ETV Bharat / state

மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைக்கத்தடை கோரி வழக்கு; தீர்ப்பு ஒத்திவைப்பு

author img

By

Published : Dec 14, 2022, 5:47 PM IST

மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைக்க தடை கோரி வழக்கு
மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைக்க தடை கோரி வழக்கு

மின்சார மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என உத்தரவிடக்கோரிய மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. முதல் நூறு யூனிட் மின்சாரத்துக்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது. இந்த மானியத்தைப் பெற மின் நுகர்வோர், தங்கள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தி, கடந்த அக்டோபர் 6ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் வழக்கறிஞர் எம்.எல்.ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், 'ஆதார் இணைப்பு என்பது ஒரு வீட்டுக்கு மட்டுமே மேற்கொள்ள முடியும். வாடகை வீட்டுதாரர்களின் ஆதார் எண்ணை இணைத்தால், அவர்கள் காலி செய்த பின், புதிதாக வாடகைக்கு வருவோரின் ஆதார் இணைப்பை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படும்.

மேலும் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்களை நடத்தும் அரசு, ஆதார் சட்டப்படி, ஆதார் எண்ணுக்குப் பதில் பயன்படுத்தக் கூடிய வேறு ஆவணங்களைப் பற்றிய அறிவிப்பை வெளியிடவில்லை. ஆனால், ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் மின்சார மானியம் வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு சட்டத்தில் எந்த விதிகளும் வழிவகை செய்யவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுமட்டுமில்லாமல் மானியம் பெற ஆதாரை கட்டாயமாக்குவதாக இருந்தால், அதற்கு மாநில தொகுப்பு நிதியத்தில் இருந்து வழங்க வேண்டும். ஆதார் இணைப்பு சமூக நலத்திட்ட பயன்களைப் பெறுவதில் பாரபட்சத்தை ஏற்படுத்துவதால் மின் கட்டண மானியம் பெற ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக்கூடாது என மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு உத்தரவிட வேண்டும். ஆதார் இணைப்பை கட்டாயமாக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்' என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கும்போது வீட்டு உரிமையாளரின் ஆதாரை மட்டுமே இணைக்க முடியும் என்பதால், அரசின் மானியம் வாடகைதாரருக்கு கிடைக்காது எனவும், ஆதாரை இணைப்பது தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலை பெறவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில், வாடகைதாரர்கள் மானியம் பெறும் விஷயம் என்பது உரிமையாளருக்கும், வாடகைதாரருக்கும் இடையிலான பிரச்னை எனவும், மீட்டர் அடிப்படையில் தான் ஆதார் இணைக்கப்படும் எனவும், அனைத்து ஒப்புதல்களையும் பெற்ற பிறகே ஆதார் இணைப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை டிசம்பர் 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டங்கள் முறையாக நடைபெறவில்லை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.