ETV Bharat / state

"பாஜகவினர் அதிமுகவில் இணைவதை அண்ணாமலை பக்குவத்தோடு ஏற்க வேண்டும்" - ஜெயக்குமார்

author img

By

Published : Mar 8, 2023, 2:44 PM IST

அதிமுகவில் விரும்பி சேர்வோரை ஏற்றுக் கொள்கிறோம் எனவும், தாங்கள் யாரையும் இழுக்கவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

BJP
BJP

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (மார்ச்.8) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், புதிய உறுப்பினர் அட்டை அச்சிடும் பணி குறித்தும், நாளை நடைபெற உள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டம், மார்ச் 10ஆம் தேதி நடைபெற உள்ள தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டம், பொதுச்செயலாளருக்கான தேர்தல் தேதி அறிவிப்பு, மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "அதிமுக என்பது கண்ணாடி அல்ல, சமுத்திரம். அதன் மீது கல் வீசினால் கல்தான் காணாமல் போகும். அதிமுகவில் விரும்பி சேர்வோரை ஏற்றுக் கொள்கிறோம். பாஜக மட்டுமல்ல திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளில் இருந்தும் அதிமுகவில் இணைகின்றனர்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் பெருந்தன்மையுடன் செயல்படுவதுதான் அனைவருக்கும் நல்லது. அதிமுகவில் தானாக வந்து இணைகின்றனர், யாரையும் நாங்கள் இழுக்கவில்லை. அதிமுகவில் இணைவதை பக்குவத்தோடு அண்ணாமலை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதிமுகவில் ஒன்றரை கோடி தொண்டர்கள் கிளர்ந்து எழுந்தால் என்ன ஆகும்.

பாஜக தொண்டர்களை அக்கட்சியின் தலைவர்தான் கட்டுப்படுத்த வேண்டும். எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்தவர்களை கட்சியை விட்டு நீக்க வேண்டும். அண்ணாமலை என்ன வேண்டுமானாலும் பேசட்டும், ஆனால் ஜெயலலிதா மாதிரி என பேச வேண்டாம். உலகம் போற்றும் தலைவியான ஜெயலலிதா, தமிழக மக்களின் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஜெயலலிதா மாதிரி யாரும் கிடையாது, இனிமேலும் பிறக்க போவதில்லை. அதிமுக - பாஜக இடையே கூட்டணிதான் இருக்கிறதே. அதில் என்ன தர்மத்தை மீறிவிட்டோம்?" என்றார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதே, முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டவர் ஜெயக்குமார் என முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வைத்த விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "நான் சபாநாயகராக இருந்தபோது நாளைய முதலமைச்சர் என கூறி இருந்தால் 2016-ல் ஜெயலலிதா எனக்கு வாய்ப்பு கொடுத்திருப்பாரா? அதற்கு பின்பு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் என்னுடைய மகன் ஜெயவர்தனுக்கு வாய்ப்பு கொடுத்தார். என் நண்பர் வைத்திலிங்கம், சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்துவிட்டார்" என்று கூறினார்.

'நாலாண்டு காலம் 420-க்களாக வலம் வந்தவர்கள் கதையெல்லாம் ஊரறிந்த விவகாரம்' என்ற பாஜகவின் விளையாட்டு மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி கருத்து குறித்து பேசிய ஜெயக்குமார், "தலைவர் பொறுப்பில் இருப்பவர்கள் பேசினால், அதற்கு பதில் கூறலாம். முகவரி இல்லாதவர்களுக்கு பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை" என்று கூறினார்.

இதையும் படிங்க: ஓபிஎஸ் திமுகவுக்கு ஆதரவா? - வைத்திலிங்கம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.