ETV Bharat / state

திமுக-விற்கு தைரியம் இருந்தால் வேங்கை வயலில் புது தொட்டி கட்டாமல் பொதுத்தொட்டி கட்ட முடியுமா - சீமான் ஆவேசம்

author img

By

Published : Apr 4, 2023, 6:04 PM IST

Updated : Apr 4, 2023, 6:42 PM IST

பி.கே.மூக்கையாதேவர் நூற்றாண்டு புகழ் வணக்க நிகழ்வில் பங்குபெற்ற  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
பி.கே.மூக்கையாதேவர் நூற்றாண்டு புகழ் வணக்க நிகழ்வில் பங்குபெற்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

போரூர் பகுதியில் அமைந்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பி.கே.மூக்கையாதேவர் நூற்றாண்டு புகழ் வணக்க நிகழ்வில் பங்குபெற்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் சாதி வாரி கணக்கெடுப்பு வேண்டும் என பேசினார்.

பி.கே.மூக்கையா தேவர் நூற்றாண்டு புகழ் வணக்க நிகழ்வில் பங்குபெற்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

சென்னை: போரூர் பகுதியில் அமைந்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பி.கே.மூக்கையாதேவர் நூற்றாண்டு புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழ் அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத அரசியல் ஆளுமை மூக்கையா தேவர்.

ஒரே நேரத்தில் சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் வென்றவர். குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்று சொல்ல முடியாது, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியில் தலைமை வகித்தவர்" என கூறினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்கள், மத்திய அரசு டெல்டா மாவட்டங்களில் 6 இடங்களில் நிலக்கரி எடுப்பதற்கான அனுமதி வழங்கியுள்ளது குறித்து எழுப்பிய கேள்விக்கு,

"நான் இருக்கும் வரை நிலக்கரியை எடுக்க விட மாட்டேன். ஏற்கனவே என்.எல்.சி விவகாரத்தில் விவசாயிகள் போராடி வரும் நிலையில் மீண்டும் ஆய்வுக்காக அனுமதி அளித்திருப்பது கண்டனத்திற்குரியது. அதற்கு எதிராக விவசாயிகளை திரட்டி எனது தலைமையில் கண்டிப்பாக போராட்டம் நடைபெறும்" என கடுமையாக தன் எதிர்ப்பினைத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "கலாஷேத்ரா விவகாரத்தில் மாணவர்கள் வீதியில் இறங்கி போராடும் வரை அரசு என்ன செய்தது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. சி.பி.சி.ஐ.டி போன்ற அமைப்புகள் இருந்தும் கல்லூரி வளாகத்தில் என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போது விசாரணை குழு அமைப்பது எந்த பயனும் தாரது" என கூறினார்.

பின்னர், சமூக நீதிக்கான மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை வைத்தது குறித்தான கேள்விக்கு, "ஆளும் கட்சியாக இருக்கும் திமுக, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என நாங்கள்தான் கோரிக்கை வைத்தோம்.

முறையாக குடிவாரி கணக்கெடுப்பு எடுத்தால் தான் எத்தனை தமிழ் குடிகள் தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளாக வஞ்சிக்கப்பட்டது தெரியவரும். நாங்கள் இட ஒதுக்கீடு கேட்கவில்லை. இட பங்கீடு தான் கேட்கிறோம். எங்களுக்கு வேண்டியது சலுகை அல்ல, உரிமை. அதனுடன் தேவேந்திரகுல வேளாளர் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து வெளியேற வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் இந்த அரசு செவி சாய்க்கவில்லை.

மேலும் பிற்படுத்தப்பட்டோர் என்கிற பெயரை ஆதி தமிழ் குடி என அரசு மாற்ற வேண்டும். சமூக நீதி பற்றி பேசும் திமுக அரசு வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டு இத்தனை நாட்கள் ஆகியும் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக அரசுக்கு தைரியம் இருந்தால் புது தொட்டி வேங்கை வயலில் கட்டாமல் பொதுத்தொட்டி கட்ட முடியுமா" என ஆளும் கட்சியான திமுகவிற்கு சவாலாக தன் கேள்விகளை முன்வைத்தார்.

இதையும் படிங்க: கால்வாய்க்குள் பஸ் ஓட்டிய திமுக எம்.எல்.ஏ.. இலவசப்பேருந்து தொடக்க நிகழ்ச்சியின் அதிர்ச்சி வீடியோ!

Last Updated :Apr 4, 2023, 6:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.