சென்னை: ஆயிரம் விளக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் கு.க. செல்வம். திமுகவைச் சேர்ந்த இவர் 2020 ஆகஸ்ட் 4ஆம் தேதி டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவைச் சந்தித்துப் பேசினார்.
தகவலறிந்த திமுக அவரை கட்சியிலிருந்து நீக்கியது. இருந்தாலும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் திமுக அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினராகச் செயல்பட்டுவந்தார்.
இதற்கிடையே, கடந்த ஆண்டு மார்ச் மாதம் கு.க. செல்வம் தியாகராய நகரில் உள்ள மாநில பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் சென்று பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டுவந்தார்.
மீண்டும் திமுகவில் இணைந்த கு.க. செல்வம்
பாஜகவிலிருந்து விலகிய கு.க. செல்வம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மீண்டும் அக்கட்சியில் இணைந்தார்.
அவருடன், அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளரைச் சந்தித்த கு.க. செல்வம், "பாஜகவிலிருந்து விலகி மீண்டும் தாய்க் கழகமான திமுகவில் இணைவதால் மகிழ்ச்சி அடைகிறேன்.
நீட் விலக்கு மசோதா
நீட் விலக்கு மசோதாவிற்கு அனுமதி அளிக்காதது, பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது, நாடு முழுவதும் மதத்தைப் புகுத்தும் முயற்சி என பாஜகவிலிருந்து விலகப் பல காரணங்கள் உண்டு.
கடந்த எட்டு மாதங்களில் திமுக அரசு மக்களுக்காகப் பல்வேறு திட்டங்களைச் செய்துள்ளது. பாஜக எனக்கு உரிய முக்கியத்துவம் வழங்கியது.
ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக பாஜகவில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள் பிடிக்காத காரணத்தால் தற்போது மீண்டும் திமுகவில் இணைந்துள்ளேன்.
கட்சி மாறிச் செல்வது பிடிக்கவில்லை
ஆயிரம் விளக்கு, தியாகராய நகர் தொகுதியில் பணியாற்றி திமுகவைத் தேர்தலில் வெற்றிபெறச் செய்வேன். எனக்கு வயதாகிவிட்டதால் இனி கட்சி மாறிச் செல்வது பிடிக்கவில்லை, எனவே தாய் வீடான திமுகவிலிருந்து விலக மாட்டேன்.
பாஜகவின் எதிர்காலம் தமிழ்நாட்டில் இருண்டிருக்கிறது. அடுத்த முறையும் திமுகவே ஆட்சியில் இருக்கும்" என்றார்.
இதையும் படிங்க: பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாத்தே நடிகை பரப்புரை!