ETV Bharat / state

‘காய்கறிகளின் சீரான விலையை உறுதி செய்ய தொலைநோக்கு திட்டம் தேவை’ - அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

author img

By

Published : Jun 27, 2023, 3:15 PM IST

Etv Bharat
Etv Bharat

தமிழ்நாட்டில் வெங்காயம், தக்காளியின் விலை உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் என்ன என்பதை தமிழ்நாடு அரசு அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காய்கறிகள் எப்பொழுதும் சீரான விலையில் விற்பனை செய்வதற்கான தொலைநோக்கு திட்டத்தை தயார் செய்ய வேண்டும் எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை: தமிழ்நாட்டில் காய்கறிகளின் விலை அதிகரித்து உள்ள விவகாரம் தொடர்பாக, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் தக்காளி விலை கிலோ ரூ.120 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. பெரும்பான்மையான காய்கறிகளின் விலைகள் கிலோ ரூ.80 - 120 என்ற அளவுக்கு உயர்ந்திருக்கின்றன. வரத்துக் குறைவால் சாம்பார் வெங்காயத்தின் விலையும் அதிகரித்து கிலோ 100 ரூபாயை எட்டியுள்ளது.

பல ஏழைக் குடும்பங்களில் ஒரு நாள் உணவுக்கான தொகையை, காய்கறிகள் வாங்குவதற்காகவே செலவிட வேண்டியிருக்கிறது. வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை தவிர்த்து விட்டு சமையல் செய்வது என்பதும் சாத்தியமில்லை. இதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விலை உயர்வைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசின் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சென்னையில் கூட்டுறவுத்துறை மூலம் இயக்கப்படும் பண்ணைப் பசுமைக் கடைகளில் தக்காளி கிலோ ரூ.64 - 68 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், பண்ணைப் பசுமைக் கடைகள், சென்னையில் மிகக்குறைந்த அளவிலேயே இருப்பதாலும், அக்கடைகளில் வழக்கமாக விற்கப்படுவதைப் போன்று மிகக்குறைந்த அளவிலேயே தக்காளி போன்ற காய்கறிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதாலும் அது சந்தையில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை; பொதுமக்களின் தேவைகளையும் போக்கவில்லை.

தமிழ்நாட்டில் அரிசி, பருப்பு உள்ளிட்ட இன்றியமையாத உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த சில வாரங்களாக உயர்ந்திருக்கின்றன. அரிசி விலை கிலோ ரூ.15 வரையிலும், துவரம் பருப்பு விலை கிலோ ரூ.45 வரையிலும், பிற பருப்பு மற்றும் மளிகை சாமான்களின் விலைகள் சராசரியாக 10 முதல் 20 விழுக்காடு வரையிலும் உயர்ந்துள்ளன. இத்தகைய சூழலில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலைகளும் உயர்ந்தால் அதை ஏழை மற்றும் நடுத்தர மக்களால் தாக்குப்பிடிக்க முடியாது. அரிசி, பருப்பு மற்றும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலைகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை தமிழ்நாடு அரசு மொத்தமாக கொள்முதல் செய்து தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுத் துறையால் நடத்தப்படும் பல்பொருள் அங்காடிகளிலும், நியாயவிலைக் கடைகளிலும் மலிவு விலையில் விற்க வேண்டும். தேவைப்பட்டால் சுய உதவிக் குழுக்கள், சிறு வணிகர்கள் மூலமாக நடமாடும் காய்கறி கடைகளை அமைத்து அவற்றின் வழியாகவும், வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை குறைந்த விலையில் விற்பனை செய்யலாம். அதன் மூலம் வெளிச் சந்தையிலும் காய்கறிகளின் விலைகளை கட்டுப்படுத்த முடியும். அதனால் மக்கள் நிம்மதியடைவார்கள்.

தமிழ்நாட்டில் தக்காளி அதிகம் விளையும் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன் தக்காளிக்கு சரியான விலை கிடைக்காததால் பல்லாயிரம் டன் தக்காளியை உழவர்கள் குப்பையிலும், சாலைகளிலும் கொட்டினார்கள். பல்லாயிரக்கணக்கான உழவர்கள் தக்காளியை பறிக்காமல் செடிகளுடன் சேர்த்து உழுது அழித்தனர். அப்போது ஒரு ரூபாய்க்கு கூட தக்காளியை வாங்க ஆள் இல்லை. ஆனால், இப்போது ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தக்காளி, சாம்பார் வெங்காயம் போன்றவற்றின் விலை உயர்வுக்கு காரணம் என்ன என்பதை அரசு ஆராய வேண்டும். திடீர் மழையால் தக்காளி பயிர்கள் சேதமடைந்தது தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால், அதை விட முதன்மையான காரணம் கடந்த காலங்களில் வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பயிரிட்டு, விலை வீழ்ச்சி அடைந்ததால் பெரும் இழப்பை சந்தித்த உழவர்கள், இனியும் அத்தகைய இழப்பை தாங்க முடியாது என்ற எண்ணத்தில் வெங்காயம், தக்காளி பயிரிட தயங்கி வேறு பயிர்களுக்கு மாறியதும் ஒரு காரணம் என்பதை அரசு உணர வேண்டும்.

தக்காளி அதிகம் விளையும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் 5ஆயிரம் ஏக்கர்களில் பயிரிடப்பட்டிருந்த தக்காளிச் செடிகளை நோய் தாக்கி விளைச்சல் குறைந்ததும் விலை உயர்வுக்கு காரணம் ஆகும். இந்த நிலையை மாற்றி, ஆண்டின் எல்லா காலங்களிலும் சந்தைகளில் வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலைகள் ஒரே சீராக இருப்பதையும், உழவர்களுக்கு நியாயமான விலை கிடைப்பதையும் உறுதி செய்வதற்காக வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையத்தையும், விளைபொருள் கொள்முதல் வாரியத்தையும் தமிழ்நாடு அரசு உடனடியாக அமைக்க வேண்டும்.

அவற்றின் மூலம் வேளாண் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்து, அரசே கொள்முதல் செய்ய வேண்டும். அத்துடன் விளைபொருட்கள் அதிகமாக விளையும் காலங்களில் அவற்றை சேமித்து வைப்பதற்காக குளிர்பதனக் கிடங்குகளை அமைக்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: விண்ணைத் தொடும் தக்காளி விலை; ரூ.110 வரை விற்பனை பொதுமக்கள் அவதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.