ETV Bharat / state

2011ஆம் ஆண்டை போல் மீண்டும் சட்டமன்றத்தில் தேமுதிக-வை எதிர்க்கட்சியாக அமர வைப்பேன் - பிரேமலதா விஜயகாந்த் பேச்சு..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 14, 2023, 9:33 PM IST

விஜய்காந்த் முன்னிலையில் நிறைவேற்றப்பட்ட 18 தீர்மானங்கள்!
விஜய்காந்த் முன்னிலையில் நிறைவேற்றப்பட்ட 18 தீர்மானங்கள்!

சென்னையையடுத்த திருவேற்காட்டில் நடைபெற்ற தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது, தேர்தல் வியூகம் அமைப்பது உள்ளிட்ட முக்கிய பணிகளைக் கொண்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

விஜய்காந்த் முன்னிலையில் நிறைவேற்றப்பட்ட 18 தீர்மானங்கள்!

சென்னை: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 18வது தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் சென்னையை அடுத்த திருவேற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் நிறுவனரான விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் பங்கேற்றனர். பொதுக்குழு மேடைக்கு விஜயகாந்த் வருகை தந்தபோது தொண்டர்கள் ஆரவாரம் செய்து கரகோஷங்களை எழுப்பினர்.

பின்னர் கூட்டத்தின் முக்கிய நிகழ்வாகக் கட்சியின் பொருளாளராக இருந்த பிரேமலதா விஜயகாந்த் கட்சியின் பொதுச்செயலாளராக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் விஜயகாந்த் மருத்துவமனையிலிருந்த போது அவர் உடல் நலம்பெற வேண்டி பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் விவசாயிகள் மீது குண்டர்ச் சட்டம் போடப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்தும், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது, தேர்தல் வியூகம் அமைப்பது போன்ற 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், "எனக்குக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப்பதவி ஒன்றும் மேடையில் வைக்கப்பட்டுள்ள மலர் கிரீடம் கிடையாது, அதுவொரு முள் கிரீடம். உண்மையாகவே நான் பதற்றமாகவும், மன அழுத்தத்துடனும் இருக்கிறேன். மிகப் பெரிய பொறுப்பை அனைவரும் சேர்ந்து எனக்கு வழங்கி இருக்கிறீர்கள். இன்றைய உலகில், இனிமேல் நமது தலைவரைப் போல ஒருவர் பிறந்து வந்தால்கூட, தேமுதிக தலைவர் விஜயகாந்த்தைப் போன்ற மனிதரை, புனிதரை யாரும் பார்க்க முடியாது.

அவரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தக் கட்சி சாதாரண கட்சி இல்லை. அவருடைய லட்சியம், கொள்கைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் தேமுதிக. தலைவர் விஜயகாந்த், எதற்காக இந்தக் கட்சியை ஆரம்பித்தாரோ, அந்த லட்சியத்தைக் கொள்கையை எப்போது நாம் அடைவோம். தமிழகத்தில் தேமுதிக ஆட்சி அமைக்கும் நாள்தான், நமது தலைவரின் லட்சியமும் கொள்கையும் வென்றதற்கான அர்த்தம்.

நான் உங்களுக்காக 24 மணி நேரமும் உழைக்கத் தயாராக இருக்கிறேன். என்னோடு இணைந்து நீங்கள் அனைவரும் உண்மையாக, ஒற்றுமையாக உழைக்கத் தயாரா என்பதுதான் என்னுடைய கேள்வி. காரணம், பலர் என் முன்னால் ஒன்று பேசுகிறீர்கள். நான் இல்லாதபோது பலர் வேறு ஒன்று பேசுகிறீர்கள். யார் யார் என் முதுகுக்குப் பின்னால் என்ன பேசுகிறீர்கள் என்று எல்லாம் எனக்குத் தெரியும். அது தெரிந்தும், நான் அமைதி காப்பது தலைவர் விஜயகாந்த் ஆரம்பித்த இந்தக் கட்சியைக் கரை சேர்க்க வேண்டும் என்ற உறுதி மட்டும்தான்.

