ETV Bharat / state

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக செயற்குழு - பொதுக்குழு கூட்டம் தொடங்கியது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 26, 2023, 10:41 AM IST

கூட்டணி குறித்த முக்கிய முடிவுகளுக்கு வாய்ப்பு உள்ளதா
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்

AIADMK GC Meeting: பாஜகவுடனான கூட்டணி முறிவுக்குப் பின்னும், எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகும் முதல்முறையாக கூடியுள்ள அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.

சென்னை: அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று (டிச.26) தொடங்கியது. நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்த முக்கிய முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து மாநிலங்களிலும் உள்ள கட்சித் தலைவர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாஜகவுடன் கூட்டணியில் இருந்து வந்த அதிமுக, இடையில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக கூட்டணியை முறித்துக் கொண்டது. இந்த சூழலில் அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் காலை 10.35 மணிக்கு அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இந்த கூட்டம் தொடங்கியது.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி: ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவு..!

இதனையடுத்து, மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் படங்களுக்கு ஈபிஎஸ் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இதுவாகும். மேலும், பாஜகவுடனான கூட்டணி முறிவுக்கு பின் நடக்கும் முதல் கூட்டம் இது என்பதால், கூட்டணி குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணியை தீர்மானம் செய்வதில் பொதுச் செயலாளருக்கு அதிகாரம் வழங்குவது, மழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு தமிழக அரசை கண்டித்தும், பாதிப்புகளுக்கான காரணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவது, பல ஆண்டுகளாக தமிழக சிறைகளில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்பதால், இந்த கூட்டம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: 'ஊழல் வழக்குகளில் சிக்கும் திமுக அமைச்சர்களுக்கு புழல் சிறையில் தனி பிளாக்' - அண்ணாமலை விமர்சனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.