ETV Bharat / state

மாநில சுயாட்சி நாயகன் மு.கருணாநிதியின் 5ஆம் ஆண்டு நினைவு நாள்..

author img

By

Published : Aug 7, 2023, 11:36 AM IST

மாநில சுயாட்சி நாயகன் மு.கருணாநிதியின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அவர் தொடர்பான சிறப்புத் தொகுப்பு..

Etv Bharat
Etv Bharat

சென்னை: இந்திய அரசியலில் தமிழ்நாட்டு அரசியல் கொஞ்சம் வேறுபாடானது. மற்ற மாநில அரசியலில் எல்லாம் தலைவர்கள் உருவாக்கப்படுவார்கள். ஆனால், தமிழ்நாட்டு அரசியலில் மட்டும்தான் தலைவர்கள் உருவாவார்கள். அந்தவகையில் தமிழகத்தில் உருவான தலைவர்களான பெரியார், அண்ணா போன்றோர், அடுத்தடுத்து உருவாகும் தலைவர்களுக்கு ரோல் மாடல்.

இந்த ரோல் மாடல்கள் வரிசையில் இன்னொருவர் பெயரை இணைக்கலாம் என்றால் அது கருணாநிதிக்குத் தான் பொருந்தும். பெரியாரின் ஈரோட்டுப் பள்ளியில் பகுத்தறிவு பழகி, பேரறிஞர் அண்ணாவின் காஞ்சி கல்லூரியில் திராவிடத்திற்காகவும், சமூக நீதிக்காகவும் பம்பரமாய் சுழன்று, தமிழகத்தின் தலைவனாய் உயர்ந்தவர் கருணாநிதி.

பத்திரிகையாளர், திரைப்பட வசனகர்த்தா, தயாரிப்பாளர், பேச்சாளர், எழுத்தாளர், பெரும் புத்தக வாசிப்பாளர், கலை இலக்கிய ஆர்வலர், களச்செயல்பாட்டாளர், அரசியல்வாதி என்கிற பல்வேறு பரிமாணங்களோடு தன் இறுதி மூச்சு வரை தமிழை சுவாசித்த தமிழ் பித்தன் கருணாநிதி.

எழுத்தும் செயல்பாடும்: பராசக்தி படம், இச்சமூகத்தில் எவ்வளவு பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பது பெரும்பாலானோருக்குத் தெரியும். அந்த அதிர்வலையைத் தனது பேனா மூலம் எழுப்பியவர் கருணாநிதி. பராசக்தி படத்தில், மனிதனை மனிதனே ரிக்‌ஷாவில் இழுக்கும் பழக்கம் குறித்து 'நீ சென்னைக்கு மேயராக வந்து இந்த பழக்கத்தை மாற்றிவிடு' என்ற வசனம் மூலம் வெளிப்படுத்தினார்.

எழுதியதோடு மட்டும் அவர் நிற்கவில்லை. அண்ணாவின் மறைவுக்குப் பிறகு தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அவர் போட்ட முக்கியமான கையெழுத்துக்களில் 'கை ரிக்‌ஷா முறை ஒழிப்பும்' ஒன்று. எழுதிவிட்டாலே சமூகம் திருந்திவிடும் என்று நினைக்கும் படைப்பாளர்கள் மத்தியில் கருணாநிதி தான் எழுதியவற்றைத் தானே நடைமுறைப்படுத்தினார். அதேபோல் வீட்டு வசதி மாற்று வாரியம் அமைத்தது, பேருந்துகளைப் பொதுவுடைமை ஆக்கியது என அவர் போட்ட விதைகள் அத்தனையும் வீரியமானவை. அந்த விதைகள் அனைத்தும் இன்று நிழல் கொடுத்துக்கொண்டிருக்கிறது.

தவிர்க்க இயலா ஆளுமை: தமிழகத்தில் பல்வேறு தரப்பினராலும் தவிர்க்க முடியாத ஆளுமையாகக் கருணாநிதியைக் கொண்டாடப் பல காரணங்கள் உள்ளது. அவற்றுள் மிக முக்கியமாகப் பார்க்கப்படுவது, உடல் ஊனமுற்றோர் என்ற வார்த்தையை மாற்றுத்திறனாளி எனவும், பல்வேறு இழிசொற்களால் அழைக்கப்பட்ட 3ஆம் பாலினத்தவர்களைத் திருநங்கை எனவும் அழைக்க வைத்தவர் கருணாநிதி.

இதில் என்ன உள்ளது வெறும் வார்த்தைகளை மாற்றுவதால் என்ன ஆகிவிடும் என பலரும் யோசிக்கலாம். இந்த சமூகத்தில் அந்த கொடிய வார்த்தைகளால் துன்பப்பட்டவர்களுக்கே இந்த மாற்றத்தின் அருமை புரியும்.

மேலும் ஒருபடி முன் சென்று, மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலையில் 3 சதவீதம் இட ஒதுக்கீடு, இந்தியாவிலேயே முதன் முறையாகத் திருநங்கைகளுக்கு நலவாரியத்தை உருவாக்கியது என்று பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தினார் கருணாநிதி.

பெண்களின் முன்னேற்றத்திற்கான பங்கு: பெண்களுக்குச் சொத்துகளில் சம உரிமை, அரசுப் பதவிகளில் பெண்களுக்கு 30 சதவிகித இட ஒதுக்கீடு, பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு என்று பெண்களின் முன்னேற்றத்திற்கான சட்டத்திருத்தங்களையும் கொண்டுவந்தார். இப்படியாகப் பலவற்றைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

தனது 95 ஆண்டுக்கால வாழ்வில், பொது வாழ்க்கைக்காக ஏறத்தாழ 81 ஆண்டுகள் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, தமிழ் மொழிக்காகவும், தமிழர்களுக்காகவும், தமிழ்நாட்டிற்காகவும் கருணாநிதி ஆற்றிய தொண்டு போற்றுதலுக்குரியது. இதற்காக அவர் தனது வாழ்நாள் முழுவதும் நடத்திய போராட்டங்களும் எண்ணற்றவை.

அந்த வகையில், ஒருவர் மரணமடைந்த பிறகு Rest in Peace (RIP) என ஆங்கிலத்தில் கூறுவது வழக்கம். ஆனால், கருணாநிதிக்கோ இந்த வாசகத்தை Rest in Protest என்றுதான் மாற்றிக் கூற வேண்டும் அந்த அளவிற்கு அவர் நடத்திய போராட்டங்கள் அதிகம். இப்பேர்ப்பட்ட அரசியல் ஆளுமையான கருணாநிதியின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: காவிரி வரலாறு தெரியாமல் பேசும் ஒன்றிய அமைச்சர் - துரைமுருகன் காட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.