ETV Bharat / state

"மத்திய அரசு அனைத்து மாநிலங்களிலும் இந்தியை திணிக்க முயற்சிக்கிறது"

author img

By

Published : Feb 17, 2023, 5:31 PM IST

All
All

இந்திய அரசியலமைப்புக்கு எதிராக அனைத்து மாநிலங்களிலும் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக மாநில கல்விக்கொள்கை குழு உறுப்பினர் ஜவகர் நேசன் தெரிவித்தார்.

சென்னை: சென்னை தியாகராய நகரில் அகில இந்திய கல்வி பாதுகாப்புக் குழுவின் சார்பில், மொழிப் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சியைக் கண்டித்தும், ஆங்கிலத்தை அகற்றிவிட்டு இந்தியை ஒற்றை ஆட்சிமொழியாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த மாநாடு நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு, தமிழ் மொழிக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர். பின்னர் இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மாநில கல்விக்கொள்கை குழு உறுப்பினர் ஜவகர் நேசன், "மத்திய அரசு ஆங்கிலத்தை அகற்றி விட்டு, இந்தியை ஒற்றை ஆட்சி மொழியாக்குவதற்கு எதிராக தென்னிந்திய அளவில் மொழி பாதுகாப்பு மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை இந்தி திணிப்பிற்கு எதிரான இரண்டாவது மொழிப்போரின் தொடக்கமாக எடுத்துக்கொள்ளலாம்.

இந்தியை ஆட்சி மொழியாகவும், அலுவல் மொழியாகவும் இந்தியா முழுவதும் செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இந்திய அரசியலமைப்புக்கு எதிராக இந்தியை திணிக்கின்றனர். அரசியல் வழியாக இந்தியையும், தேசியக் கல்விக் கொள்கை மூலம் சமஸ்கிருதத்தையும் மாநிலங்கள்தோறும் கொண்டு செல்ல மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி இந்தியாவிற்கான ஆட்சி மொழி என்று எதுவும் கிடையாது. இவ்வளவு நாள் இந்தி படிக்க வேண்டும் என வற்புறுத்திய மத்திய அரசு, தற்போது ஆங்கிலத்தையும் நீக்கிவிட்டு, இந்தியை மட்டுமே கற்க வேண்டும் என முன்மொழிகிறது.

ஒரே இரவில் தேசிய கல்விக்கொள்கையை மாநிலங்களுக்குள் புகுத்தி விட முடியாது. அது சாத்தியமும் கிடையாது. தமிழ்நாட்டிற்கான மாநில கல்விக் கொள்கையின் வரைவு தயார் செய்யப்பட்டு வருகிறது. அதற்கானப் பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால், இன்னும் கால அவகாசம் தேவைப்படும். சரியான நேரத்தில் முறையான கட்டமைப்புகளுடன் மாநிலக் கல்விக்கொள்கை கொண்டு வரப்படும்" எனத் தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டியின் பொதுச்செயலாளர் தருண்காந்தி நஸ்கர், தமிழ்நாட்டில் நடத்தப்படும் இந்தி மொழி எதிர்ப்பு கருத்தரங்கை தொடர்ந்து, பிற மாநிலங்களிலும் நடத்தப்படும் எனவும், ஆங்கில மொழியை நீக்கிவிட்டு இந்தியை கொண்டு வருவதை ஏற்க முடியாது எனவும் கூறினார்.

இதையும் படிங்க: கியூட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு சலுகை - என்டிஏ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.