ETV Bharat / state

கஞ்சா போதையில் அதிகரிக்கும் குற்றங்கள்: திணறும் காவல் துறை!

author img

By

Published : Mar 21, 2021, 1:52 PM IST

Updated : Mar 21, 2021, 9:56 PM IST

சென்னையில் கஞ்சா போதையில் அதிகரிக்கும் குற்றங்கள்  கஞ்சா சிறப்பு தொகுப்பு  கஞ்சா போதையை தவிர்ப்பது எப்படி  கஞ்சா பழக்கத்திலிருந்து விடுபடுவது எப்படி  கஞ்சா போதையால் ஏற்படும் பாதிப்புகள் என்ன  Cannabis crime on the rise in Chennai  Cannabis Special Package  How to Avoid Cannabis Addiction  How To Get Rid Of Cannabis Addiction  What are the side effects of cannabis addiction
How To Get Rid Of Cannabis Addiction

சென்னையில் கஞ்சா போதையில் அதிகரிக்கும் குற்றங்களையும், கஞ்சா விற்பனையையும் தடுக்க முடியாமல் காவல் துறையினர் திணறி வருகின்றனர்.

இந்தியாவில் போதைப்பொருள் தடுப்புச் சட்டம் கடந்த 1985ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இருப்பினும், போதைப் பொருள்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. நாடு முழுவதும் கஞ்சா, குட்கா, மெத்தாம்பேட்டமைன் போன்ற போதை பொருள்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 3 கோடிக்கும் அதிகமாக இருப்பதாக போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.

ஊரடங்கால் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதா?

அதில், 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் பெரும்பாலானோர் போதைக்கு அடிமையாகி இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கரோனா ஊரடங்கின்போது மதுக்கடைகள் மூடப்பட்டதால் கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருள்களைப் பயன்படுத்தும் எண்ணிக்கை பெருமளவு பெருகியது. போதைப்பொருள் அதிகரிப்பால் நாட்டில் நடக்கக்கூடிய கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்களும் ஒரு புறம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் பலரும் சிறுவர்கள். அதில், அனைவருமே கஞ்சா, மதுபோதைக்கு அடிமையாகி பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதும், போதைக்காக கொள்ளையடிப்பதும் போன்ற அதிர்ச்சித்தகவல் வெளியானது. கடந்த வருடம் சென்னையில் நடந்த 147 கொலை வழக்குகளில் 60 விழுக்காடுக்கு அதிகமான கொலைகள் போதையில் நடந்திருப்பதாகவும், போதைக்காக நடந்த ஆதாய கொலைகள் எனவும் காவல் துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.

கல்லூரி மாணவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையா?

அதுமட்டுமில்லாமல் 246 செயின் பறிப்புச் சம்பவங்களில் 150 சம்பவங்கள் போதைப் பொருள்கள் வாங்க பணமில்லாத காரணத்தினால் நடந்ததாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் ஆந்திரா, விசாகப்பட்டினம் போன்ற பகுதிகளிலிருந்து லாரி, பேருந்து மூலமாக கஞ்சா கடத்திவந்து சென்னை, தேனி, நாமக்கல் போன்ற பகுதிகளுக்கு கொண்டு சென்று கல்லூரி, பள்ளி மாணவர்களை குறிவைத்து போதைக்கு அடிமையாக்கி கஞ்சா விற்பனையில் ஈடுபடுத்தி வருகின்றனர்.

பெரும்பாலான குற்றங்கள் போதையினால் நடப்பதை அறிந்த காவல் துறையினர் போதைப் பொருள்களை வேரோடு அழிக்க சென்னை காவல் ஆணையர் தலைமையில் 'டிரைவ் அக்கைன்ஸ்ட் டிரக்ஸ் திட்டம்' ஒன்றை உருவாக்கி தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்தச் சோதனையில் கடந்த ஆண்டு மட்டும் 522 வழக்குகள் பதிவு செய்து இரண்டாயிரத்து 996 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு காவல் துறையினர் 34 வழக்குகளைப் பதிவு செய்து 65 நபர்களை கைது செய்து 700 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்துள்ளனர்.

எப்படி போதைப் பொருள் பயன்பாட்டைக் குறைப்பது?

கஞ்சா போதையில் அதிகரிக்கும் குற்றங்கள்: திணறும் காவல் துறை!

இது குறித்து ஓய்வுபெற்ற எஸ்.பி கருணாநிதி ஈடிவி பாரத்திடம் கூறுகையில், "போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்படுபவரின் மீது போதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும். இந்தச் சட்டம் குறைந்தபட்சம் 10 அல்லது 20 ஆண்டுகள் எளிதில் பிணையில் வெளிவர முடியாத குற்றம். ஆனால், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகும் வழக்கை வாய்தா மேல் வாய்தா இழுத்து சாட்சியை அழித்து பிணை பெறுகின்றனர்.

விசாரணை அலுவலரை மாற்றுவதால், பிணை எளிதாக கிடைத்து குற்றவாளிகள் வெளியே வருகின்றனர். தண்டனை பெரிதாக கிடைக்காததால், மீண்டும் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுகின்றனர். மலேசியா போன்ற நாடுகளில் வழங்கப்படும் தண்டனைபோல் இங்கும் விதித்தால் மட்டுமே போதைப் பொருள் குறையும்" என்றார்.

இதையும் படிங்க: கஞ்சா செடிகளை கண்டறிய ட்ரோன் கேமரா

Last Updated :Mar 21, 2021, 9:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.