வெப்பச் சலனம் காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பிற மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் ஆகியப் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்," மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த உச்ச உயர் தீவிர புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று முன் தினம் (மே.17) இரவு டையூவுக்கு 20 கிலோமீட்டர் வடகிழக்கு திசையில் சௌராஷ்டிரா கரையை கடந்தது.
தற்போது சௌராஷ்டிரா பகுதியில் வலுவிழந்து தீவிர புயலாக நிலைகொண்டுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக நேற்று (மே.18) நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பிற மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
இன்று (மே.19) திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். பிற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
20, 21 ஆகிய தேதிகளில் வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
22 ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
வெப்பநிலை முன்னறிவிப்பு: அடுத்த மூன்று தினங்களுக்கு தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸும் இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு (சென்டி மீட்டரில்): விராலிமலை (புதுக்கோட்டை) 4 செ.மீ, பொன்மலை (திருச்சிராப்பள்ளி), கொடைக்கானல், திருச்சிராப்பள்ளி விமான நிலையம், உதகமண்டலம், பந்தலூர் (நீலகிரி) தலா 3 செ.மீ, உசிலம்பட்டி (மதுரை), மருங்காபுரி (திருச்சிராப்பள்ளி), தளி (கிருஷ்ணகிரி), தலா 2, புதுக்கோட்டை , மதுக்கூர் (தஞ்சாவூர்) தலா 1 செ.மீ.
மீனவர்களுக்கான எச்சரிக்கை : 22 ஆம்தேதி அன்று தமிழ்நாடு கடலோர பகுதி, தென்மேற்கு வங்க கடல், அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 - 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு அன்றைய தினம் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடல் உயர் அலை முன்னறிவிப்பு: தென் தமிழ்நாடு கடலோரப் பகுதியில், குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 19 ஆம் தேதி இரவு 11.30 வரை கடல் அலை 1.5 முதல் 2.5 மீட்டர் உயரம் வரை எழும்பக்கூடும். இதனால் மீனவர்கள் இப்பகுதிகளில் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதையும் படிங்க : 'வயசானாலும் உங்க பலம்...' - இவங்க பாட்டி இல்ல.. ப்யூட்டி..