ETV Bharat / state

துபாய்க்கு கடத்த முயன்ற 32.5 லட்சம் வெளிநாட்டுப் பணம் பறிமுதல்- 3 பேர் கைது

author img

By

Published : Jan 12, 2021, 7:01 PM IST

சென்னை: துபாய்க்கு விமானம் மூலம் கடத்த முயன்ற ரூ.32.5 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்யப்பட்டு, கடத்தலில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் உட்பட 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

32.5 lakh foreign currency seized for smuggling to Dubai - 3 arrested  at Chennai airport
32.5 lakh foreign currency seized for smuggling to Dubai - 3 arrested at Chennai airport

இன்று அதிகாலை சென்னையிலிருந்து துபாய் செல்லும் ஃபிளை துபாய் சிறப்பு விமானத்தில் பயணிக்க இருந்தவர்களையும், அவர்களது உடமைகளையும் சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் பரிசோதனை செய்துவந்தனர்.

அப்போது, சென்னை, திருச்சி, ராமநாதபுரத்தை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 3 பேர் ஒரு குழுவாக சிறப்பு அனுமதி பெற்று துபாய் செல்ல வந்திருந்தனர். அவர்கள் மீது சந்தேகம் எழுந்ததையடுத்து, அவர்களை சுங்கத்துறையினர் முழுமையாக சோதனை செய்தனர். அதில், அவர்களுடைய உள்ளாடைகள் மற்றும் பைகளில் வைத்து கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர், சவுதி ரியால் மற்றும் யூரோ கரன்சிகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ரூ.32.5 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தினை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர், மூன்று பேரின் பயணத்தையும் ரத்து செய்து கைது செய்தனா்.

முன்னதாக, கடந்த சனிக்கிழமை துபாய் சிறப்பு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.1.04 கோடி மதிப்புடைய வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டு, கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நான்காவது நாளான இன்று மீண்டும் ரூ.32.5 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டு மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனா்.

மேலும் இந்த இரு சம்பவங்களில் பிடிபட்ட பணங்களும் ஒரே நபருடையதாகத்தான் இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது கணக்கில் வராத ஹவாலா பணமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. இதையடுத்து கைதான நபர்களிடம் சுங்கத்துறையினா் தீவிர விசாரணை நடத்துகின்றனா்.

இந்த பணத்தை இவர்களிடம் கொடுத்தது யார்? யாரிடம் பணத்தை கொடுக்க முயன்றனர்? என்று தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. அதோடு இந்த பணம் குறித்து வருமானவரித் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை துபாயிலிருந்து சென்னை வந்த சிறப்பு விமானத்தில் சென்னையை சேர்ந்த முகமது அஸ்மத்(25) என்ற பயணியின் உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த ரூ.11.5 லட்சம் மதிப்புடைய 220 கிராம் தங்கத்தையும் கைப்பற்றி பயணியையும் கைது செய்தனர்.

இதையும் படிங்க: சிறப்பு விமானத்தில் கடத்த முயன்ற ஹவாலா பணம் பறிமுதல்: 6 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.