ETV Bharat / state

ஆட்டோ ஓட்டுநர் ஓட ஓட விரட்டி கொலை; 6 பேர் கைது..!

author img

By

Published : Jul 2, 2023, 6:13 PM IST

Etv Bharat ஆட்டோ ஓட்டுநர் ஓட ஓட விரட்டி கொலை
Etv Bharat ஆட்டோ ஓட்டுநர் ஓட ஓட விரட்டி கொலை

ரவுடி கும்பலுக்குள் ஏற்பட்ட தகராறில் 'என்னுடைய வாத்தியாரையே சீண்டுகிறாயா' என கேட்டு கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுநரை, பொதுமக்கள் முன்னிலையில் ஓட ஓட விரட்டி கொலை செய்த ஆறு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆட்டோ ஓட்டுநர் ஓட ஓட விரட்டி கொலை

சென்னை: வேளச்சேரி நேரு பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (25). ஆட்டோ ஓட்டுநரான இவர் நேற்று முந்தினம் (ஜூன் 30) இரவு 9.30 மணியளவில் கிண்டி மடுவாங்கரை பகுதி அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது திடீரென ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்று பட்டாக்கத்தியுடன் தினேஷை வழிமறித்து தகராறு செய்தனர். பின்னர் ஓட ஓட தினேஷை விரட்டினர்.

கிண்டி வண்டிக்காரன் தெருவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் தப்பிக்க தினேஷ் புகுந்த போதும் இரண்டு பேர் கடைக்குள் புகுந்து அங்கு இருந்தவர்களை கத்தியை காட்டி வெளியே அனுப்பினர். தொடர்ந்து, கடையை விட்டு வெளியே வந்த கடை உரிமையாளர் கடையின் ஷட்டரை மூடி பூட்டிவிட்டு கிண்டி காவல் துறையினருக்குத் தகவல் அளித்தார்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற கிண்டி காவல் துறையினர், கடையின் ஷட்டரை திறந்தனர். அப்போது, கடையின் உள்ளே இருந்து கத்தியுடன் கூலாக வெளியேவந்த இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆட்டோ ஓட்டுநர் தினேஷ் தங்களை கொலை செய்துவிடுவதாக மிரட்டியதால் தாங்கள் அவரை கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே கடையின் உள்ளே சென்ற காவல் துறையினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த திணேஷை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, கைது செய்யப்பட்ட இருவரிடமும் காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.

ஆதம்பாக்கம் பகுதியில் ரவுடி குணா தலைமையில் ரவுடி ராபின்சன், இருளா கார்த்திக் உள்ளிட்டோர் இணைந்து கொலை உள்ளிட்ட கட்டபஞ்சாயத்துகளில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் ரவுடி குணா இதிலிருந்து விலகி ஏரியாவில் ஆட்டோ ஓட்டி திருந்தி வாழ்ந்து வருகிறார். இதனையடுத்து ஆதம்பாக்கத்தில் நாகூர் மீரான் கோஷ்டியினருக்கும், ரவுடி ராபின்சன் கும்பலுக்கும் இடையே யார் தாதா என்ற பிரச்னையில் அவ்வப்போது கொலை, அடிதடி போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

கடந்தாண்டு இந்த பிரச்னையில் ரவுடி நாகூர் மீரானை ராபின்சன் கும்பலைச் சேர்ந்தவர்கள் கொலை செய்தனர். இந்த கொலை வழக்கில் ராபின்சன், சீசி மணி, இருளா கார்த்திக், உதய் உள்பட பலர் கோவை சிறைக்குச் சென்றனர். இதனால், நாகூர் மீரான் கும்பலைச் சேர்ந்தவர்கள், பழிவாங்கும் நோக்கில் ராபின்சனை கொலை செய்ய திட்டம் தீட்டி வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக கடந்த செப்டம்பர் மாதம் நாகூர் மீரான் கோஷ்டியினர் ராபின்சனின் தங்கையின் நண்பரை கடத்தி ராபின்சன் இருக்கக்கூடிய இடத்தை கேட்டு தொந்தரவு கொடுத்து, பட்டாக்கத்தி, நாட்டு வெடிகுண்டு வீசி அங்குள்ள இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தி அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவமும் அரங்கேறியது.

இந்நிலையில் கோவை சிறையில் இருந்து வரும் ரவுடி ராபின்சனுக்கு ஜாமீன் உள்ளிட்ட வழக்கு தொடர்பாக பணம் தேவைப்பட்டதால், திருந்தி வாழ்ந்து வரும் குணாவிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு தன்னிடம் பணமில்லை என குணா கூறியதால், ராபின்சனுக்கும் குணாவுக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ராபின்சன் கோஷ்டியினரான சீசி மணிகண்டன் மற்றும் பள்ளிக்கரணையைச் சேர்ந்த ஊசி உதய் இரண்டு தினங்களுக்கு முன்பு சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்துள்ளனர். பின்னர் இவர்கள் குணா மற்றும் அவரது நண்பரான தினேஷ் ஆகியோரை சந்தித்து மீண்டும் தொழிலில் இறங்கி, குணாவை சிறையிலிருந்து வெளியே எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்ததால் மீண்டும் இரு கோஷ்டியினருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆட்டோ ஓட்டுநர் தினேஷ், “எனது வாத்தியார் குணாவையே சீண்டுகிறார்களா எனக் கூறி உங்களையும், ராபின்சனையும் கொலை செய்துவிடுவேன்” என மணி மற்றும் உதயை மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சீசி மணிகண்டன் மற்றும் உதய் தனது கூட்டாளி எட்டு பேருடன் வேளச்சேரி பகுதிக்கு கத்தியோடு சென்று ஆட்டோவில் இருந்த தினேஷை விரட்டி கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், கொலைக்கு உடந்தையாக இருந்த காமேஷ், ஈஸ்வர், வசந்த், தினேஷ் ஆகியோரையும் காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆறு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் கோவை சிறையில் இருந்து கொலைக்கு தூண்டிய ரவுடிகளான ராபின் மற்றும் இருளா கார்த்திக் ஆகியோரை கைது செய்யவும் காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: மதபோதகரை அவமதிக்கும் விதத்தில் ட்விட்டரில் பதிவு - கனல் கண்ணன் மீது வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.