ETV Bharat / state

பொறியியல் பொதுப்பிரிவு முதல் சுற்று கலந்தாய்வில் 16,516 இடங்கள் தேர்வு!

author img

By

Published : Aug 2, 2023, 5:26 PM IST

Etv Bharat
Etv Bharat

பொறியியல் படிப்பில் சேர்வதற்கு பொதுப் பிரிவு மாணவர்களுக்கு முதல் சுற்று ஆன்லைன் கலந்தாய்வில் தற்காலிகமாக 16,516 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு அறிவித்துள்ளது.

பொறியியல் பொதுப் பிரிவு முதல் சுற்று கலந்தாய்வில் 16,516 இடங்கள் ஒதுக்கீடு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்விற்கு மே 5ஆம் தேதி முதல் ஜூன் 4ஆம் தேதி வரையில் விண்ணப்பம் பெறப்பட்டது. மேலும் மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய ஜூன் 9ஆம் தேதி வரையில் வாய்ப்பு வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 22ஆம் தேதி வெளியிடப்பட்டது.

மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் 3 சுற்றுகளாக நடைபெற்று வருகிறது. அதில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 22ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பொதுக் கலந்தாய்வு ஜூலை 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 3ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்விற்கு இதுவரையில் 442 கல்லூரிகளில் உள்ள 2,19,346 இடங்களில் ஒற்றைச் சாளர முறையில் 1,60,783 கலந்தாய்வின் மூலம் நிரப்பப்பட உள்ளது.

அதே போல் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் 12,059 இடங்களும், தொழிற்கல்வி பயின்ற மாணவர்களுக்கு 3,143 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்தக் கலந்தாய்வில் பங்கேற்பதற்கு 1 லட்சத்து 76 ஆயிரத்து 744 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 22ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை ஆன்லைனில் நடைபெற்றது. விளையாட்டுப் பிரிவு, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத் திறனாளி பிரிவினருக்கு சிறப்பு ஒதுக்கீட்டு இடங்களில் 685 இடங்கள் நிறைவடைந்தது.

இந்த கலந்தாய்வில் விளையாட்டுப் பிரிவில் 385 மாணவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 163 மாணவர்களுக்கும், முன்னாள் ராணுவத்தினர் பிரிவில் 137 மாணவர்களுக்கும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

முதல் கட்ட பொதுகலந்தாய்வு ஜூலை 28ஆம் தேதி ஜூலை 30ஆம் தேதி வரை மாணவர்களுக்கான விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் மாணவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ‌மாணவர்கள் இந்த இடங்களை ஆகஸ்ட் 1ஆம் தேதி உறுதி செய்ய வேண்டும்.

அவர்களுக்கான இறுதி ஒதுக்கீடு உத்தரவு ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியிடப்பட்டது. இது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் கூறியதாவது, “முதல் சுற்றுக் கலந்தாய்வில் தகுதியுள்ள 24,976 மாணவர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. அவர்களில் 20,127 மாணவர்கள் விரும்பும் கல்லூரிகளைப் பதிவு செய்தனர். அவர்களில் 16,516 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இவர்களில் 10,716 மாணவர்கள் விரும்பிய கல்லூரி கிடைக்கப் பெற்றதால் அதனை ஏற்றுக் கொண்டு கல்லூரியில் சேர்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும் 5800 மாணவர்கள் தற்பொழுது ஒதுக்கப்பட்ட இடத்தை ஏற்று கொண்டு முன்னோக்கிய நகர்விற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இட ஒதுக்கீடு கிடைக்கப்பெற்ற மாணவர்கள் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் 6ஆம் தேதிக்குள் கல்லூரி மற்றும் பொறியியல் சேர்க்கை மையத்திற்குச் சென்று சேர்க்கை பெற வேண்டும். மீதமுள்ள 3611 மாணவர்களுக்கு தற்பொழுது எந்த இடமும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மாணவர்களுக்கான 2ஆம் சுற்றுக் கலந்தாய்வு ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் துவங்கும்.

தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள 1 லட்சத்து 11 ஆயிரத்து 300 இளநிலைப் பட்டப்படிப்புகளில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 224 மாணவர்கள் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை சேர்ந்துள்ளனர். அவர்களில் 45 ஆயிரத்து 965 மாணவர்களும் 56 ஆயிரத்து 259 மாணவிகளும் கலை மற்றும் அறிவியல் பாடப் பிரிவில் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.

அதேபோல் அரசுப் பள்ளியில் படித்த 27 ஆயிரத்து 775 மாணவர்கள் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் நிதி உதவி பெற உள்ளனர். இது வரை ஒரு லட்சத்து 10 ஆயிரம் மாணவிகள் உதவித்தொகை பெற்று வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிமுக ஆட்சியில் டெண்டர் முறைகேடு வழக்கு: 5 நிறுவனங்களின் வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.