ETV Bharat / state

75ஆவது சுதந்திர தினம்: போராட்ட வாழ்க்கையிலேயே வாழ்ந்து வரும் தகைசால் தமிழர் ஆர்.நல்லகண்ணு!

author img

By

Published : Aug 11, 2022, 10:10 AM IST

Updated : Aug 13, 2022, 6:12 AM IST

75ஆவது சுதந்திர தினம்: போராட்ட வாழ்க்கையிலே பொழுதை கழித்து வரும் தகைசால் தமிழர் ஆர்.நல்லகண்ணு!
75ஆவது சுதந்திர தினம்: போராட்ட வாழ்க்கையிலே பொழுதை கழித்து வரும் தகைசால் தமிழர் ஆர்.நல்லகண்ணு!

சுதந்திர போராட்டம், விவசாயிகள், தொழிலாளர்கள் உரிமை போராட்டம், ஜாதி எதிர்ப்பு போராட்டம் என மக்களுக்காக உழைத்த களப்போராளி ஆர்.நல்லகண்ணு குறித்து தொகுப்பை இக்கட்டுரையில் காணலாம்.

வயது பேதமின்றி அனைவராலும் தோழர் என்றழைக்கப்படுபவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், ஆர்.நல்லக்கண்ணு. இன்றைக்கும் இளைஞர்களுக்கான உத்வேகமாய், அரசியல் களத்தில் ஓய்வின்றி சுழன்று கொண்டிருப்பவர்தான் நல்லக்கண்ணு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான இவர், இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட தொடங்கினார்.

விடுதலைப் போராட்ட வீரராக தன் இளம் வயதை சிறைச்சாலையிலும், தலைமறைவு வாழ்க்கையிலும் கழித்துள்ளார். ஏழை எளிய மக்களுக்காக குரல் கொடுத்து, சமூக நல்லிணக்கத்தையும், சுற்றுச்சூழலையும் காத்திட தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் தமிழர்களின் நலன் வளர்ச்சிக்காக பங்காற்றிய நல்லகண்ணுவை பெருமைப்படுத்தும் வகையில் 75 ஆவது சுதந்திர தினத்தன்று தமிழக அரசால் ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கப்படுகிறது. தன்னலமற்ற அரசியல்வாதியாக தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பை அளித்து வரும் நிலையில், அவர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஏட்டுக்கல்வியில் நல்லகண்ணு: இவர் 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் நாள் ஸ்ரீவைகுண்டத்தில் விவசாயக் குடும்பத்தில் நான்கு ஆண்கள், ஐந்து பெண்கள் கொண்ட பெரிய குடும்பத்தில் மூன்றாவதாக பிறந்தார். பெற்றோர்கள் ராமசாமி – கருப்பாயி ஆவர். ஸ்ரீவைகுண்டம் காரனேசன் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி படித்தவர், மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் இண்டர்மீடியட் படித்தார்.

பி.எல் படிப்பு இரண்டாண்டுகள் படித்த நிலையில், தீவிர அரசியல் ஈடுபாட்டால் அப்படிப்பு முழுமையடையவில்லை. 1936 ஆம் ஆண்டிலிருந்தே பிரிட்டிஷ் அரசுக்கெதிராக செயல்படத் தொடங்கிய நல்லகண்ணு, 1937 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரசுக்கு வாக்களிக்கும்படி சிறுவர்களோடு சிறுவனாக கேட்டுக்கொண்டபோது அவருக்கு வயது 12.

பின்னர் 1938 ஆம் ஆண்டு நடந்த ஹார்வி மில் தொழிலாளர் வேலைநிறுத்தத்தின்போது, பெரியவர்களுக்கு உதவியாக சென்று அரிசி வசூலில் ஈடுபட்டார். அரிசி பெட்டிகளைத் தலையில் சுமந்து சென்றார். 1939 ஆம் ஆண்டு பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, போர் ஆதரவுப் பிரச்சார நாடகம் நடத்தப்பட்டது.

