ETV Bharat / state

தரமற்ற பொறியியல் கல்லூரிகளை மூடிவிட்டால் நாட்டுக்கு நல்லது - துணைவேந்தர் வேல்ராஜ்

author img

By

Published : Jan 9, 2023, 2:48 PM IST

தரமற்ற பொறியியல் கல்லூரிகளை மூடிவிட்டால் நாட்டுக்கு நல்லது - துணைவேந்தர் வேல்ராஜ்
தரமற்ற பொறியியல் கல்லூரிகளை மூடிவிட்டால் நாட்டுக்கு நல்லது - துணைவேந்தர் வேல்ராஜ்

தமிழ்நாட்டில் 100க்கும் குறைவான மாணவர் சேர்க்கை நடைபெறும் தரமற்ற கல்லூரிகளை, அக்கல்லூரி நிர்வாகத்தினரே மூடிவிட்டால் நாட்டுக்கு நல்லது என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் செய்தியாளர் சந்திப்பு

சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொறியியல், சுற்றுச்சூழல் மற்றும் புதிய தொழில்நுட்பம் சார்ந்த புத்தகக் கண்காட்சி 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த வேல்ராஜ், “ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய தொழில்நுட்பம் துறை சார்ந்த புத்தகக் கண்காட்சி நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டும் 3 நாட்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களிலேயே இளைஞர்கள் மூழ்கி இருக்கின்றனர். மேலும் தங்களின் மனஅழுத்தம் குறைவதற்கு நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளை நண்பர்களாக்கிக் கொள்கின்றனர்.

அதற்குப் பதிலாகப் புத்தகங்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். புத்தகம் வெறும் காகிதம் அல்ல, அது பேராயுதம். புத்தகங்களை அதிகளவில் படிக்கும்போது, முதல் பக்கத்தில் உள்ள அத்தியாகத்தைப் படிக்கும்போதே புத்தகத்தில் உள்ளவை தெரியும். இவ்வாண்டு புதிய தொழில்நுட்பம் சார்ந்த புத்தகங்கள் கண்காட்சியில் அதிகளவில் இடம் பெற்றுள்ளது.

குறிப்பாக கணினி, உலக அளவில் சவலாக இருக்க கூடிய காலநிலை மாற்றம் குறித்த புத்தகங்கள் அதிகளவில் இடம் பெற்றுள்ளது. 45 பதிப்பக விற்பனையாளர்கள் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை காட்சிப்படுத்தி உள்ளனர். இந்த புத்தகக் கண்காட்சியை அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்கள் மட்டுமல்லாது, மற்ற கல்லூரி மாணவர்களும், ஆசிரியர்களும், பேராசிரியர்களும், ஆராய்ச்சியாளர்களும் பார்த்து புத்தகங்களை வாங்கிச் செல்லலாம்.

தாய்மொழியில் கல்வி கற்றால் மாணவர்கள் எளிதில் கற்றுக் கொண்டு திறனை அதிகரிக்க முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் 2 கல்லூரிகளில் சிவில் மற்றும் மெக்கானிக்கல் துறைகள் தமிழ் வழியில் கற்பிக்கப்படுகின்றன. இனிவரும் நாட்களில் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டு, அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் தமிழ் வழியில் கல்வி பயிற்றுவிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.

மேலும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகத்தின் மூலம் அனைத்து புத்தகங்களும் தாய்மொழியில் மொழி பெயர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதற்காக புத்தகங்களை தமிழ் மொழியிலும் மொழி பெயர்த்து வருகிறோம். தமிழ்நாட்டில் உள்ள 450 பொறியியல் கல்லூரிகளில், 150 பொறியியல் கல்லூரிகளில் 100க்கும் குறைவாக மாணவர் சேர்க்கை உள்ளது.

இந்த கல்லூரிகளில் போதிய வசதிகள் இல்லை. சேர்க்கை குறைவாக உள்ள கல்லூரிகளை கல்லூரி நிர்வாகத்தினர் தாங்களாகவே மூடிவிட்டால், அவர்களுக்கும் நாட்டுக்கும் நல்லது. மேலும் சேர்க்கை குறைவாக உள்ள கல்லூரிகளும், தரமற்றிருக்கும் பொறியியல் கல்லூரிகளும் நிரந்தரமாக மூட மாணவர்கள் சேர்க்கை அனுமதி வழங்கும்போது, இவ்வாண்டும் பரிந்துரை செய்யப்படும்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் ஆலோசித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்திற்குப் பரிந்துரை செய்யப்படும். தரமற்ற கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், வேறு கல்லூரிகளுக்குச் சென்று படிக்க வேண்டும். அது அவர்களுக்கும் உயர் கல்விக்கும் நல்லது.

தரமற்ற கல்லூரிகளை தெரிவித்தால், பெற்றோர்களும் விழிப்புணர்வுடன் அந்த கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்காமல் இருப்பார்கள். கல்லூரிகளைச் சரியாக நிர்வகிக்க முடியாத நிர்வாகத்தினர், வேறு தொழிலுக்கு சென்று விடுவது நல்லது” என்றார்.

இதையும் படிங்க: ஆளுநர் ரவி சட்டமன்ற மரபுகளை மீறி உள்ளார் - முதமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.