உங்கள் அனைவரையும் மிகப் பெரிய பதவிகளில் அமர வைத்துப் பெருமைப்படும் நாள்தான், நீங்கள் எனக்குக் கொடுத்திருக்கும் பொதுச் செயலாளர் பதவிக்குக் கிடைக்கப்போகும் பெருமை. எப்படி, 2011ல், எதிர்க்கட்சித் தலைவராகத் தலைவருடன் 29 சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்துக்குச் சென்றீர்களோ, அந்த வரலாற்றை மீண்டும் திரும்ப வரவைப்பேன். அதற்காக உங்களை நான் கேட்டுக் கொள்வது எல்லாம் உண்மையாக, நேர்மையாக தேமுதிகவுக்காக உழைக்கக் கூடியவர்களாக நீங்கள் இருக்க வேண்டும்" என்று பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

  • தன் முழு அஸ்திரத்தையும் வழங்கி கழக வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு உழைத்த தேமுதிக மாவீரர்கள், முன்னோடிகள் இவர்களின் மரணச்செய்தி கேட்டு நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மற்றும் கழக நிர்வாகிகள் மனது கலக்கமடைந்துள்ளனர். தேமுதிக தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அவர்களது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறது.
  • தேமுதிகவின் நிறுவனத்தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற்று தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமான முதலமைச்சராக வளம் வரவேண்டி பிரார்த்தனை செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இந்த பொதுக்குழு தனது முழுமனதான நன்றியைத் தெரிவிப்பதோடு, அந்த பிரார்த்தனையில் தன்னையும் இணைத்துக்கொள்கிறது.
  • சமீபத்தில் தமிழ்நாட்டின் தலைநகரையே புரட்டிப் போட்ட மிக்ஜாம் புயலால் தமிழ்நாடு பெரிய அளவில் பாதிப்படைந்திருக்கிறது. அதனால் தமிழ்நாடு மக்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். மிக்ஜாம் புயலினால் கஷ்ட, நஷ்டங்களில் தேமுதிக என்றைக்குமே துணை நிற்கும் என்ற வாக்குறுதியோடு, பாதித்த மக்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூபாய் 15 ஆயிரமும் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூபாய் 10 லட்சமும் உடனடியாக வழங்க வேண்டும் என தேமுதிக பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
  • இயற்கை பேரிடர் என்பது அசாதாரணமானது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களை முழுதாக பாதுகாக்கின்ற கடமை அதற்கு உள்ளது. எதோ தேங்கி நிற்கின்ற தண்ணீரில் நின்று காட்சி தருவதாலும், இடைக்கால நிவாரணம் தருவதாலும் மட்டுமே இயற்கை பேரிடர் இதிலிருந்து மக்களை காப்பாற்ற முடியாது. தற்போதைய கஷ்டங்களிலிருந்து மக்களை விடுவிக்க திமுக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் எத்தனை பேரிடர் வந்தாலும் மக்களுடைய அன்றாட வாழ்க்கை பாதிக்காத வண்ணம் தண்ணீர் தேங்காமல் தொலைநோக்கு பார்வையோடு நிறைவான நிரந்தர வடிவால் அமைத்துச் செயல்படச் சரியான திட்டமிட்டு உடனடியாக செயல்பட தேமுதிக பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
  • நிரந்தரமான தீர்வுக்கு சில எதிர்பாராத விளைவுகள் ஏற்பட்டாலும், மக்களை இதிலிருந்து பாதுகாத்திட உடனடியாக செயல்பட வேண்டுமென தேமுதிக பொதுக்குழு வற்புறுத்துகிறது. அதன் முன்னோடியாக முதல் கட்டமாக வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கு அரசே இன்சூரன்ஸ் செலுத்தி, "இயற்கை பேரிடர் மக்கள் பாதுகாப்பு இன்சூரன்ஸ் திட்டம்" ஏற்படுத்தி மக்களைப் பாதுகாத்திடத் தமிழக அரசை இந்த பொதுக்குழு வலியுறுத்துகிறது.