போராட்ட களம்: சுதந்திரப் போராட்ட தாகம் கொண்ட மாணவர்கள் துணையுடன் அந்நாடகத்தை எதிர்த்து முன்னணியில் நின்று குரல் கொடுத்தார். அப்போது ஒரு காவல் அலுவலர் மாணவர்களை அடித்தார். உடனே அதைக் கண்டித்து மாணவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அப்போது காவல்துறைக்கு ஆதரவாகச் செயல்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உரிமையை நிலைநாட்டினார்.

1940 ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்த நிதி வசூலை இவர் எதிர்த்துக் குரல் கொடுத்தபோது, மாணவர் என்ற காரணத்தால் கைது செய்யப்படாமல் அடித்து விரட்டியடிக்கப்பட்டார். 1943-1944 காலக்கட்டத்தில் ‘கலைத் தொண்டர் கழகம்‘ என்னும் அமைப்பை உருவாக்கி அதன் செயலாளராக செயல்பட்டார்.

எட்டயபுரத்தில் பாரதி நினைவு மண்டபம் கட்ட அவ்வமைப்பின் சார்பில் 400 ரூபாய் நிதி திரட்டிக் கொடுத்தார். 1944 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரானார். இதனைத்தொடர்ந்து சென்னைக்கு வந்து ‘ ஜனசக்தி அலுவலத்தில் செய்திக்குழுவில் பணியாற்றத் தொடங்கினார்.

தூணில் கட்டப்பட்ட நல்லகண்ணு: அப்போது ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இரண்டாயிரம் மூட்டை நெல் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்து ஜனசக்தி பத்திரிகையில் எழுதினார். அதைப் படித்த மாவட்ட ஆட்சியர், உடனடியாக நடவடிக்கை எடுத்து நெல் மூட்டைகளைப் பறிமுதல் செய்தார். நகர வாழ்க்கை பிடிக்காததால் சென்னையிலிருந்து புறப்பட்டு நாங்குனேரி தாலுகாவில் விவசாய சங்க ஊழியராக செயல்பட்டார்.

அம்பாசமுத்திரம், சிவகிரி, புளியங்குடி, தென்காசி மற்றும் நாங்குனேரி ஆகிய பகுதிகளில் திருவாவடுதுறை ஆதீனம் மற்றும் ஜீயர் மடங்களுக்குச் சொந்தமான நிலங்களில் விவசாயம் செய்த மக்களை பல மைல்கள் தினசரி நடந்தே சென்று பேசிப்பேசி முயன்று ஒன்று திரட்டி மடங்களுக்கு எதிராகப் போராடச் செய்தார்.

மிரட்டல்களுக்குப் பணியாமல் துணிச்சலாக விளைந்த நெல்லை அவரவர் வீடுகளுக்குக் கொண்டு செல்லும் நிலையை ஏற்படச் செய்தார். மடத்துத் தரப்பில் வழக்குகள் போடப்பட்டும் ஒன்றும் செய்ய முடியவில்லை. நாங்குநேரிக்கு ஒரு மே தினத்தன்று வில்லிசைக்கலைஞர் பிச்சைக்குட்டி மற்றும் பேராசிரியர் நா.வானமாமலை ஆகியோர் வந்திருந்தனர்.

அப்போது அங்கு சில தெருக்களில் பிற சமூகத்தினருக்கு அனுமதி கிடையாது. ஆனாலும் ஆயிரக்கணக்கான பேர் மீறி சென்றதால் ஜீயர் மடத்து ஆட்களால் கூட்டம் முடிந்து இரவு திரும்பிய நல்லகண்ணுவை, ஒரு தூணோடு சேர்த்துக் கட்டி வைத்து அடித்துள்ளனர். 1948 ஆம் ஆண்டில் கட்சி தடை செய்யப்பட்டபோது நல்லகண்ணு தலைமறைவானார்.

