ETV Bharat / state

கைதிகளுக்கு ஆதார் அட்டை - சிறைத்துறை நடவடிக்கை!

author img

By

Published : Dec 1, 2022, 1:20 PM IST

Aadhar camp
Aadhar camp

தமிழ்நாட்டில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு ஆதார் அட்டை பெற்றுத் தர சிறைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. முதற்கட்டமாக திருச்சி மத்திய சிறையில் ஆதார் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

சென்னை: தமிழ்நாடு சிறைத்துறையின் கீழ் 9 மத்திய சிறைகள், 14 மாவட்ட சிறைகள், 96 கிளைச்சிறைகள், 5 பெண்கள் சிறப்பு சிறைகள், 12 பார்ஸ்டல் பள்ளிகள், திறந்தவெளி சிறைகள் என மொத்தம் 142 சிறைகள் உள்ளன. இந்த சிறைகளில் 23,592 கைதிகள் வரை அடைக்க முடியும். தற்போது சுமார் 18,000 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழக சிறைகள் 75 சதவிகிதம் வரை நிரம்பியுள்ளன.

சிறையில் உள்ள பெரும்பாலான கைதிகளிடம் ஆதார் அட்டை இல்லை. ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களும் இருப்பதில்லை. இதனால், சிறையில் இருந்து கைதிகள் விடுதலையாகி வெளியே சென்ற பின்னர், அவர்கள் வேலைக்கு விண்ணப்பிப்பதிலும், தனியாக தொழில் தொடங்க வங்கிக் கடன் பெறுவது உள்ளிட்டவற்றிலும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

இந்நிலையில் கைதிகளின் சிரமங்களைப் போக்கும் வகையில், ஆதார் அடையாள அட்டை வழங்கும் UIDAI ஆணையம், தற்போது Prisoners Induction Document (PID) என்ற ஆவணத்தை ஆதார் அட்டை பெறுவதற்கான ஆவணமாக பயன்படுத்தலாம் என ஒப்புதல் வழங்கியது. சிறைத்துறையில் பயன்படுத்தப்பட்டு வரும் e-prison மென்பொருள் வாயிலாக PID ஆவணத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

இதையடுத்து தமிழக சிறைகளில், அனைத்து கைதிகளுக்கும் ஆதார் அட்டை பெற்றுத் தருவதற்கான சிறப்பு முகாமை நடத்த சிறைத்துறை திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக நேற்று(நவ.30), திருச்சி மத்திய சிறையில் இதற்கான சிறப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் 300 சிறைவாசிகளுக்கு ஆதார் அட்டைகள் பெற்றுத் தருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், சிறைத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: TNPSC: டிச.26-ல் சிறை அலுவலர் பணி தேர்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.