ETV Bharat / state

ஜல்லிக்கட்டு: காளையர்களை சமாளிக்க காளைகளுக்கு கடும் பயிற்சி

author img

By

Published : Dec 20, 2022, 5:01 PM IST

Etv Bharatஜல்லிக்கட்டு: காளையர்களை சமாளிக்க காளைகளுக்கு கடும் பயிற்சி
Etv Bharatஜல்லிக்கட்டு: காளையர்களை சமாளிக்க காளைகளுக்கு கடும் பயிற்சி

தமிழ்நாட்டில் அடுத்த மாதம் பொங்கல் விழா வர இருக்கும் ஜல்லிக்கட்டுத் தொடங்க உள்ள நிலையில் பல இடங்களில் மாடுகளின் உரிமையாளர்கள் போட்டிக்காக காளைகளை தயார்படுத்தி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு: காளையர்களை சமாளிக்க காளைகளுக்கு கடும் பயிற்சி

சென்னை: தமிழ்நாட்டின் பாரம்பரிய பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்படுவதை அடுத்து வீரம் வாய்ந்த முக்கிய விளையாட்டான ஜல்லிக்கட்டும் அடுத்த மாதம் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு காளை மாடுகளின் உரிமையாளர்கள் இந்த விளையாட்டுகளில் பங்கேற்கும் மாடுகளுக்கு தீவிரப் பயிற்சிகளை கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

ஜல்லிக்கட்டுப் போட்டிகள் அதிக அளவில் நடத்தப்படும் மாவட்டங்கள்: தமிழ்நாட்டில் மொத்தம் 38 மாவட்டங்கள் இருந்தாலும், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, திண்டுக்கல், தேனி, நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் அதிக அளவில் நடத்தப்படுகின்றன. இதர மாவட்டங்களிலும் இந்தப் போட்டிகள் ஆங்காங்கே நடத்தப்படுகின்றன.

மேலும் சுமார், 450 முதல் 500 இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் வருடந்தோறும் நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் மொத்தம் இரண்டு லட்சத்திற்கும் மேல் காளைகள் உள்ளன. எனினும், போட்டிகள் நடைபெறும்போது சுமார் 35,000 காளைகள் அனைத்து இடங்களிலும் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளிலும் பங்கேற்கும் என்கின்றனர், காளைகளின் உரிமையாளர்கள்.

காளைகளுக்கு அளிக்கப்படும் பயிற்சி முறை: பொதுவாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நெருங்கும்போது காளைகளுக்கு சிறப்பு மற்றும் தீவிரப் பயிற்சிகள் அளிக்கப்படுவது உண்டு. குறிப்பாக நீச்சல், நடை உள்ளிட்டப் பயிற்சிகள், கொம்புகளை பலப்படுத்துவதற்காக மண்ணில் குத்துதல் போன்ற பயிற்சிகள் காளைகளுக்கு கொடுக்கப்படுகின்றன. ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட பொருளாளர், அ. கண்ணதாசன் (என்கிற) சிவப்பட்டி கண்ணன், நம்மிடம் கூறுகையில், "காளைகளுக்கு நீச்சல் பயிற்சி அரை மணி நேரத்திலிருந்து முக்கால் மணி நேரம் வரை கொடுக்கப்படுகிறது. இதே போல காலை வேளையில் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி கொடுக்கப்படும்.

இந்த வகையான பயிற்சிகள் கொடுக்கும்போது உடலின் சக்தி அதிகரிக்கக் கூடும். மேலும் போட்டியின்போது களத்தில் உள்ள வீரர்கள் வாடி வாசலிலிருந்து காளைகள் வெளியே வரும்போதே, அவர்களை எதிர்கொண்டு பிடிபடாமல் வெளியேறும்", என்றார். ’காளைகளை மாலையில் வயல்வெளிகளில் அல்லது திறந்த வெளிப்பகுதியில் பெரிய கயிற்றின் மூலம் கட்டி வைப்போம்’ என்றார்.

மேலும் காளைகளுக்கான தீவனத்தைப் பொறுத்தவரை, பருத்தி கொட்டை, துவரை மாவு, உளுந்தம் பொட்டு, தவிடு உள்ளிட்ட உணவுகள் கொடுக்கப்படும் என்ற அவர் காளைகளுக்கு சுமார் 750 ரூபாய் செலவிட உள்ளது என்றார். இது சாதாரண நாட்களை விட அதிக செலவு என்றார்.

ஜல்லிக்கட்டு நடந்தே தீரும்: இதுகுறித்து ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு அமைப்பின் மாநிலத் தலைவர் ராஜேஷ் நம்மிடம் கூறுகையில், "2023ஆம் ஆண்டு தைப் பொங்கலையொட்டி தமிழ்நாட்டின் வீரம் மற்றும் கலாசார விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தே தீரும் என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.

நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுத் தொடர்பான வழக்கு இருந்தாலும், ஒரு சில நிபந்தனைகளை விதிக்கலாம் என்றாலும், போட்டிகள் நடக்கும் என்பதில் எவ்வித அச்சமும் இல்லை", எனத் தெரிவித்த அவர், விரைவில் இது சம்பந்தமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்திக்க இருப்பதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய ராஜேஷ், ’’வரும் பொங்கலன்று சென்னை அல்லது புறநகர்ப் பகுதிகளில் முதலமைச்சர் தலைமையில் ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்று திட்டமிட்டுள்ளோம்’’ எனத் தெரிவித்த அவர், ’தமிழ்நாடு அரசு வருடந்தோறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் குறைந்தபட்சம் ஐந்து வீரர்களுக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தார்.

கரோனா பெருந்தொற்றால் 2020, 2021ஆம் ஆண்டுகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் சரியாக நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எந்த மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றாலும், மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு மற்றும் திருச்சி மாவட்டத்தில் உள்ள சூரியூர் பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கென என அமோக வரவேற்பு உண்டு.

இதையும் படிங்க:அறநிலைத்துறையிடம் இருந்து கோயில்களை மீட்டு யாரிடம் ஒப்படைப்பது? - தருமபுரம் ஆதீனம் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.