ETV Bharat / state

முதலமைச்சர் போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுடன் நேரடியாக பேச்சு நடத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 8, 2024, 7:12 PM IST

அன்புமணி ராமதாஸ்
முதலமைச்சர் போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுடன் நேரடியாக பேச்சு நடத்த வேண்டும்

Anbumani Ramadoss on Bus strike: தமிழக முதலமைச்சர் தொழிற்சங்க பிரதிநிதிகளை நேரடியாக அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளில் சாத்தியமானவற்றை நிறைவேற்ற வேண்டும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை: பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் போக்குவரத்துத் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் மக்களை கடுமையாக பாதிக்கும் என கூறியுள்ள பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் முதலமைச்சர் இதில் நேரடியாக தலையிட்டு வேலை நிறுத்தத்தை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

  • வேலை நிறுத்தம் மக்களை கடுமையாக பாதிக்கும்:
    போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுடன் முதலமைச்சர்
    மு.க.ஸ்டாலின் நேரடியாக பேச்சு நடத்த வேண்டும்!

    ஊதிய உயர்வு பேச்சுகளைத் தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 8 கோரிக்கைகள் தொடர்பாக போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள், போக்குவரத்துத்துறை அமைச்சர்…

    — Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) January 8, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“ஊதிய உயர்வு பேச்சுகளைத் தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 8 கோரிக்கைகள் தொடர்பாக போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், தொழிலாளர் நலத்துறை ஆகியோரிடையே சென்னையில் இன்று நடைபெற்ற முத்தரப்பு பேச்சுகள் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து திட்டமிட்டபடி நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. சென்னையில் சில பணிமனைகளில் இன்றே வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளது. அதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

போக்குவரத்துத் தொழிலாளர்கள் முன்வைத்த 8 கோரிக்கைகளில் ஒரு கோரிக்கையைக் கூட நிறைவேற்ற முடியாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கூறியது தான் பேச்சுகள் தோல்வியடைந்ததற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதிகாரிகள் நிலையில் பேச்சுகள் நடைபெறும் போது அவர்களால் கொள்கை முடிவு எடுக்க முடியாது என்பதால் தான் அமைச்சர் நிலையில் பேச்சு நடத்தப்பட்டது.

வழக்கமாக இத்தகைய பேச்சுகளின் போது தொழிலாளர்களின் சில கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு, மற்ற கோரிக்கைகள் குறித்து பின்னர் பேசிக்கொள்ளலாம் என்று முடிவு எடுக்கப்படும். அதன் மூலம் தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்படும். ஆனால், அமைச்சர் எந்த உடன்பாட்டிற்கும் வரவில்லை என்றும், தொழிலாளர்களை இரண்டாம் தர குடிமக்களைப் போல நடத்தியதாகவும் தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. அமைச்சரின் இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.

பொங்கல் திருநாளுக்கு இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ளன. வரும் வெள்ளிக்கிழமை முதல் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊருக்கு பயணிக்கத் தொடங்குவர். அத்தகைய தருணத்தில் வேலை நிறுத்தம் நடைபெற்றால் மக்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும்.

பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தாலும், தொழிலாளர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. வேலை நிறுத்த அறிவிப்பு வெளியானதுமே தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்த்தப்பட்டு விட்டன. ஆனால், இதுகுறித்தெல்லாம் போக்குவரத்துத் துறை கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.

தமிழக அரசின் தொழிலாளர் விரோத நிலைப்பாட்டால் தொழிலாளர்களுக்கும், மக்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது. இந்த சிக்கலில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக தலையிட வேண்டும். அவரே தொழிற்சங்க பிரதிநிதிகளை நேரடியாக அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளில் சாத்தியமானவற்றை நிறைவேற்ற வேண்டும். அதன் மூலம் அவர்களின் வேலை நிறுத்தத்தை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: போக்குவரத்து தொழிற்சங்க ஸ்டிரை நடந்தாலும் பிரச்சனை இல்லை..! பொங்கலுக்கு என்ன ஏற்பாடுகள்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.