ETV Bharat / state

இனி 1 மணிநேரத்திற்கு 45 விமான சேவை.. சென்னையில் நவீன மென்பொருள் அறிமுகம்!

author img

By

Published : Feb 21, 2023, 12:28 PM IST

“ஏ - சிடிஎம்” மென்பொருளால் சென்னை விமான நிலையத்துக்கு என்ன பயன்?
“ஏ - சிடிஎம்” மென்பொருளால் சென்னை விமான நிலையத்துக்கு என்ன பயன்?

சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவதில் ஏற்படும் கால தாமதங்களை குறைக்க ஏ - சிடிஎம் என்ற புதிய மென்பொருள் இன்று முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

சென்னை: சென்னை விமான நிலையத்தில், விமானங்கள் புறப்படுவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க 'ஏ – சிடிஎம்' (Airport Collaborative Decision Making) என்ற 'விமான நிலைய ஒருங்கிணைந்த முடிவு' எனும் புதிய மென்பொருள், இன்று (பிப்.21) முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய விமான நிலையங்களின் ஆணையம் சார்பில், சென்னை விமான நிலையத்தில் இந்த புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய மென்பொருள், மும்பை விமான நிலையத்தில் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. அந்த வரிசையில் மும்பைக்கு அடுத்த படியாக சென்னையில் இந்த புதிய மென்பொருள் தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளது. ஏ – சிடிஎம் என்ற மென்பொருளை பயன்படுத்துவதன் மூலமும், விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், விமான பாதுகாப்புத் துறை, விமான நிறுவனங்களின் அதிகாரிகள், கிரவுண்ட் லோடர்கள் எனப்படும் தரைப் பணியாளர்கள், வான்வொளி போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து ஒரே நேரத்தில் முடிவு எடுக்கும்போது, விமானங்கள் புறப்படுவதில் தாமதத்தை தவிர்க்க முடியும்.

ஏ - சிடிஎம் மென்பொருள் செயல்படும் முறை குறித்த விளக்கப்படம்
ஏ - சிடிஎம் மென்பொருள் செயல்படும் முறை குறித்த விளக்கப்படம்

அதேநேரம் விரைவான விமான சேவையை விரைந்து அளிக்க முடியும். இந்த புதிய பொது தளத்தில், விமான நிறுத்தத்தில் இருந்து, விமானம் எப்போது வெளியில் கொண்டு வரப்பட வேண்டும், விமானம் ஓடுதளத்திற்கு செல்ல எவ்வளவு நேரம் ஆகும், டாக்ஸிவேயில் விமானம் காத்திருக்காமல் நேரடியாக ஓடுபாதைக்குச் சென்று ஓடத் தொடங்கும். அது மட்டுமல்லாமல், விமானம் விரைந்து வானில் பறக்கத் தொடங்கும்.

அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து, விமானம் வானில் பறப்பதற்கான துல்லியமான முடிவை, இந்த பொதுத் தளம் உறுதி செய்யும். இதனால், சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்படுவது குறையும். அதோடு எரிபொருள் சிக்கனம் ஏற்பட்டு, செலவும் குறையும். இதன் மூலம் பயணிகளுக்கு தாமதம் இல்லாமல், சிறந்த சேவைகள் வழங்குதல், விமான நிறுத்தங்களின் மேலாண்மையை சிறப்பாக்குதல் உள்பட பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

ஏ - சிடிஎம் மென்பொருள் செயல்படும் முறை
ஏ - சிடிஎம் மென்பொருள் செயல்படும் முறை

முக்கியமாக, தற்போது சென்னை விமான நிலையத்தில் ஒரு மணி நேரத்துக்கு 35 விமான சேவை உள்ள நிலையில், இன்றைய தினத்தில் இருந்து புதிய மென்பொருள் பயன்படுத்துவதால், இனிமேல் ஒரு மணி நேரத்திற்கு 45 விமான சேவைகளாக அதிகரிக்கும். இந்த புதிய மென்பொருள் இன்று அதிகாலை முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இதையும் படிங்க: சென்னை ஏர்போர்ட்டில் விமானங்கள், பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.