காமராஜருடன் சந்திப்பு: 1949 டிசம்பரில் இவர் கைது செய்யப்பட்டபோது, கூட்டாளிகளைப் பற்றியும் அவர்களது மறைவிடங்கள் பற்றியும் கேட்டு அவரது மீசையைப் பொசுக்கியும் முடிகளைப் பிய்த்தும் காவல்துறையினர் சித்திரவதை செய்தனர். இருப்பினும் தன் நிலைப்பாட்டில் தெளிவாகவும் உறுதிப்பாட்டுடனும் இருந்தார்.

நாங்குனேரி சப் ஜெயிலில் ஓராண்டு சிறை தண்டனை அனுபவித்த நிலையில், நெல்லைச் சதி வழக்கிலும் சேர்க்கப்பட்டதால் அவரது 29 வது வயதில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு மதுரை கொக்கிரகுளம் சிறையில் ஏழாண்டுகள் தண்டனை அனுபவித்து 1956 ல் விடுதலையானார்.

இவ்வாறு விடுதலையாகி வெளியில் வந்ததும், அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் காமராஜரைச் சந்தித்து சிறையிலிருக்கும் மற்ற தோழர்களையும் விடுதலை செய்யக் கேட்டுக்கொண்டார். மாநில அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டவர்களை விடுதலை செய்யலாம் என்றும் மத்திய அரசின் சட்டங்களுக்கு உட்பட்டவர்களை விடுதலை செய்ய இயலாது என்றும் கூறினார் காமராஜர்.

இவரது முயற்சியின் காரணமாக சிறையிலிருந்த பலருக்கும் ‘பி‘ வகுப்பு சிறை கிட்டியது. மதுரை சிறையில் நல்லகண்ணு இருந்தபோது அரசியல் கைதிகளுக்கான ‘பி‘ வகுப்பு சிறை கேட்டு 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தது குறிப்பிடத்தக்கது. சிறையிலிருந்து வெளிவந்த நல்லகண்ணுவுக்கு சாதி ஒழிப்புப் போராளி அன்னச்சாமியின் மகள் ரஞ்சிதம் என்பவருடன் 5.6.1958 அன்று நெல்லையில் திருமணம் நடைபெற்றது.

பட்டினி போராட்டம்: இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். பின்னர் தனது வாழ்க்கைத் துணையாகவும் உற்ற தோழராகவும் இருந்த அவரது மனைவி 2016 ஆம் ஆண்டு மறைந்தார். விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக இவர் 1966 ஆம் ஆண்டு அம்பாசமுத்திரத்தில் உள்ள கடனா நதியில் அணை கட்ட வேண்டும் என்று 11 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்தார்.

பக்தவத்சலம் ஆட்சியின் பிடிவாதம் தளர்ந்து, அக்கோரிக்கை ஏற்கப்பட்டு அணை கட்டப்பட்டது. 1967 ஆம் ஆண்டு நொச்சிக்குளத்தில் விவசாயிகள் பயிரிட்டு வந்த நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டதை எதிர்த்து, இவரது தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது.

எனவே இதனைக் கண்டித்து 12 நாட்கள் தொடர்ந்து பட்டினி போராட்டம் நடத்தி அப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டார். பின்னர் 1985 ஆம் ஆண்டில் குற்றாலம் அருவிக்கு அருகில் ரேஸ் கோர்ஸ் அமைக்கும் முயற்சி நடத்ததை எதிர்த்து தாமரையில் கட்டுரை எழுதிய பிறகு அம்முயற்சி கைவிடப்பட்டது.

2010 ஆம் ஆண்டு தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையைத் தடுக்க அவரே உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜராகி வாதாடி தடை உத்தரவு பெற்றார். தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் அணையில் மணல் கொள்ளை நடப்பதற்கு எதிராகத் தீவிரமாகப் போராடினார். 1969 ல் விவசாயிகள் பிரதிநிதியாக கிழக்கு ஜெர்மனிக்குச் சென்றார்.

