ETV Bharat / state

கே.டி.ராகவன் விவகாரம் - அண்ணாமலை சொல்வது என்ன?

author img

By

Published : Aug 24, 2021, 3:35 PM IST

கே.டி.ராகவன் சட்டரீதியாக பிரச்னையை எதிர்கொண்டு நிரூபிப்பார்
கே.டி.ராகவன் சட்டரீதியாக பிரச்னையை எதிர்கொண்டு நிரூபிப்பார்

கே.டி.ராகவன் குறித்த சர்ச்சை காணொலி பிரச்னையை சட்டரீதியாக எதிர்கொண்டு நிரூபிப்பார் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை: இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஒரு சர்ச்சைக்குரிய காணொலி பதிவை நம்பி மட்டும் அதன் உண்மைத் தன்மையை அறியாமல் சம்பந்தப்பட்டவர்களிடம் அதன் மேல் விசாரணை செய்யாமல் குற்றம் சாட்டும் நபரின் வாய் வார்த்தை மட்டும் நம்பி எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? ஆகவே மதன் ரவிச்சந்திரன் இரண்டாம் முறை வலியுறுத்திய போதும் ஆதாரமாக பதிவுகளை சமர்ப்பிக்க கூறினேன்.

அதன் பின் மூன்றாவது முறையாக அலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பினால் ஏற்கனவே கேட்டுக்கொண்ட படி எனக்கு உடனடியாக நியாயம் கிடைக்குமா? நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேட்டிருந்தார். கட்சி ரீதியான நடவடிக்கை என்ற முடிவையும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தான் ஆடியோ பதிவுகளை வெளியிட போவதாக குறுஞ்செய்தியில் கூறியிருந்தார். முன்னர் இரண்டு முறை நேரில் சந்தித்தபோது நான் கூறிய படி குற்றம் என்ன என்பதை அறியாமல் நடவடிக்கை எடுக்க முடியாது என்ற முடிவில் உறுதியாக இருந்தேன். செய்து கொள்ளுங்கள் என்று சுருக்கமாக முடித்துவிட்டேன்.

இன்று காலை கே.டி ராகவன் அவர்களிடம் பேசினேன். 30 ஆண்டு காலத்திற்கு மேலாக உண்மையாகவும் நேர்மையாகவும் கட்சி பணியாற்றிய தன் மீது களங்கம் கற்பிக்கப் படவேண்டும் என்ற நோக்கத்துடன் கட்சியின் நற்பெயருக்கு ஊறுவிளைவிக்கும் எண்ணத்துடன் உயர் தொழில்நுட்பத்தில் தனக்கு எதிராக ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு என்றும் இதை தான் சட்ட ரீதியாக எதிர்கொள்ள இருப்பதாகவும் கே.டி ராகவன் தெரிவித்தார்.

சட்டரீதியாக பிரச்னையை எதிர்கொண்டு நிரூபிப்பார்

கட்சியின் மாண்பையும் செம்மையையும் கருதி தான் கட்சியின் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்யப் போவதாக தெரிவித்தார். நானும் அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டேன். கே.டி ராகவன் இந்த பிரச்சினையை முறைப்படி சட்டரீதியாக எதிர்கொண்டு திரும்புவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதே போல மதன் ரவிசந்திரன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கும் காணொலி பதிவில் இதுபோல இன்னும் வேறு நபர்களின் பதிவுகளும் வெளிவர இருக்கிறது என்று சொல்லி இருப்பது அவருக்கு ஏதேனும் ஒரு உள்நோக்கம் இருக்குமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.

பாரம்பரியத்தையும் மரபையும் சுட்டிக்காட்டும் பாரதிய ஜனதா கட்சியில் பொறுப்பிற்கு நிர்வாகத்திற்கும் இருக்கும் பெண்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கிறார்கள். மிகுந்த மரியாதையுடன் நடத்தப் படுகிறார்கள். இந்நிலையில், கட்சியின் மாண்பு கருதி இதுபோல குற்றம் சுமத்தப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது விசாரணை நடத்த பாஜக மாநில செயலாளர் மலர்கொடி தலைமையில் ஒரு விசாரணைக் குழு அமைத்து சாட்டப்படும் குற்றங்களில் காணொலி பதிவுகளில் உள்ள உண்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

கட்சி எப்படி பொறுப்பேற்க முடியும்?

இந்த காணொலி பதிவின் இறுதியில் தனக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு ஒரு சில நபர்கள் தான் காரணம் என்றும் மதன் கூறியிருக்கிறார். நான் தொடர்ந்து மூன்று முறை வலியுறுத்தியும் கட்சியின் தலைவருக்கும் அமைப்பு செயலாளருக்கும் ஆதாரங்களை காட்சி படுத்தாமல் தன் சொல்லை மட்டும் நம்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய மதன் அவருக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு பாரதிய ஜனதா கட்சி எப்படி பொறுப்பேற்க முடியும்?. அவரவர் செயலுக்கு அவர் அவரவர் தான் பொறுப்பு ஏற்க முடியும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பாஜக பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து கே.டி. ராகவன் விலகல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.