ETV Bharat / state

இரண்டு நிமிடத்தில் நாயகன் எடுத்த முடிவால் குடும்பம் படும் பாதிப்பே ’நூடுல்ஸ்’ - இயக்குநராக அறிமுகமாகும் அருவி மதன்!

author img

By

Published : Aug 12, 2023, 11:53 AM IST

நூடுல்ஸ் திரைப்படம்
Noodles movie

அருவி மதன் இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் ஹரீஷ் உத்தமன், ஷீலா ராஜ்குமார் நடிக்கும் ’நூடுல்ஸ்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 1ம் தேதி வெளியாகிறது.

சென்னை: 'அருவி' படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் மதன். அதன்பின் கர்ணன், பேட்ட, அயலி, துணிவு, அயோத்தி, பம்பர், மாமன்னன், மாவீரன் எனத் தொடர்ந்து பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார்.

இந்நிலையில் ரோலிங் சவுண்ட் பிக்சர்ஸ் (ROLLING SOUND PICTURES) அருண்பிரகாஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘நூடுல்ஸ்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகி உள்ளார் அருவி மதன். தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் தனக்கென ஓர் அடையாளத்தைப் பெற்று பல படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும், சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்துவரும் பிரபல நடிகர் ஹரீஷ் உத்தமன் இப்படத்தில் கதைநாயகனாக நடித்திருக்கிறார்.

டூ லெட், மண்டேலா உள்ளிட்ட படங்களின் மூலம் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்ற ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களது மகளாக ரவுடி பேபி புகழ் ஆழியா நடிக்க, திருநாவுக்கரசு, மில்லர், வசந்த், பாரி, நகுனா, ஹரிதா மற்றும் பலர் நடிக்க, அருவி மதனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஒளிப்பதிவை வினோத் கவனிக்க, படத்தொகுப்பை சரத்குமார் மேற்கொள்ள ராபர்ட் சற்குணம் இசை அமைத்துள்ளார். கலை இயக்குநராக கென்னடி பொறுப்பேற்றுள்ளார்.

இதையும் படிங்க: Jailer Box office: ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

நல்ல கதையம்சம் கொண்ட கருத்தாழம் மிக்க படங்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் நாட்டம் கொண்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி 'நூடுல்ஸ்' படத்தை சமீபத்தில் பார்த்துள்ளார். படம் அவருக்கு மிகவும் பிடித்துப்போக தனது ‘வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்’ நிறுவனம் மூலமாக இப்படத்தை வெளியிடுகிறார். மேலும், இப்படம் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இப்படத்தின் கதை பற்றியும் படம் உருவான அனுபவம் குறித்தும் இயக்குனர் அருவி மதன் கூறும்போது, “இரண்டே நிமிடங்களில் பரிமாறக் கூடிய உணவு 'நூடுல்ஸ்'. இப்படி இரண்டே நிமிடங்களில் நமது தேவையை தீர்க்கக்கூடிய, நமது வாழ்க்கையை மாற்றக்கூடிய சம்பவங்கள் பலருக்கும் பல சமயம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த இரண்டு நிமிடத்தில் நாயகன் எடுத்த முடிவால், நாயகி செய்த செயலால் அந்தக் குடும்பமே காவல்துறை அதிகாரி ஒருவரிடம் வசமாக மாட்டிக்கொள்ளும் சூழல் ஏற்படுகிறது.

அதேபோல் கதை நெடுக தொடரும் இன்னும் சில இரண்டு நிமிட நிகழ்வுகளால் என்னென்ன திருப்பங்கள், எதிர் விளைவுகள் ஏற்படுகின்றன, இவர்கள் அந்தப் பிரச்சினையிலிருந்து எப்படித் தப்பிப்பார்கள் என்பதை மையப்படுத்தி இந்த 'நூடுல்ஸ்' படத்தின் திரைக்கதை உருவாகியுள்ளது.

குறிப்பாக நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த நாயகனும் நாயகியும் அவர்கள் குழந்தையும் எதிர்பாராத ஓர் சிக்கலில் தெரியாமல் மாட்டிக் கொண்டு படும் பாடும், அந்த நேரத்தில் அவர்களது பிரச்சனையை சரி செய்ய அவர்கள் வீட்டிற்குள் வரும் ஒருவர் செய்யும் உச்சபட்சக் காமெடியும், இதற்கிடையில் அந்தக் குடியிருப்பில் வசிப்போரின் பரிதவிப்பும் என படம் பார்க்கும் அனைவரையும் ஒன்றே முக்கால் மணி நேரமும் மிகுந்த எதிர்பார்ப்பினூடே சிரிப்பும், சுவாரசியமும், உற்சாகமுமாக உட்காரச் செய்யும் விதமாக இந்தப்படம் உருவாகியுள்ளது என கூறினார்.

இதையும் படிங்க: லட்சுமி மேனனுடன் திருமணமா? - நடிகர் விஷால் விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.