சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 23 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 23 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
23 persons arrested under goondas act: சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 23 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை: பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 588 பேரை சென்னை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்னையில் 23 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் வன்முறை மற்றும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அவ்வப்போது தகவல்களும், விமர்சனங்களும் வெளியாகி வந்தது. இந்த குற்றச் சம்பவங்கள் குறித்து காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், சென்னையில் கடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் கடந்த நவம்பர் 15ஆம் தேதி வரை பல்வேறு வழக்குகள் தொடர்புடைய நபர்கள் மீது காவல்துறை கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதில் குறிப்பாக 402 பேர் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாகவும், கொலை மற்றும் கொள்ளை முயற்சிகளில் ஈடுபட்டதாகவும் கூறி கைது செய்யப்பட்டவர்கள் என காவல் துறையினர் கூறியுள்ளனர்.
அதேபோல், திருட்டு மற்றும் செயின் பறிப்பு வழக்கில் 90 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், போதைப்பொருள் வழக்கு தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மொத்தமாக, 588 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 23 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். இதில் கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் உள்பட 23 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
