ETV Bharat / state

"வரதட்சணை கேட்டு தாக்கிய கணவர் மீது நடவடிக்கை" - காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் புகார் மனு

author img

By

Published : Mar 7, 2023, 3:49 PM IST

Etv Bharat
Etv Bharat

வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதுடன் கடுமையாகத் தாக்கிய கணவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாதிக்கப்பட்ட பெண், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை தியாகராய நகர், காஞ்சி காலனி பகுதியைச் சேர்ந்தவர், புவனேஸ்வரி. இவர் கடந்த 2016-ம் ஆண்டு மடிப்பாக்கத்தைச் சேர்ந்த பிரவீனை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் காதல் கணவர் மீது, காவல் ஆணையர் அலுவலகத்தில் புவனேஸ்வரி புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பான மனுவில், "பிரவீனை காதல் திருமணம் செய்து கொண்டேன். எனது பெற்றோர் 40 சவரன் நகை மற்றும் வீட்டுக்குத் தேவையான பொருட்களை சீர்வரிசையாக கொடுத்தனர். திருமணத்துக்குப் பின் பிரவீன் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். எனது பெற்றோர் அவருக்கு கப்பலில் வேலை வாங்கிக் கொடுத்தனர். பணியில் சேர்ந்த பின் 6 மாதங்களுக்கு ஒருமுறை வீட்டுக்கு வருவார்.

ஏற்கனவே 40 சவரன் நகைகளை எனது பெற்றோர் வரதட்சணையாக கொடுத்த நிலையில், கூடுதலாக நகைகளை கேட்டு என்னை தொந்தரவு செய்யத் தொடங்கினார். குடிபோதையில் அடிக்கடி என்னிடம் தகராறு செய்தார். இரண்டாவது முறை நான் கர்ப்பம் அடைந்த போது, கருவை கலைக்கக் கூறி எனது மாமனார், மாமியார் தொந்தரவு செய்தனர். 100 சவரன் நகை, இருசக்கர வாகனத்தை வாங்கித் தருமாறு பிரவீன் என்னை துன்புறுத்தி வந்தார்.

கடந்த 3-ம் தேதி மடிப்பாக்கத்தில் உள்ள பிரவீனின் இல்லத்துக்கு நானும், எனது பெற்றோரும் சென்றோம். அப்போது எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த எனது கணவர் பிரவீன் இரும்புக்கம்பியால் என்னையும், சகோதரரையும் கடுமையாகத் தாக்கினார். இதில் எங்கள் இருவருக்கும் கையில் காயம் ஏற்பட்டது. பின்னர் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றோம். இதுதொடர்பாக மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வரதட்சணைக் கேட்டு துன்புறுத்தியதுடன், தாக்குதல் நடத்திய பிரவீன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கேட்டுக் கொண்டுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக புவனேஸ்வரியின் கணவர் பிரவீன் தரப்பில், "எங்களுக்குள் எந்த விதமான பிரச்னையும் இல்லை. என் தாய், தந்தை இருவரும் அரசு வேலை பார்ப்பவர்கள். நான் எதற்காக அவர்களிடம் நகைகளை கேட்க வேண்டும். ஏற்கனவே அவர்கள் மீது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார்கள் இருக்கின்றன. எனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர், எனது தாய், தந்தையைத் தாக்கினார்கள். பதிலுக்கு நானும் தாக்கினேன். எனது குழந்தையிடம் என்னைப் பற்றி தவறாகக் கூறியுள்ளனர். என்னைப் பற்றி அவர்கள் அவதூறாகப் பேசிய ஆதாரங்கள் என்னிடம் உள்ளன" எனக் கூறியுள்ளார்.

புவனேஸ்வரி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விரைவில் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பொது இடங்களில் போஸ்டர்.. சென்னை மாநகராட்சி விடுத்த வார்னிங்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.