ETV Bharat / state

ஆவின் பால் பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் விற்கக் கூடாது - பசுமை தீர்ப்பாயம் உத்தரவு என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 29, 2023, 10:52 PM IST

Plastic Ban: சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் மூலம் பால் பொருட்கள் விற்பனை செய்வதற்கு ஆவின் நிறுவனத்துக்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், ஆவின் நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: சமூகத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் மூலம் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்வதற்கு ஆவின் நிறுவனத்துக்கு தடை விதிக்க கோரிய மனுவுக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை, ஆவின் நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அய்யா என்பவர் தாக்கல் செய்த மனுவில், “தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் உள்ளிட்ட பால் பொருட்களை விற்பனை செய்து வரும் நிறுவனங்கள், பால் மற்றும் பால் சம்மந்தபட்ட பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் விற்பனை செய்து வருகிறது. இந்த பிளாஸ்டிக் பைகள் மக்கும் தன்மை அற்றவையாக உள்ளது.

இந்த பிளாஸ்டிக் பைகளை முறையாக சேகரித்து மறு சுழற்சி செய்ய எந்த வசதியும் செய்யப்படவில்லை. பிளாஸ்டிக் பைகளை பொதுமக்கள் தூக்கி எறிவதால் மாசு ஏற்படுகிறது. இதனால் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் கடும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்தியாவில், மராட்டியத்துக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் தான் அதிகளவு பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

அதேவேளையில் அதிகளவு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தும் இடமாகவும் தமிழ்நாடு உள்ளது. சமூகத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் மூலம் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்வதற்கு ஆவின் நிறுவனத்துக்கு தடை விதிக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத கண்ணாடி பாட்டில்கள் அல்லது டெட்ரா பாக்கெட் மூலமாக பால் விற்பனையை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்” என அதில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் இன்று (செப்.29) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த தீர்ப்பாயம், வழக்கு போடுவதோடு இல்லாமல் இதற்கான மாற்று வழிகள் என்ன என்பதையும் முன் வைக்க வேண்டும் என மனுதாரருக்கு அறிவுறுத்தியது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மாற்று வழி என்ன?, மறுசுழற்சி செய்வதற்கு மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன? உள்ளிட்டவை குறித்து பதில் மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறை, ஆவின் நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியோருக்கு உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை நவம்பர் 7-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.

இதையும் படிங்க: கட்டுப்பாட்டை இழந்த கார்.. பேருந்தின் மீது மோதி கோர விபத்து.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.