ETV Bharat / state

கோடநாடு வழக்கு - ஈபிஎஸின் முன்னாள் தனி பாதுகாப்பு அதிகாரியிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை!

author img

By

Published : Apr 20, 2023, 1:35 PM IST

Kodanadu
கோடநாடு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமியின் முன்னாள் தனி பாதுகாப்பு அதிகாரியிடம் 4 மணி நேரமாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் அவரிடமிருந்து முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவிற்கு சொந்தமான எஸ்டேட் பங்களாவில், கடந்த 2017ஆம் ஆண்டு கொலை கொள்ளை சம்பவம் நடந்தது. கும்பல் ஒன்று, பங்களாவின் காவலாளி ஓம் பகதூரை கொலை செய்துவிட்டு பல்வேறு முக்கிய பொருட்களை கொள்ளையடித்து சென்றது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்திற்கு பின் நடைபெற்ற இந்த கொலை, கொள்ளை சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சயான், மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் கனகராஜ் 2017ஆம் ஆண்டு சேலத்தில் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அதேபோல கோடநாடு எஸ்டேட்டில் கணினி ஆப்ரேட்டராக பணிபுரிந்து வந்த தினேஷ் என்பவரும் தற்கொலை செய்து கொண்டது இவ்வழக்கில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. இந்த கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதனிடையே திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மறு விசாரணை நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மறு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குழுவாக பிரிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக கோடநாடு எஸ்டேட் உரிமையாளர்களில் ஒருவர் சசிகலா, எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலாவின் உறவினர் விவேக் ஜெயராமன், முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோரிடம் தனிப்படை போலீசார் இதுவரை விசாரணை நடத்தினர்.

கோடநாடு கொள்ளை, கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து அண்மையில் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதன் பேரில், இவ்வழக்கின் விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி முருகவேல் நியமிக்கப்பட்டு, இவ்வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தி வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் தொடர்ச்சியாக சம்மன் அளித்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் விசாரணையில் கிடைத்த தகவலின் பேரில், இன்று(ஏப்.20) காலை 6 மணியளவில் சென்னை மந்தைவெளி சிஐடி காவலர் குடியிருப்பில் வசித்து வரும் ஆவடி ஆயுதப்படை உதவி ஆணையர் கனகராஜ் வீட்டில் கோயம்புத்தூர் சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீசார் திடீரென சோதனை மேற்கொண்டனர். இந்த கனகராஜ், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தனி பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர். சுமார் 4 மணி நேரமாக கனகராஜிடம் விசாரணை செய்த சிபிசிஐடி அதிகாரிகள், அவரது வீட்டிலிருந்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே கோட நாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பிருப்பதாக பத்திரிக்கையாளர் மேத்யூ சாமுவேல் வெளியிட்ட ஆவணப்படம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இவ்வழக்கில் பொய்யாக தனது பெயரை சேர்ப்பதாக எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் தனி பாதுகாப்பு அதிகாரியிடம் கோடநாடு வழக்கு சம்மந்தமாக விசாரணை நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு - இருவரின் ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.