எழுத்தாளராக... 20 நாள் சுற்றுப்பயணத்திற்குப் பின்னர் மாஸ்கோவின் லெனின்கிராடில் ஐந்து நாட்கள் தங்கியிருந்து பின்னர் நாடு திரும்பினார். தொடர்ந்து 1973 ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் சென்று மூன்று மாதங்கள் மார்க்சியப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு நாடு திரும்பினார். அவ்வப்போது நல்லகண்ணு கவிதைகளும் கட்டுரைகளும் எழுதுவார்.

ஏதேனும் இதழ்களில் நல்ல கட்டுரையை வாசித்துவிட்டால், சிறியவர் பெரியவர் என்றில்லாமல் கட்டுரையாளரை தொடர்பு கொண்டு பாராட்டுவதை வழக்கமாக கொண்டவர், நல்லகண்ணு. காசியில் பாரதியார் வாழ்ந்த வாழ்க்கை குறிப்புகளைத் திரட்டிக் கட்டுரை எழுதினார்.

பி.சீனிவாசராவின் வாழ்க்கை வரலாறு(1975), விடுதலைப் போரில் விடிவெள்ளிகள் (1982), கங்கை காவிரி இணைப்பு (1986), பாட்டாளிகளைப் பாடிய பாவலர்கள் (1986), நிலச்சீர்திருத்தம், மடம், கோயில் நிலங்கள், கிழக்கு ஜெர்மனியில் கண்டதும் கேட்டதும் என்னும் பயண நூல் ஆகியவற்றை எழுதியுள்ளார்.

இந்திய விவசாயிகள் பேரெழுச்சி என்னும் நூலை மொழிபெயர்த்துள்ளார். சுமார் 25 ஆண்டுகள் தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார். 13 ஆண்டு காலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராகப் பணியாற்றினார். தற்போது மத்திய கமிட்டி உறுப்பினர், தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவராக இருந்து வருகிறார்.

இவரது 80 வது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு கோடி ரூபாய் வசூலித்துக் கொடுத்தது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. ஆனால், அதைக் கட்சிக்கே திருப்பிக் கொடுத்துவிட்டார் நல்லகண்ணு. தமிழ்நாடு அரசு ‘அம்பேத்கர் விருது’ கொடுத்து ஒரு லட்சம் ரூபாயை வழங்கியது. அதில் பாதியைக் கட்சிக்கும் மீதியை விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் கொடுத்துவிட்டார், நல்லகண்ணு.

தகைசால் தமிழர்: இவர் மீதான அன்பினாலும் அக்கறையினாலும் ஒரு பத்திரிகையாளர் அவருக்குக் கார் ஒன்றைப் பரிசாக அளித்தபோது, அதனையும் கட்சிக்கே கொடுத்துவிட்டார். தனக்கென பெரிதாக எந்தத் தேவையும் நோக்கமும் கொண்டவராக ஒருபோதும் அவர் இருந்ததில்லை என்பதன் எளிய சான்றுகளே இவை.

இன்றளவும் விவசாயிகள், தொழிலாளர் நலனுக்காகவும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காகவும் கார்ப்பரேட்களுக்கு எதிராகவும் சாதி, மதவெறிக்கு எதிராகவும் தொடர்ந்து குரலெழுப்பி வருகிறார், ஆர்.நல்லகண்ணு.

தற்போது இவருக்கு 97 வயது ஆகும் நிலையில், தமிழ்நாட்டில் இந்த ஆண்டு ‘தகைசால் தமிழர் விருது’ வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி 75 வது சுதந்திர தினத்தன்று தமிழ்நாடு அரசு சார்பாக ஆர்.நல்லகண்ணுக்கு வழங்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு இவ்விருது வழங்கிய நிலையில், இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது நல்லகண்ணுக்கு வழங்கப்படுகிறது.

இதில் சங்கரய்யா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் என்பதும், நல்லகண்ணு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சாதி, ஒடுக்குமுறையை எதிர்த்தவர் அன்னை மீனாம்பாள் சிவராஜ்

Last Updated :Aug 13, 2022, 6:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.