ETV Bharat / state

தமிழ்நாடு ஆளுநரின் 'சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருதுகள்' - ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!

author img

By

Published : Jun 4, 2023, 10:16 PM IST

governor
சமூகசேவை

2023ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு ஆளுநரின் சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருதுகளுக்கு வரும் 5ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் மாளிகை இன்று (ஜூன் 4) வெளியிட்ட செய்திக்குறிப்பில், "சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் அர்ப்பணிப்புடன் பங்காற்றும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, தமிழ்நாடு ஆளுநரின் 2023ஆம் ஆண்டிற்கான சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் சமூகத்திற்கான சிறப்பான சேவைகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட உள்ளது. அவர்களின் சேவையை முறையாக அங்கீகரித்து, ஊக்குவித்து, பாராட்டுவதன் மூலம் ஒருங்கிணைந்த சமுதாயத்தை உருவாக்க முடியும்.

2023ஆம் ஆண்டிற்கான சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருதுகளை பெறுபவர்களுக்கு வரும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று ஆளுநர் மாளிகையில் விருதுகள் வழங்கப்படும். விருதுகளுக்கான விண்ணப்பங்களை ஜூன் 5ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் ஒரு நிறுவனம் மற்றும் மூன்று தனி நபர்கள் என 4 பேர் தேர்வுச் செய்யப்படுவர். நிறுவனத்திற்கான விருதுத் தொகையாக 5 லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரம், தனிநபருக்கு 2 லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரம் வழங்கப்படும்.

தனிநபர்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் அல்லது பரிந்துரைக்கப்படலாம். விண்ணப்பதாரரும் பரிந்துரைக்கப்பட்டவரும் குறைந்தபட்சம் 10 வருடங்களாவது தமிழ்நாட்டில் அந்தந்த துறைகளில் செயல்பாட்டில் இருக்க வேண்டும். ஒவ்வொரு தனிநபரும் அல்லது நிறுவனமும் ஒரு பிரிவில் மட்டுமே விண்ணப்பிக்க அல்லது பரிந்துரைக்க முடியும்.

இதையும் படிங்க: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருதுக்கு தேர்வானோரின் பெயர்கள் வெளியீடு!

விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் ஒரு ஆய்வுக் குழுவால் பரிசீலிக்கப்படும். பிறகு, பரிந்துரைகள் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற நீதிபதிகளைத் தலைவராகக் கொண்ட அந்தந்தத் துறைகள் சார்ந்த அறிஞர்கள் உள்ளடக்கிய தேர்வுக் குழுக்களுக்கு அனுப்பப்படும். ஒரே தனிநபர் அல்லது நிறுவனம் இரண்டு பிரிவுகளுக்கும் விண்ணப்பம் செய்தாலோ அல்லது பரிந்துரை செய்தாலோ அது நிராகரிக்கப்படும். தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.

விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகளை அனுப்ப வேண்டிய முகவரி: ஆளுநரின் துணைச் செயலாளர் மற்றும் கட்டுப்பாட்டாளர், ஆளுநரின் செயலகம், ராஜ் பவன், சென்னை -600 022.

விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் ராஜ்பவன் இணையதளத்தில் (www.tnrajbhavan.gov.in) கிடைக்கும். மேலும், விண்ணப்பங்களை பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில், awardsrajbhavantamilnadu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: “சுற்றுச்சூழலுடன் இணைந்து வாழும் நமது வாழ்க்கை முறையை உலகுக்கு காட்ட வேண்டும்” - ஆளுநர் ஆர்.என்.ரவி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.