ETV Bharat / state

தமிழ்நாடு அரசின் பயிற்சி நிறுவனத்தில் பயின்ற 19 பேர் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி

author img

By

Published : May 24, 2023, 2:36 PM IST

19 trainees from the Tamil Nadu Government Training Institute cleared the UPSC examination
தமிழ்நாடு அரசின் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற 19 பேர் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி

புதுதில்லியில் நடைபெற்ற ஆளுமைத் தேர்வில், இப்பயிற்சி மைய ஆர்வலர்களில், 19 ஆர்வலர்கள் வெற்றிப் பெற்றுள்ளனர் என்றும், இவர்களில் 8 பெண் ஆர்வலர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

சென்னை: தமிழ்நாடு அரசினால் நடத்தப்படும் அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற 19 பேர் குடிமைப்பணித் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்து உள்ளனர் .குடிமைப்பணிக்கு அகில இந்திய அளவில் நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் நேற்று (மே 23) வெளியிடப்பட்டன. அதில் தமிழ்நாட்டில் இருந்து 42 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நேற்று வெளியான இந்திய குடிமைப் பணித் தேர்வில் கொளத்தூரைச் சேர்ந்த செல்வி ஏ.எஸ். ஜீஜீ அவர்கள் தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு என் வாழ்த்துகளும் பாராட்டுகளும். கடந்த ஆண்டைவிட அதிகமான அளவில் தமிழ்நாட்டில் இருந்து மாணவர்கள் குடிமைப் பணிக்குத் தேர்வாகியுள்ளது எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது.

தேர்வு பெறாதவர்கள் துவண்டு போகாமல் தொடர்ந்து முயலுங்கள். அடுத்தடுத்த ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இருந்து இந்திய குடிமைப் பணி (UPSC) தேர்வில் வெற்றி பெறுவோர் எண்ணிக்கை உயர வேண்டுமென, தமிழ்நாடு அரசு, பல இலவச பயிற்சித் திட்டங்களை அறிவித்துள்ளது. அவற்றை அனைவரும் பயன்படுத்தி வெற்றி கண்டு நம் மாநிலத்திற்குப் பெருமை சேர்ப்பீர் என அதில் கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரும், அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனத்தின் பயிற்சித்துறை தலைவருமான இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசால் நிர்வகிக்கப்படும் அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தில், மத்தியத் தேர்வாணையத்தால் நடத்தப்படும். அகில இந்தியக் பணிகளுக்கான தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, மாதிரி ஆளுமைத் தேர்வுகளுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இனவாரியாகவும், கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த ஆர்வலர்கள் பயனடையும் வகையிலும் இப்பயிற்சி மையம் கடந்த 56 ஆண்டுகளாக திறம்பட செயல்பட்டு வருகிறது.

கடந்த 2022-ஆம் ஆண்டுக்கான குடிமைப்பணி முதன்மைத் தேர்வுக்கு முழுநேரமாக 76 ஆர்வலர்கள் இந்த மையத்தில் பயிற்சி பெற்றனர். முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற ஆர்வலர்களின் திறன்களை மேம்படுத்தவும், முனைப்புடன் ஆளுமைத் தேர்வினை எதிர்கொள்வதற்கும். ஜனவரி 2,3 ஆகிய நாட்களில் இப்பயிற்சி மையத்தில், ஆறு குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிலும், கூடுதல் தலைமைச் செயலாளர் நிலையில் ஓய்வுபெற்ற , பணியிலிருக்கும் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள். பேராசிரியர்கள், தேர்வர்களின் உடல் மொழி, விடையளிக்கும் முறை, தகவல் பரிமாற்றத் திறன் போன்றவற்றை கவனமுடன் பரிசீலனை செய்கினற உளவியல் நிபுணர்கள் போன்ற வல்லுநர்களைக் கொண்டு மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தப்பட்டது.

இம்மாதிரி ஆளுமைத்தேர்வில், 46 ஆர்வலர்கள் முனைப்புடன் பங்கேற்றனர். தற்போது, புதுதில்லியில் நடைபெற்ற ஆளுமைத் தேர்வில், இப்பயிற்சி மைய ஆர்வலர்களில், 19 ஆர்வலர்கள் வெற்றிப் பெற்றுள்ளனர் என்றும், இவர்களில் 8 பெண் ஆர்வலர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது என தெரிவித்து உள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரிகளின் வாரிசுகள் சாதனை: இந்திய குடிமைப்பணித் தேர்வில் மாணவி சத்ரியா கவின் (D. J. Chathriya Kavin) 169 ஆவது இடத்தை பிடித்துள்ளார். தமிழ்நாடு அரசு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசுச் செயலாளர் ஜகந்நாதன் மகள் சத்ரியா கவின் ஆவார்.
மாணவி ஈசானி (Eshani) 290 ஆவது இடத்தை பிடித்துள்ளார். தமிழ்நாடு அரசு தொழிலாளர் ஆணையரக அரசு முதன்மைச் செயலாளரும், ஆணையருமான அதுல் ஆனந்த்தின் மகள் ஆவார். மேலும், மாணவர் அரவிந்த் இராதாகிருஷ்ணன் (Arvind Radhakrishnan) 361ஆவது இடத்தை பிடித்துள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சி அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், ஆணையாளர் ராதாகிருஷ்ணன் மகன் அரவிந்த் ஆவார்.

இதையும் படிங்க: "ஜனநாயகத்தின் ஆன்மா பறிப்பு" நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழாவை புறக்கணித்த 19 கட்சிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.