சென்னை: தியாகராய நகரில், மாம்பலம் ரயில் நிலைய நடை மேம்பாலத்தை தியாகராய நகர் பேருந்து நிலையத்துடன் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் ஆகாய நடைமேம்பாலம் ஏப்ரல் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை தியாகராய நகரில் சென்னை சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் மாம்பலம் ரயில் நிலைய நடைமேம்பாலத்தை தியாகராய நகர் பேருந்து நிலையத்துடன் இணைக்கும் வகையில் நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நடை மேம்பாலம் ரூபாய் 28.45 கோடி மதிப்பில் 600 மீ. நீளம் மற்றும் 4மீ. அகலத்தில் நகரும் படிகட்டுகளுடன் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் எளிதாக அணுகும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு சிறப்பாகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நடை மேம்பாலம் பயன்பாட்டிற்கு வரும் போது சென்னை தியாகராய நகர் பேருந்து நிலையத்திலிருந்து, மாம்பலம் ரயில் நிலையத்திற்கு மிக எளிதாக செல்ல முடியும். இந்த நடை மேம்பாலம் ஏப்ரல் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும் என சென்னை மாநகராட்சி சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிகாரி பினாமிகள் மூலம் நிலம் அபகரிப்பு.. பாதுகாப்பு கோரி தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க உத்தரவு..