’அதிமுகவினர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்’ - திருமாவளவன் எச்சரிக்கை

author img

By

Published : Sep 27, 2022, 8:27 PM IST

’அதிமுகவினர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்...!’ - திருமாவளவன்

அதிமுகவை அழிக்க சங்பரிவார்கள் பார்க்கின்றனர் என்றும் அதிமுகவினர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் அண்ணா சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து, காவி துணியால் மூடி அவமதித்திருப்பது சங்பரிவார்களின் திட்டமிட்ட வெறிச்சயல் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதிமுகவைப் பயன்படுத்தி தமிழ்நாட்டை வன்முறைக் களமாக மாற்ற சனாதன சக்திகள் முயற்சி செய்கிறது. அதிமுகவை அழிக்க சங்பரிவார்கள் பார்க்கின்றனர். அதிமுகவினர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். தமிழ் இதழியலின் முன்னோடியும், 'தமிழர் தந்தை' என்று எல்லோராலும் அழைக்கப்படும் சி.பா.ஆதித்தனாரின் 118ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், கீழே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு மலர்களை தூவியும் விசிக தலைவர் திருமாவளவன் மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "சி.ப.ஆதித்தனார் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செய்து இருக்கிறோம். தமிழர்கள் வாழ்வுரிமைக்காக போராடியவர்களில் இவரும் ஒருவர். தமிழர்களுக்கு என்று ஒரு தாயகம் உருவாக வேண்டும்.

அது தமிழ் ஈழமாக இருக்க வேண்டும் என்று செயல்பட்டவர். அக்டோபர் 2ஆம் தேதி காந்தி பிறந்த நாள் அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் சேர்ந்து தமிழ்நாடு தழுவிய சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணியை நடத்த இருக்கிறோம்.

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் பங்கேற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம். சனாதன சக்திகளை எதிர்க்கிற அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். அனைவரும் ஒருங்கிணைந்து சனாதன சக்திகளை தனிமைப்படுத்த வேண்டும். அவர்கள் தீட்டும் சதி திட்டங்களை முறியடிக்க வேண்டும். மக்கள் விரோத திட்டங்களை முறியடிக்க வேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்தில் அண்ணா சிலையை அவமதிக்கும் வகையில் செருப்பு மாலை அணிவித்து காவி துணியால் மூடி அவமதித்தது சங்பரிவார்களின் திட்டமிட்ட வெறிச் செயல். அவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும்.

இதை விசிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றோம். தமிழ்நாட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு என்பது ஒரு கலாச்சாரமாக பரவி வருகிறது. அதற்குப் பின்னால் சங்பரிவார் அமைப்புகள் தான் உள்ளதாக விசிக கருத்தாக இருக்கிறது.

பாஜக கூட்டணியில் உள்ள அதிமுகவுக்கும் சமூக நல்லிலக்கண பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அதிமுகவை பயன்படுத்தி தமிழ்நாட்டை வன்முறைக் களமாக மாற்ற சனாதன சக்திகள் முயற்சி செய்கிறது. அதிமுகவை அழிக்க சங்பரிவார்கள் பார்க்கின்றனர்.

அதிமுகவினர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்திகிறோம். அவர்கள் குட்டிக் கர்னம் அடித்தாலும் தமிழகத்தில் அவர்கள் ஜெம்பம் பலிக்காது" என கூறினார்.

இதையும் படிங்க: ’காந்தி ஜெயந்தி கொண்டாட ஆர்எஸ்எஸ்க்கு உரிமை உண்டு’ - தமிழிசை சௌந்தரராஜன்


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.