ETV Bharat / state

மிக்ஜாம் புயல்.. பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் - காவல்துறை எச்சரிக்கை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 3, 2023, 9:24 PM IST

chennai marina
chennai marina

Michaung Cyclone Police Altert: மிக்ஜாம் புயல் வலுப்பெற்றுள்ள நிலையில், பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே வர வேண்டாம் எனக் காவல் துறை எச்சரித்துள்ளது.

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மிக்ஜாம் புயலாக வலுப்பெற்று உள்ளது. தற்போது வடமேற்கு திசை நோக்கி புயல் வந்து கொண்டிருக்கிறது. இதனால் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னை பொதுமக்கள் தேவையின்றி யாரும் வெளியே வர வேண்டாம் என காவல்துறை எச்சரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அனைத்து நுழைவு வாயில்களையும் காவல்துறையினர் பேரி கார்டுகளை கொண்டு மூடி கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. கடல் சீற்றம் அதிகம் காணப்படுவதால் பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடற்கரைக்கு வரும் பொதுமக்களை காவல்துறையினர் எச்சரித்துத் திரும்பி அனுப்பி வைத்து வருகின்றனர். தொடர்ந்து உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் காவல்துறை தரப்பில் சில அறிவுரைகளைப் பொதுமக்களுக்கு வழங்கி உள்ளனர்.

புயல் கரையைக் கடந்து விட்டது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை சென்னை பொதுமக்கள் அத்தியாவசியமின்றி வெளியில் வர வேண்டாம் எனவும், சாலையில் தேங்கியுள்ள மழை நீரில் மக்கள் வாகனங்களை இயக்க வேண்டாம் எனவும், முடிந்தவரை பொது போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும், இடி மின்னல் ஏற்படும் போது எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களைப் பொதுமக்கள் பயன்படுத்தக் கூடாது என்றும் மரத்தடியில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் அரசு வெளியிடும் அறிவிப்புகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் பரவும் வதந்திகளை நம்பக் கூடாது என அறிவுறுத்தி உள்ளனர்.

இதையும் படிங்க: தெலங்கானா டிஜிபி பணியிடை நீக்கம் - இந்தியத் தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு..! என்ன காரணம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.