்வதில்லை, மாறாக கவர்ந்திழுக்கிறது.

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டம் அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்வர்.

இந்தத்திட்டம், ‘களத்தில் முதல்வர்’ திட்டத்தின் அடுத்தகட்டம் எனலாம்; மக்களிடம் செல் என்று சொன்ன அண்ணாவின் கனவுத்திட்டம் என்றும் சொல்லலாம். உங்களை நாடி, உங்களை குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் வருகிறது. நானும் அரசு இயந்திரமும் களத்திற்கு வருகிறோம். கவனமுடன் உங்கள் குறை கேட்போம்; களத்திலேயே தீர்வு காண்போம்; மக்களின் கவலையைப் போக்குவோம்; மகத்தான தமிழ்நாட்டை உருவாக்குவோம்" எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: பார் கவுன்சில் தேர்வில் வெற்றி முதல் உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி வரை - பாத்திமா பீவி படைத்த சாதனைகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.