ETV Bharat / state

கோயில் திறப்பு விவகாரத்தில் அரசை ஸ்தம்பிக்க வைப்போம் - அண்ணாமலை

author img

By

Published : Oct 7, 2021, 6:32 PM IST

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாஜகவினர்
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாஜகவினர்

அனைத்து நாள்களும் கோயிலை திறக்கும் விவகாரத்தில் பத்து நாள்களுக்குள் நல்ல முடிவை எடுக்காவிட்டால், மக்களைக் கூட்டி அரசை ஸ்தம்பிக்க வைப்போம் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை: சென்னை பாரிமுனையில் அனைத்து நாள்களிலும் கோயில்களைத் திறக்க வலியுறுத்தி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாட்டில் உள்ள கோயில்களை வெள்ளி, சனி, ஞாயிறு போன்ற நாள்களில் மூடுவது மிகவும் கண்டனத்துக்குரியது. இந்நிலையில் நேற்று (அக்.7) அமாவாசையை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை சாலையில் அமர்ந்து செய்யக்கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாஜகவினர்
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாஜகவினர்

டாஸ்மாக் கடைகள் திறப்பு கேலிக்கூத்து

திரையரங்குகள், டாஸ்மாக் கடைகளை திறந்தால் வராத கரோனா, கோயில்களை திறந்தால் வரும் என்பது கேலிக்கூத்து. தனது சித்தாந்தத்தை அனைவரது வீட்டிலும் புகுத்துவதற்காக, திமுக இது மாதிரியான செயல்களில் ஈடுபடுகிறது. கோயில்களை வைத்து அரசியல் செய்வது திமுகவுக்கு ஒன்றும் புதிதல்ல.

இந்தச் சித்தாந்தம் கருணாநிதியால் எழுதப்பட்ட பராசக்தி பட வசனங்கள் மூலமாகவே புகுத்தப்பட்டுள்ளன. சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், தனது நிறுவனம் சார்பில் வெளியிடப்படும் திரைப்படத்தை திரையரங்கில் சென்று பார்க்க சமூக வலைதளங்களில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்துவிட்டு, இப்போது காவல்துறையினர் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடைகளை திறந்திருப்பது கேலிக்கூத்தாகும். திமுக கொண்டுவரும் மக்கள் நலத்திட்டங்களை, எப்போதும் பாஜக வரவேற்கும். அதே சமயம் மக்களுக்கு எதிரான திட்டங்களை எதிர்க்கவும் தயங்காது.

சிறை செல்ல தயார்...

இதேபோன்று கோயில்களில் உள்ள நகைகளை உருக்குவது போன்ற திட்டங்கள் மிகவும் கண்டனத்துக்குரியது. அமைச்சர் சேகர்பாபு இந்து அறநிலையத்துறை அமைச்சரா? அல்லது ஸ்டாலின் வீடு கிச்சன் கேபினட்டா எனவும் தெரியவில்லை. தமிழ்நாடு அரசு கோயில் நகைகள் விஷயத்தில் சட்டம், தர்மத்துக்கு எதிராக செயல்படுகிறது.

இது தொடர்பாக பாஜக சார்பில் நீதிமன்றம் செல்லவுள்ளோம். பத்து நாள்களில் கோயில்களை திறக்க சரியான முடிவுகள் எடுக்கப்படாவிட்டால் சிறை செல்லவும் தயாராக உள்ளோம். மக்களை வீதியில் நிறுத்தி போராடவும் தயங்க மாட்டோம்.

தமிழ்நாட்டில் உள்ள 4 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட கோயில்களின் முன்பு பொதுமக்களை வரவழைத்து அரசை ஸ்தம்பிக்க வைப்போம். இது தொடர்பாக அரசு பத்து நாள்களில் நல்ல முடிவை எடுக்கும் என நம்புகிறேன்” என்றார்.

இதில் பாஜக மகளிரணியினர் உள்ளிட்டோர் தீச்சட்டி ஏந்தியும், தேங்காய் உடைத்தும் அனைத்து நாள்களிலும் கோயில்களைத் திறக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: அணுக்கழிவு விவகாரம்: பிரதமருக்கு டி.ஆர். பாலு கேள்வி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.