ETV Bharat / state

'முகக் கவசம் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும்' - அன்புமணி ராமதாஸ்

author img

By

Published : Apr 12, 2020, 8:01 PM IST

anbumani ramadoss urged government for take action about people wear the mask
anbumani ramadoss urged government for take action about people wear the mask

சென்னை: கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முகக் கவசம் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் ஊரடங்கு ஆணை நடைமுறைப்படுத்தப்பட்டு இன்றுடன் 19 நாள்கள் ஆகும் நிலையில் ஊரடங்கை மீறி சாலைகளில் மக்கள் நடமாடுவது நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. சமூக இடைவெளி இல்லாத மனித நடமாட்டம் கரோனா வைரஸ் பரவ வழிவகுக்கும் என்று அச்சப்படும் நிலையில், அதைத் தடுக்க வாய்ப்புள்ள மாற்று நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்வதைக் கட்டாயமாக்கி உள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும். கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் உன்னத பணியில் மருத்துவர்கள், செவிலியர், சுகாதாரப் பணியாளர்கள், காவலர்கள் உள்ளிட்டோர் ஒவ்வொரு நாளும் ஏராளமானவர்களை எதிர்கொள்கின்றனர்.

அவர்களில் எவருக்கேனும் வைரஸ் தொற்று இருந்து, அவர்கள் முகக் கவசம் அணியாமல் இருந்தால் அவர்கள் மூலமாக மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு கரோனா வைரஸ் தொற்றக் கூடும். சீனா, ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் வெளியில் நடமாடுபவர்கள் முகக் கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மும்பை மாநகரத்தில் முகக் கவசம் அணியாமல் வருவோர் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 188 கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கப்படுகிறது. இதேபோல தமிழ்நாட்டிலும் முகக் கவசம் அணிவதைக் கட்டாயமாக்க அரசு ஆணையிட வேண்டும்.

முகக் கவசத்திற்குப் பற்றாக்குறை இருக்கும் பட்சத்தில் வீட்டில் துணியால் தயாரிக்கப்பட்ட கவசத்தைக் கூட அணியலாம். இம்மாத இறுதியில் கரோனா வைரஸ் பதற்றம் தணிந்து ஊரடங்கு தளர்த்தப்பட்டால் கூட அடுத்த ஒரு மாதத்திற்கு அனைவரும் முகக் கவசம் அணிவதை அரசு கட்டாயமாக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.