  • ஒரு அங்குல நிலம்கூட மாற்றுப்பணிக்காக அரசு எழுதிக்கொள்ள தேமுதிக அனுமதிக்காது. அதற்காக பல்வேறு போராட்டங்களை, பல காலங்களில் தேமுதிக முதன்மை கட்சியாக முன்னோடியாக நடத்தி இருக்கிறது. அந்த வகையில் நெய்வேலி நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக விவசாயிகளுக்கு மட்டுமின்றி, மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகின்ற நெய்வேலி விளை மண்ணை கையகப்படுத்த தேமுதிக அனுமதிக்காமல் பிரேமலதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தி, திமுக அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றதற்கு பிரேமலதாவை பாராட்டுவதோடு, இனிவரும் காலங்களில் அரசு மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டால் தேமுதிக மிகப்பெரிய போராட்டத்தினை நடத்த வேண்டி வரும் என இந்த பொதுக்குழு திமுக அரசை எச்சரிக்கிறது.
  • மகளிர் உரிமத்தொகை ரூபாய் ஆயிரத்தைத் தகுதியான மகளிருக்கு மட்டும் தான் என்ற திமுகவின் அறிவிப்பு, மகளிர்களைப் பாகுபடுத்திப் பிரித்துப் பார்க்க தேமுதிக ஒருபோதும் அனுமதிக்காது. எனவே மகளிர் குடும்பத்தலைவி உரிமைத் தொகையான ரூபாய் ஆயிரத்தை உடனடியாக அனைவருக்கும் வழங்க திமுக அரசை இந்த பொதுக்குழு வலியுறுத்துகிறது.
  • காவிரியின் உபரி நீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்கின்ற வகையில், உபரி நீரை நதியின் வழியாக மற்றும் கால்வாய்களை அமைத்து ஏரிகளில் நிரப்ப பல்வேறு பாசனத்திற்கு வழிவகுத்திடவும், எடுத்துக்காட்டாகக் காவேரி தமிழ்நாட்டில் முதன் முதலாக நுழைகின்ற மாவட்டமான தருமபுரிக்கும் மற்றும் சேலம் மாவட்டத்திற்கும் எவ்வகையிலும் பயன்படவில்லை. உபரி நீரைக் கால்வாய் அமைத்து ஏரிகளை நிரப்பினால் தருமபுரி மற்றொரு நெற்களஞ்சியமாக விளங்கும் என்பதைச் சுட்டிக்காட்டி, வீணாகக் கடலில் உபரிநீர் கலப்பதைத் தடுத்திட, திட்டங்கள் அமைத்திட தேமுதிக பொதுக்குழு வற்புறுத்துகிறது.
  • தன்னுயிரை மதிக்காமல் தன்பிணி எதிர்நோக்காமல், பிற உயிர்காக்க தன்பணி சிறப்பாகச் செய்திட கொரோன கால பணியாளர்களை தேமுதிக பொதுக்குழு பாராட்டுவதோடு, நாளைய வேலைவாய்ப்பில் கொரோனா பணியாளர்களுக்கு முன்னுரிமை தருமாறு இந்த பொதுக்குழு வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
  • நாளைய மண்ணில் அறிவியல் விஞ்ஞானிகளை உருவாக்குகின்ற வகையில், தம் பணிகளைச் சிறப்பாகச் செய்கின்ற ஆசிரியர்களை தேமுதிக பாராட்டுகிறது. அவர்கள் பணிகளை அங்கீகரிக்கின்ற வகையிலும், சிறப்பான பாராட்டை நல்குகின்ற வகையிலும், ஆசிரியர் போராட்டத்தினை முடிவு காணுகின்ற வகையில் அவர்கள் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றிட இந்த பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
  • வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் தலைமையில் கழக தொண்டர்கள் அனைவரும் ஒருமையுடனும், முழு வேகத்துடனும் பணியாற்றிட இந்த பொதுக்குழு உறுதி கொள்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி அமைப்பது பற்றியும், தேர்தல் யுத்திகளை வழிவகுக்கவும் தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த்க்கு முழு அதிகாரம் வழங்கி தேமுதிக பொதுக்குழு இத்தீர்மானத்தை நிறைவேற்றுகிறது" உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம்.. பொதுக்குழு கூட்டத்தில் 18 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.