தம்பதி கொலை வழக்கு... நடந்தது என்ன?... விவரிக்கும் கூடுதல் ஆணையர் கண்ணன்

author img

By

Published : May 8, 2022, 9:26 PM IST

செய்தியாளர்களைச் சந்தித்த கூடுதல் ஆணையர் கண்ணன்

சென்னை மயிலாப்பூரில் பணத்திற்காக தம்பதியை அடித்துக்கொன்று புதைத்த கார் ஓட்டுநர் உள்பட இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் குறித்து கூடுதல் ஆணையர் கண்ணன் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.

சென்னை: மயிலாப்பூர் துவாரகா காலனி பிருந்தாவன் நகரைச் சேர்ந்தவர், ஆடிட்டர் ஶ்ரீகாந்த். இவரது மனைவி அனுராதா. இவர்கள் நேற்று காலை கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, சென்னை எழும்பூரில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில், சென்னை கூடுதல் காவல் ஆணையர் கண்ணன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

முன்னதாக கொலையாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தோராயமான கணக்கீட்டில் 8 கிலோ தங்கம்(1000 சவரன்) மற்றும் 50 கிலோ வெள்ளி உள்ளிட்டவை வெளிப்படையாக மேடையில் காட்சிப்படுத்தப்பட்டது.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கூடுதல் ஆணையர் கண்ணன் பேசியதாவது, “மயிலாப்பூரில் கொலை செய்யப்பட்ட ஆடிட்டர் ஶ்ரீகாந்த் வீட்டின் முதல் மாடியில் மனைவி அனுராதா கொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டின் ஹால் பகுதியில் ஶ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட சடலங்களை நெமிலி அருகே உள்ள ஶ்ரீகாந்துக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் அவர்களது கார் ஓட்டுநர் கிருஷ்ணா புதைத்துள்ளார்.

கடந்த 11 ஆண்டுகளாக ஓட்டுநராகவுள்ள கிருஷ்ணா; ஶ்ரீகாந்த், அனுராதா தம்பதிக்கு நம்பகத்தன்மையுடன் இருந்து வந்தவர். கொலையாளியின் தந்தை 20 ஆண்டுகளாக காவலாளியாக இருந்து வந்துள்ளார்.

கலிபோர்னியா நாட்டில் இருந்து வந்த நபர்கள் திட்டமிட்டு கடத்திக்கொலை செய்யப்பட்டுள்ளனர். உருட்டுக்கட்டை மூலம் தாக்கி கொலை செய்துள்ளனர். முதல் தளத்தில் அனுராதாவையும், கீழ் தளத்தில் ஸ்ரீகாந்த்தையும் கொலை செய்துள்ளனர். தொலைபேசியில் பேசும்போது 40 கோடி ரூபாய் இருப்பதாக கொலையாளி நினைத்துக்கொண்டு அதைத் திருட திட்டமிட்டுள்ளார்.

தற்போது அவர்களிடம் இருந்து கிட்டத்தட்ட 1000 சவரன் நகைகளை மீட்டிருக்கிறோம். இந்த நகைகளை எடுத்துக்கொண்டு குற்றவாளிகள், நேபாளம் சென்று தப்பிக்க முயன்றனர். அவ்வாறு சென்றிருந்தால் இந்த நகைகளை மீட்கப் பல ஆண்டுகள் ஆகியிருக்கும். ஆனால், காவல் துறை வேகமாக செயல்பட்டு தப்ப முயன்ற குற்றவாளிகளை ஆந்திர காவல் துறையினர் உதவியுடன் கைது செய்துள்ளோம்.

வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளைத் திருடி விட்டனர். இதனால், அவர்கள் எத்தனை பேர்? எப்படி கொலை செய்தனர்? என்பது குறித்த தகவல் கிடைக்கவில்லை. கிருஷ்ணா, அவரது கூட்டாளி ரவி ஆகிய இருவரும் தம்பதி புதைக்கப்பட்ட இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். துல்லியமான ஆதாரங்கள் இருக்கக்கூடிய காரணத்தால் குற்றவாளிகளுக்குத் தக்க தண்டனை வாங்கித் தர முடியும். குற்றவாளிக்கும், குற்றவாளியின் தந்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

நாங்கள் இதனை முதலில் கடத்தல் என நினைத்தோம். ஆய்வு செய்ய சென்ற இடத்தில் ரத்தம் பார்த்தபோது தம்பதி தாக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. பின்பு நெமிலிசேரி பகுதிக்கு குழுவுடன் சென்றபோது தான், அங்கு இருக்கும் பண்ணை வீட்டில் தம்பதி புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பின்னரே இது கொலை என உறுதிசெய்துவிட்டோம். ஒரு பெட் கவர் கூட வீட்டில் இல்லாத காரணமாக, உடலை சுற்றி எடுத்துச்சென்று இருக்கலாம் அல்லது பொருள்களை எடுத்துச்சென்று இருக்கலாம் என கணிக்கப்பட்டது.

எவ்வாறு கொன்றார்கள்?முதலில் உருட்டுக்கட்டை கொண்டு அடித்துள்ளார்கள். பின்பு ஆஷா பிளேடு கொண்டு கழுத்தை அறுத்துள்ளார்கள். அடையாறு இந்திரா நகரில் இருக்கக்கூடிய உறவினர் ஒருவருக்கு, அமெரிக்காவில் உள்ள கொலை செய்யப்பட்ட தம்பதியின் மகள் போனில் அழைப்பு விடுத்து, வீட்டிற்குச்சென்று பார்க்க கூறியபோது சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வளவு நகைகளை வைத்திருக்கும் நபர்கள் வீடுகளைப் பாதுகாப்பது கடினம், மக்கள் வங்கி அல்லது கம்யூனிட்டி லாக்கர் பகுதிகளில் பாதுகாத்து வைத்துக்கொள்ளுங்கள்.

பணம் குறித்து பொதுவெளியில் பேசாதீர்கள்: பணப்பரிவர்த்தனை குறித்த பேச்சுகளை ரகசியம் காக்க வேண்டும். ரகசியம் காக்கவில்லை என்றால் பாதுகாப்பற்ற சூழல் நிகழ்ந்தது. இதுபோன்ற விசுவாசமான நபர்களுக்கும் நம் பொருள்கள் மீது ஆசை வரக்கூடும். வயதானவர்கள் புகார் கொடுக்கும்போது காவல் துறை அவர்களது வீட்டிற்கே சென்று புகார்களைப் பெற்று வருகின்றனர். அப்படி இருக்கும்போது, இந்த விவகாரத்தில் நம்பத்தகுந்த நபர் ஒருவரே கொலை செய்து குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

செய்தியாளர்களைச் சந்தித்த கூடுதல் ஆணையர் கண்ணன்

எங்கள் முன் வைக்கப்பட்டுள்ள தங்கம், வெள்ளி நகைகளை சரியாக கணக்கிட்டு தெரிவிப்போம். வெளி மாநிலத்தவர்கள் ஒவ்வொருவர் வீடுகளில் காவலாளிகளாக பணிபுரியும்போது, வீட்டின் உரிமையாளர்கள் காவல் துறையிடம் தனிப்பட்ட முறையில் தெரியப்படுத்தி, அவர்களை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். தற்போதைய சூழலில், FRS போன்ற நவீன அறிவியல் மென்பொருள் தொழில்நுட்பக் கருவிகளைக்கொண்டு குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முறை நிகழ்ந்து வருவதால், குற்றவாளிகளை கூடிய விரைவில் பிடிக்க உதவியாக இருக்கிறது” என்றார்.

இதையும் படிங்க: பணத்திற்காக தம்பதியை கொன்று பண்ணை வீட்டில் புதைத்த நேபாள கார் ஓட்டுநர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.